Sunday, 11 February 2018
பாரதி: மரபும் திரிபும் -1
ஆசிரியர் முன்னுரை:
ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.
“பாரதி பெண் உரிமைக்கும் விடுதலைக்கும், தலித்துகளுக்கும், பார்ப்பனரல்லாதவர்களுக்கும்,
தமிழ் மொழிக்கும், பொதுஉடமைக்கும் விரோதி…. விரோதி….. விரோதி..
மொத்தத்தில் அவர் எழுதியது, பின்பற்றியது எல்லாமே ஒருபுள்ளியில்தான். அது அவருக்குள் இருந்த பார்ப்பனீயமே. அந்த ஒற்றைப் புள்ளியில்தான் அவருடைய கவிதை, கதை, கட்டுரைகள் அமைந்துள்ளன. பார்ப்பனீய சிந்தனையிலேயே அவர் வாழ்ந்தார்; இறந்தார்”
– இத்தகைய விஷமத் தனமான, பொய்மை ஊற்றெடுக்கும் கட்டுக் கதைகளை அந்தப் புத்தகத்தில் அவர் உளறி இருக்கிறார். இந்த புத்தகம் பாரதியாரை முழுமையாகப் படித்தோ அல்லது ஆய்வு செய்தோ நடுநிலைமையுடன் எழுதப்பட்டது அல்ல. பாரதியின் மீது அவதூறை மட்டுமே வீசும் நோக்கில் எழுதப்பட்டதுதான் இந்த நூல். ஏனென்றால் அவர் ஒரு பார்ப்பனர். இது ஒன்று போதும் மதிமாறனுக்கு, பாரதியை வசைபாட!
மதிமாறனின் இந்தப் புத்தகத்துக்கு மட்டுமே பதில் எழுதப்படுவது அல்ல இந்தக் கட்டுரைகளின் நோக்கம். நாமும் பாரதியை அறியாமல் இருக்கிறோம். புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். நவீன தமிழ்ச் சமுதாயத்தின் விடிவெள்ளியாக வந்துதித்த பாரதி என்ற மகத்தான ஆளுமையின் முழு பரிமாணத்தையும் உணராமல் இருக்கிறோம். அதை உணர்த்துவதும் இக்கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம்.
அந்த முழுப் பரிமாணத்தையும் இந்த கட்டுரைத் தொடரில் உண்மையில் எழுத முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் என்னால் முடிந்த அளவு எல்லாவற்றையும் தொட்டுவிட ஆசைதான்.
பார்ப்போம்.
-0-
“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைப் பற்றி பாரதி பாடாதது ஏன்?”
‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ என்ற நூலில் ‘அப்படியென்ன பாரதியின் பொல்லாத காலம்’ என்ற தலைப்பில் வே.மதிமாறன் இப்படிக் குறிப்பிடுகிறார்:
‘‘பெண்கல்வி குறித்து, வீரவேஷம் கட்டிப் பாட்டுப் பாடிய பாரதி மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல சிரமங்களுக்கிடையே படித்து, 1912-இல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. அதன்பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி.
வேத, புராணக் காலத்துப் பெண்களின் புகழ், வெளிநாட்டுப் பெண்களின் புகழ் குறித்தெல்லாம் விரல் நுனியில் தகவல் வைத்திருந்த பாரதிக்கு, தான் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்த, ஒரு தமிழச்சியின் சாதனை தெரியாமல் போனது ஏன்? இதுதான் ‘செலக்டிவ் அம்னீஷியாவோ?’
ஆம். முத்துலட்சுமி அம்மையார், பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்.’’
இப்படி வே.மதிமாறன் பாரதி மீது விமர்சனம் வைத்திருக்கிறார்.
-0-
ஜெமினிகணேசனைத் தெரியுமா?
இப்படிக் கேட்டால் சிலருக்குத் தெரியாது.
காதல் மன்னன் நடிகர் ஜெமினிகணேசனைத் தெரியுமா? அப்போதுதான் எல்லோருக்கும் தெரியும். அவரின் இளம்பருவம் குறித்து சின்ன தகவல்.
ஜெமினியின் சின்னதாத்தா நாராணயசாமி ஐயர் வசதி படைத்தவராக இருந்ததால், ஜெமினியை ராஜகுமாரனைப் போல குதிரைமீது அமர வைத்து பள்ளிக்கூடத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அந்த பள்ளியின் நிர்வாகி பாலையா என்பவர் ஜெமினிகணேசனின் வலது கையைப் பிடித்து வெள்ளித்தட்டில் தங்கக் காசால் ‘ஓம்’ என்று எழுத வைத்தார். அவ்வளவு செல்வச் செழிப்புள்ள குடும்பம் நாராயணசாமி ஐயர் குடும்பம்.
