இந்து மதம் எங்கே போகிறது? -
இது நூலா? ஃபூலா?
நக்கீரன் வாரம் இருமுறை இதழில் வெளிவந்த “இந்து மதம் எங்கே போகிறது” தொடர் கட்டுரை அக்னிஹோத்திரம் தாதாசாரியார் அவர்களால் எழுதப்பட்டது. இந்த தொடர் அவரது கருத்துக்களுடன் நக்கீரனில் அப்போது பணியாற்றிய துணை ஆசிரியர் ஒருவரால்,பதிவுசெய்யப்பட்டது. கருத்து ராமானுஜத்தினுடயது எழுத்து வடிவம் துணை ஆசிரியருடையது.
ஸ்ரீ வைஷ்ணவ கலாசார பாதுகாப்பு இயக்கம் என்கிற அமைப்பு தூமணிமாடம் என்னும் ஸ்ரீவைஷ்ணவ விழிப்புணர்வு பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீமான் T. வரதராஜன் ஸ்வாமியால் அக்டோபர் மாதம் 2005 இல் ஆரம்பிக்கப்பட்டது அதனை ஸ்ரீ.உவே.மதி ஸ்ரீநிவாசன் அவர்கள் தூமணிமாடம் சுவாமி திருமாளிகையில் தொடங்கிவைத்தார். அந்த இயக்கம் தொடங்கிய மறுதினம் அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தூமணிமாடம் ஸ்வாமி தலைமையில் மூவர் அக்னி கோத்திரம் தாதாசாரியாரினை மேற்கு மாம்பலத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தோம் அதன் விபரத்தினை ஸ்ரீரங்கத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் பாஞ்சஜன்யம் நவம்பர் 2005 இதழ் பக்கம் 12-15இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செவிப்புலன் செயலற்று, காலில் ஏற்பட்ட ஊனத்தில் இருந்த அஹோவை அவரது இல்லத்தில் சந்தித்து உரத்தகுரலில் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனதை புண்படுத்தும் விதமாக தாங்கள் நக்கீரனில் எழுதுவது நியாயமா? என கேள்வி எழுப்பினோம்.
நம் கேள்வியை புரிந்து கொண்ட அஹோ நமது கேள்விக்கு தொடர்பில்லாத விஷயங்களை பேசிவிட்டு பின் நக்கீரனில் வெளியான ஸ்ரீ குணரத்தின கோஸம், திருப்பதி பெருமாள் பற்றிய கருத்துக்கள் தன்னுடயதில்லை என மறுத்தார். மேலும், நக்கீரன் பத்திரிகை தன் பெயரில் இந்த தொடரினை எழுதியதாக குறிப்பிட்டார்.
ஹிந்துமதம் பற்றியும், அரசியல் சட்டம் பற்றி மட்டும்தான் தான் கருத்து கூறியதாக சொன்னார். ஆனால் அஹோ உறங்க பயன்படுத்தும் கட்டில் கீழே இருந்த அவர் தொடர் வந்துள்ள நக்கீரன் இதழ்களை எடுத்து காட்டினேன் . என் கைகளிலிருந்து பிடுங்கி கோபத்துடன் எறிந்தார் அஹோ.
அப்போது அங்கு வந்த அவரது மகன் வழிபேரன் ஆஸ்திரேலியாவில் விஞ்ஞானியாக உள்ளவர் “நக்கீரனுக்கு நீ எழுதுவதில்லை என்றால் இங்கு வரும் நக்கீரன் துணை ஆசிரியருக்கு ஏன் பேட்டி கொடுக்கிறாய் என்றார். நக்கீரனில் தன் பெயரினை வெளியிடக்கூடாது என தான் நோட்டீஸ் அனுப்பிஉள்ளதாக கோபத்துடன் பதில் அளித்தார் அஹோ.
எங்களது சந்தேகமாக தங்களிடம் சில கேள்விகள் என கேள்வியை முன் வைத்தோம் திருப்பதியில் இருப்பது திருமால் தானே என்றேன்? அதற்கு அஹோ “பெருமாள் என்றால் நாலு கை இருக்கவேண்டும்“,அது பெருமாள் கோவில்தான், ஆனால் அங்கு இருப்பது பெருமாள் அல்ல என்று குழப்பினார்.
சைவரோ, வைஷ்ணவரோ அல்லாத சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் அங்கு இருப்பது பெருமாள்தான் என குறிபிட்டிருப்பதை குறிப்பிட்டேன். “உனக்கு வயசு பத்தாது சும்மா இரு” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து மலையேறி பிராமணர்கள் வந்ததாகவும் பெண்கள் மலையேறி வர இயலவில்லை என்றும் இங்கு வந்து பிராமணர்கள் அல்லாத தமிழ் பெண்களை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினார். இதைகேட்ட அவரது மகன் (இந்தியன் வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவர்) அப்படியானால் இவரது தாயாரும், மனைவியும் பிராமணர் இல்லயா என கேட்கச்சொன்னார், கோபத்தின் உச்சத்துக்கே சென்ற அஹோ அவரது மகனிடம் கோபத்துடன் ”வெளியே போ” என சப்தமிட்டு... எங்களிடம் ஏன் நீங்கள் நக்கீரன் பத்திரிகையை படிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்...
நம் மனதில் எழும் கேள்வி இதுதான் நக்கீரன் நடத்திவரும் ஓம் சரவண பவ என்னும் ஆன்மீக பத்திரிகையில் இத்தொடரை ஏன் வெளியிடவில்லை?
அஹோ இதற்கு முன்னரே குடந்தை சாரங்கபாணி கோயில் நிதியில் 1973 இல் “வரலாற்றில் பிறந்த வைணவம்“ என்னும் நூலை எழுதியிருந்தார். பொதுவாக அஹோ நூல்களில் எந்த ஆதாரமும் இருக்காது அவர் சொல்லும் விஷயங்கள் எந்த நூலில் உள்ளது என்றோ எந்த ஸ்லோகத்தில் வருகிறது என்றோ குறிப்பிடமாட்டார். ஆதாரமில்லாது பொய்களை அள்ளிவிடுவார் பார்பவர்கள் இவரது வைதீக தோற்றத்தினை கண்டும் இவர் வேதம் அறிந்தவர் என்பதாலும் இவர் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்கும் என நம்பிவிடுகின்றனர்.
ஹிந்துமுன்னணி தலைவர் ஸ்ரீ ராமகோபாலன் ஜி அவர்கள் பலவருடம் முன் ஒருமுறை கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் அஹோவை கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து ஸேவித்தாராம் உடன் இருந்த சங்க அன்பர் ஒருவர் சொன்னது. இவரது வைதீக தோற்றத்தினை கண்டு பலர் நம்பிவிட்டனர். நாத்திக வியாபாரத்துக்கு அதை பயன்படுத்திக்கொண்டனர்.
மறைந்த எழுத்தாளர் ஸ்ரீ ரா.கி. ரங்கராஜன் அவர்கள் அஹோ வை நேரில் சந்தித்து தொடருக்காக கடுமையாக பேசியதாக பத்திரிகை நண்பர் கூறினார். அதன் பிறகு அஹோ தொடர்ந்து எழுத தயங்கியதாகவும் பின் நக்கீரன் ஆசிரியர் தைரியப்படுத்தியதாகவும் செவி வழிசெய்தி.