நாராயணசாமி ஐயர் ‘ஸ்மார்த்தா’ வகுப்பைச் சேர்ந்தவர், Mulukanadu subcaste. புதுக்கோட்டை மன்னரிடம் வேலை பார்த்தவர். தனிச் செல்வாக்குடன் வலம் வந்தவர். இவரது குடும்பம் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பெரும் மதிப்பிற்குரிய குடும்பமாக திகழ்ந்தது.
நாராயணசாமி ஐயராக இருந்தாலும் இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரம்மாளை மணந்தார். ஆம். அக்காலத்தில்- கடுமையான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்ட காலத்தில் கலப்புத் திருமணம் செய்தவர் ஒரு பிராமணர். பெண்களை கல்விக்கு அனுப்பக்கூடாது என்ற சம்பிரதாயத்தை அப்போது உடைத்தவரும் இவரே. அதுவும் ஒரு பிராமணர்.
எந்தப் பெண்ணை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார்?
‘‘மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த – பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட- ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்’’ என்று வே.மதிமாறனால் குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணைத் தான் – டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைத்தான்.
ஆம். முத்துலட்சுமி அம்மையார் நாராயணசாமி ஐயரின் மகள். முத்துலட்சுமி அம்மையார் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது இதன் மூலம் நாம் அறியலாம். அவர் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பின்பு எப்படி முத்துலட்சுமி அம்மையார் ‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்’ என்று யாரும் மதிமாறனிடம் கேட்டு விடாதீர்கள்! அப்படி நீங்கள் கேட்டால் ‘அதிகப் பிரசங்கி’ என்று பட்டம் கொடுத்துவிடுவார்.
முத்துலட்சுமி அம்மையார் பிரம்மஞான (தியோசோபிகல் சொசைட்டி) சபையில் மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சடங்குகளைத் தவிர்த்து 1914-இல் டாக்டர் சுந்தர ரெட்டியைத் திருமணம் செய்து கொண்டார். அதனாலேயே அவர் முத்துலட்சுமி ரெட்டி என்று அழைக்கப்பட்டார். ரெட்டி வகுப்பும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தது அல்ல.
சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபிறகு பெண்களுக்கு என்று தங்க தனியாக விடுதி அப்போது இல்லை. அந்தச் ‘சிரமத்தைப்’ போக்கியவர் பிராமணரான பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயரும் அவரின் மனைவியும்தான். அவர்கள் குடியிருந்த வீட்டின் அருகிலேயே தங்க வைத்து கவனித்துக்கொண்டனர்.
இனி விஷயத்துக்கு வருவோம்.
பாரதி 1912-இல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடவில்லையே ஏன்?
பாரதி 1908-ஆம் ஆண்டே புதுச்சேரிக்குப் போய்விட்டார். 1912-இல் அவர் புதுச்சேரியில் வாழ்ந்துகொண்டிருந்தார். 1908 முதல் 1912 ஆண்டு முடிய பாரதியின் சூழ்நிலையைப் பார்ப்போம்.
சென்னையிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகை 1908 செப்டம்பர் 5-ஆம்தேதிவரை வெளிவந்தது. புதுச்சேரியிலிருந்து அக்டோபர் 10-ஆம்தேதி முதல் மீண்டும் வெளிவரத்தொடங்கியது. 1910 மார்ச் மாதம் ‘இந்தியா’ நின்றுபோனது.
1910 ஜனவரி முதலாக பாரதி சொந்தமாக நடத்திய உயர்தர மாதப் பத்திரிகை ‘கர்மயோகி’ அதுவும் சில இதழ்களோடு 1910-லேயே நின்றுபோனது.
‘விஜயா’ பத்திரிகை 1909, கிருஷ்ணஜெயந்தி முதல் வெளிவந்தது. 1910 ஏப்ரலுக்குப் பிறகு விஜயாவும் நின்றுபோனது.
சூரியோதயம், பாலபாரதி கூட 1910-க்குள்ளேயே நின்றுவிட்டது.
1910ம் வருஷம் முடிவதற்குள் தமக்கென ஒரு பத்திரிகை இல்லாத சங்கடமான நிலைமையை அடைந்துவிட்டார் பாரதி.
ஆம். புதுச்சேரிக்கு வந்த இரண்டாண்டுகளில் பாரதியின் பத்திரிகை முயற்சிகளெல்லாம் நின்றுபோயின. அதன்பின்பு, புதுவையில் இருந்த காலம்வரை அவர்வேறு பத்திரிகைகள் ஆரம்பிக்கவில்லை. தொடர்ந்து சமகால அரசியல் போக்குகளை எழுத முடியாத நிலை 1913 வரை பாரதிக்கு ஏற்பட்டது.
1910-ஆம் வருஷத்துக்குப் பிறகு பாரதி பத்திரிகை விவகாரங்களை மறந்து, புத்தகமாக வெளியாகக்கூடிய விஷயங்களை எழுதுவதில் முனைந்தார்.
1910 நவம்பரில் ‘மாதா மணிவாசகம்’ என்ற பெயரில் தமது மூன்றாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டார். புதிய ஆத்திச்சூடி சிறுபிரசுரமாக 1914-இல் வெளியாயிற்று. அதே ஆண்டு பாரதியின் ஆங்கிலத் துண்டு பிரசுரம் ‘பொன்வால் நரி’ சென்னையில் வந்தது.
1912-ஆம் வருடம் அவருக்கு முக்கியமான காலம். அந்த ஒரே ஆண்டில் புகழ்பெற்ற சில நூல்களை எழுதி முடித்தார். பகவத்கீதை மொழிபெயர்ப்பு, கண்ணன்பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் முதலிய நான்கு பெரிய நூல்களும் 1912ல் உருப்பெற்றன. 1912-இல் எழுதப்பெற்ற கண்ணன்பாட்டு 1917-இல்தான் வெளியாயிற்று. பாஞ்சாலி சபதம் முதல்பாகம் 1912-இல் வெளியாயிற்று. இரண்டாம் பாகம் பாரதி காலமான பிறகு 1924-இல் வெளியாயிற்று. குயில்பாட்டு 1923-இல் வெளியாயிற்று.
இதுதான் 1910 முதல் 1912வரை அவர் எழுதிய எழுத்து என்று கூறிவிடலாம்.
அதன்பிறகுதான் சுப்பிரமணிய சிவா 1913 ஏப்ரல் முதலாக ‘ஞானபானு’ என்ற மாதப் பத்திரிகை ஆரம்பித்தார். இது மூன்று வருடங்கள் நடந்தது. மறுபடியும் 1913-இல்தான் ஞானபானுவில் பாரதி எழுதியுள்ளார்.
இம்மாதிரி ஒருசில எழுத்துகளே புத்தக வடிவில் வந்ததால் பாரதியை மறுபடியும் சுதேசமித்திரனில் எழுதும்படி புதுவை நண்பர்கள் சொன்னார்கள். 1904-இல் ஆரம்பமான சுதேசமித்திரன் தொடர்பு 1906-இல் நின்று போயிருந்தது. மீண்டும் 1915 ஜூன் மாதம்தான் மீண்டும் பாரதி மித்திரனில் எழுத ஆரம்பித்தார்.
ஒரு சம்பவம் நடந்த உடனே எழுதினால்தான் உண்டு. அதன்பிறகு அது பழைய சம்பவங்களில் ஒன்றாகிவிடும். 1912-இல் தனக்கான பத்திரிகை ஒன்றையும் கொண்டிராத பாரதி, முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி எழுதாதது பாரதியின் குற்றமல்ல. அது ஒரு தற்செயலான நிகழ்வு. தவிரவும் அந்தச் செய்தி பாரதிக்குத் தெரிந்திருந்ததா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரும் பௌத்த அறிஞருமான க.அயோத்திதாசர் தமிழன்இதழை 1914 வரை நடத்திக் கொண்டு இருந்தார். அதுவும் 1912-இல் சென்னையில்தான் நடத்திக்கொண்டு இருந்தார். மதிமாறன் கூறுவதுபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றியோ அவரின் சாதனைப் பற்றியோ ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த க.அயோத்திதாசர் தன்னுடைய தமிழன் இதழில் ஏன் எழுதவில்லை? இதை ‘செலக்டிவ் அம்னீஷியா’ என்று சொல்லலாமா? அது காரணமாக இருக்க முடியாது. அந்தச் செய்தி அயோத்திதாசருக்குத் தெரிந்திருந்ததா என்பதைத்தான் ஆராய வேண்டும்.
மற்றொரு செய்தியையும் பார்ப்போம்.