திருவல்லிக்கேணியிலிருந்து வெளிவரும் கீதாசாரியன் வைஷ்ணவ மாத இதழில் 2005 செப்டெம்பர் முதல் டிசம்பர் வரை மறுப்பாக நாலு இதழ்களில் ஸ்ரீ. டி.எ. ஜோசப் அவர்கள் எழுதிவந்தார். வரலாற்றில் பிறந்த வைணவத்திற்கு திருச்சி புத்தூர் ஸ்ரீவைஷ்ணவ ஸூதர்சனம் ஆசிரியர் அப்போது பல வைஷ்ணவ அறிஞர்களைக்கொண்டு 1973களிலேயே மறுப்பு கட்டுரைகளை தொகுத்து “அக்னிஹோத்திரியும் வைஷ்ணவமும்” என்னும் நூலை உருவாக்கினார். (ஸ்ரீ வைஷ்ணவ ஸூதர்சனம்,3B, புத்தூர் அக்ரஹாரம், புத்தூர் திருச்சி -17)
ஹிந்து என்றால் திருடன் என்ற கருணாநிதியின் கருத்தினை அஹோ ஆதரித்து ஜூனியர் விகடனில் பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியே அஹோவினை நக்கீரன் இழுக்க காரணம்.
அஹோவின் இந்த தொடர் நக்கீரனில் வெளிவந்தபோது தொடரை எழுத்துவடிவில் வடித்த அந்த இதழின் துணையாசிரியரின் சகோதரர் திருக்கண்ணங்குடி ஸ்ரீமான் .ஸத்திய நாராயணன் ஸ்வாமி அவர்கள் நக்கீரன் ஆசிரியரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது “ஆதாரம் இல்லாத தகவல்களை எழுதுகிறாரே“ என கேட்டபோது நிறையபேர் அப்படித்தான் சொல்கிறார்கள் என்றும் விரைவில் தொடர் நின்றுவிடும் என்றும் நக்கீரன் ஆசிரியர் கூறினாராம்.
இந்த தொடர் முடிந்த பிறகு புத்தகமானது தலைப்பு மற்றும் அதன் அட்டையில் இருக்கும் வைதீக தோற்றம் உள்ள அஹோ புகைப்படம் போன்றவை ஆன்மீக புத்தகம் போல எல்லா வாசகர்களுக்கும் தெரிகிறது மேலும் பலரை வாங்கவைக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் துறவி ஒருவர் ஆன்மீக புத்தகம் என எண்ணி படித்து ஏமாற்றம் அடைந்ததை ஆய்வாளர் திரு பெ.சு.மணி அவர்கள் தெரிவித்தார்.
அஹோவின் நூல் திராவிட இயக்கங்களாலும், திருவையாறு தியாகப்ரம்ம உற்சவத்தின் போது கூட நக்கீரன் ஸ்டால்களில் விற்கப்படுகிறது. ஸ்ரீ.ஜோசப் அவர்களது மறுப்பு மற்றும் பாஞ்சஜன்யம் இதழில் விரிவாக இரும்பாநாடு ஸ்ரீ. உ.வே. பத்மாநாபன் ஸ்வாமி 2006 அக்டோபர் முதல் மார்ச் 2008 வரை தொடராக சார்ங்கவர்ஷம் என்னும் தலைப்பில் ”அஹோவின் அக்ரமும் நக்கீரனின் நேர்மையின்மையும்” எனத் தொடராக மறுப்பு எழுதிவந்தார். அதே பெயரில் பின்னர் அது புத்தகமாக 12.8.2010 இல் வெளியானது. (விலை ரூ.100/- பக்கங்கள் 175, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ 214, கீழ உத்தர வீதி ஸ்ரீரங்கம் திருச்சி - 620 006 ஃபோன் 0431- 2434398) துரதிருஷ்டவசமாக அந்தநூல் அஹோவிற்கு தக்க பதிலளித்தாலும் மறுப்பு நூல் அஹோ வைஷ்ணவத்தில் வடகலை பிரிவினர் என்பதால் வடகலை வெறுப்பு நூலாகிவிட்டது இருந்தாலும் பல ஆதாரமான மறுப்புகளை கொண்டுள்ளதால் அந்த நூலைப்படிக்கவேண்டும்.
இந்த இரண்டு மறுப்பு பதிவுகளும் நூலாகியும் பரவலாக அறியப்படவில்லை “பொய் ஊரை சுற்றி வந்த பிறகும் கூட உண்மை வாசற்படியை கூட தாண்டவில்லை“ இதற்கு யார் பொறுப்பு?.
அஹோவின் எழுத்துக்களில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஆதரமில்லாதவை என்பது ஐயம்திரிபற உண்மை, சத்தியம்.
அஹோ இறந்துவிட்டார். ஆனால் அவர் நூல் இன்னமும் இருக்கிறது. மறுப்பு நூலும் இருக்கிறது மறுப்புநூலை பிரசாரம் செய்யவேண்டியது யார்?
*********************************************************************************************************
சார்ங்கவர்ஷம் நூலிலிருந்து அஹோவுக்கான சில மறுப்புகள்
- 1. வேதகாலத்தில் நாலாம் வர்ணம் இல்லை பிராமண, க்ஷத்திரிய, வைசிய வர்ணங்கள் மட்டும் இருந்தது என்கிறார். ருக்வேதம் 10-90-12 இல் நான்கு வர்ணங்களும் அவர்கள் பரம்பொருளின் முகம்,க்ஷத்திரியர்கள் தோளிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், நாலாம் வர்ணத்தினர் திருவடிகளிலிருந்தும் பிறந்ததை குறிப்பிடுகிறது.
- 2. ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தபோது 450 மதங்கள் இருந்ததாக கூறுகிறார் அதன் பெயர்கள் குறித்து அஹோ ஆதாரம் காட்டவில்லை.
- 3. பிராமணர்கள் மனு ஸ்ம்ருதி மூலம் வர்ணங்களை உண்டாக்கியதாக கூறுகிறார், மனு என்பது பதவியின் பெயர் ஸ்வாயம்பவ மனு ஒரு க்ஷத்திரியர் எனபது கூடத்தெரியாதா? அல்லது தெரிந்து பொய் கூறுகிறார்.
- 4. கீழ் ஜாதியானை கொடுமை படுத்தச்சொல்லி மனுவோ வேதமோ சொல்லவில்லை அதற்கு ஆதாரமும் இல்லை.
- 5. பெண் பூப்படைந்து 3 வருடகாலத்திற்குள் அவளுக்கு தகுந்த யோக்கியமான வரனை தந்தை அல்லது சகோதரன் ஏற்பாடு செய்யவேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் அந்த பெண் தனக்கு பிடித்த ஒழுக்கமுள்ள வரனை தானே தேடிக்கொள்ளலாம் என மனு கூறுகிறார். ஆனால் அஹோ கூறுவது போல அந்த பெண்ணின் மாதவிடாயின் நீரை தந்தை குடிக்கும்படி அசிங்கமாக எழுதவில்லை. இது பச்சை பொய்
- 6. புத்தர் அஹோ கூறுவது போல நிர்வாணம் பற்றி தெளிவான விளக்கம் ஏதும் கடைசிவரை சொல்லவில்லை.
- 7. உயிர் பலி கூடாது என புத்தருக்கு முன்னரே ரிஷிகள் குரல் எழுப்பி உள்ளனர். (ஆதாரம் மகாபாரதம் சாந்தி பர்வம் அனுசான பர்வம்) அதனால் புத்தரிடமிருந்து ஜீவகாருண்யத்தினை ஹிந்துமதம் கற்றதாக கூறுவது தவறு
- 8. புத்தர் பிராமணர்களை வெறுத்ததாக கூறுவது தவறு. புத்தன் ஒருவன் பிராமண குடும்பத்தில்தான் பிறக்கமுடியும் என்கிறது லலிதா விஷ்தாரா
- 9. வேததில் உருவ வழிபாடு இல்லை என சொல்வது தவறு சுக்ல யஜூர் வேததில் 13-379 இல் உருவ வழிபாடு பற்றி உள்ளது
- 10 நாலாம் வருணத்தினருக்கு பிரம்ம வித்தையில் அதிகாரம் இல்லை என ஸ்ரீ பாஷ்யம் சொல்கிறதே அன்றி அஹோ சொல்வது போன்று மோட்சம் கிடையாது என சொல்லவில்லை
இதைபோன்று இன்னும் பல மறுப்புகள் ஆதரத்துடன் உள்ளது.
No comments:
Post a Comment