1912-இல் ‘மெட்ராஸ் யுனைட்டெட் லீக்’ என்ற அமைப்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் இதுவே ‘திராவிடச் சங்கம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பிற்கு வழிகாட்டியாகவும் துணையாகவும் இருந்தவர் நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான சி.நடேசனார். இவரே திராவிட இயக்கத்தின் நிறுவனர்.
‘‘ஆண்டுதோறும் பல்கலைக்கழகப் பட்டம் பெறும் பிராமணரல்லாத இளம் பட்டதாரிகளுக்கு வரவேற்பு நடத்தி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி, அவர்களது சமுதாயக் கடமையை நினைவுறுத்துவதும் அந்த அமைப்பின் பணிகளில் ஒன்றாக இருந்தது’’ என்று முரசொலி மாறன் ‘திராவிட இயக்க வரலாறு-தொகுதி 1’ என்ற நூலில் கூறியுள்ளார்.
அப்படியானால் மதிமாறன் கூறுவதுபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றியோ அவரின் சாதனைப் பற்றியோ ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட- அதுவும் ஊக்குவித்தலை கடமையாகக்கொண்ட- ‘மெட்ராஸ் யுனைட்டெட் லீக்’ ஏன் பாராட்டி ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை? ஏன் முத்துலட்சுமி அம்மையாரை அழைத்து பாராட்டுவிழா நடத்தவில்லை? இதுவும் ஒருவகை ‘செலக்டிவ் அம்னீஷியாவோ?’
பெண்ணியச் சிந்தனையாளரான(?) ஈவெரா அந்தக் காலகட்டத்தில் பலசரக்குக் கடை நடத்திக்கொண்டிருந்ததாலும் இந்த விஷயத்தில் அவர் அப்போது ஞானசூன்யம் என்பதாலும் அப்போது ஏன் ‘ஈவேரா முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை?’ என்று கோமாளித்தனமாக நாம் கேட்போமானால் நாம் மதிமாறனுக்கு அண்ணன் ஆகிவிடுவோம். அதனால் அதுபோன்ற மூளைவீங்கிக் கேள்விகளைக் கேட்காமல் நீதிக்கட்சியைப் போற்றிப் பாராட்டுகின்ற மதிமாறனுக்கு இன்னுமொரு செய்தியையும் சொல்லலாம்.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி மசோதாவைக் கொண்டு வந்தபோது பிராமணரான சத்தியமூர்த்தி மட்டும் எதிர்க்கவில்லை. மதிமாறன் போற்றிப் பாராட்டுகின்ற நீதிக்கட்சியினரும் முதலில் ஆதரிக்க மறுத்தனர்; அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தனர் என்பதும் பிறகு மக்களுடைய ஆதரவு அம்மையாருக்கு இருப்பதானாலேயே மசோதாவுக்கு ஆதரவு கொடுத்தனர் என்பதையும் வரலாறு கூறுகிறது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும் – கோ.கேசவன், பக்.87)
அதுமட்டுமல்ல, நீதிக்கட்சிப் பிரமுகரான ஏ.பி.பாத்ரோ இளம்வயது விவாக விலக்கு மசோதாவை எதிர்த்தார் என்பதையும் வரலாறு கூறுகிறது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும் – கோ.கேசவன், பக்.87)
விவாகரத்தைச் சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிக்கட்சி கண்டித்தது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும் – கோ.கேசவன், பக்.87)
மதிமாறன், தான் போற்றுகின்ற நீதிக்கட்சி பெண்ணிய சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்ததைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டுமா என்ன?
இதற்கெல்லாம் மதிமாறன் என்ன பதில் சொல்லப் போகிறார்?
(தொடரும்…)
Subscribe to:
Post Comments (Atom)
ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)
Srimad-Bhagavatam 1 Srimad-Bhagavatam 2 Srimad-Bhagavatam 3 Srimad-Bhagavatam 4 Srimad-Bhagavatam 5 Srimad-Bhagavatam 6 Srimad...
-
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பா...
-
ஈவேரா-வின் தோள்சீலை போராட்டமும் , அந்நிய ஆபிரகாமிய நச்சு சக்திகளின் மதமாற்ற செயல்திட்டமும் தன் முன்னோர்களை இழிவானர்கள்னு சொல்லி, மதம்மாத்த...
-
ஆரியம் , ஆரியன் - ங்கிறதுலாம்... தமிழனுக்கு அந்நியமா.? திருப்புகழ்:- தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர ...... முதிராத தோகையர் கவர...
No comments:
Post a Comment