Monday, 25 June 2018

குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?


குறையுள்ளவையா தமிழ் எழுத்துக்கள்?

தமிழ் எழுத்துக் குறிகள் மிகவும் குறையுடையன வென்பது அன்னியர்களுடைய அபிப்ராயம். க, ச, ட, த, ப இவ்வைந்து தமிழ் எழுத்துக் குறிகளும் முறையே क, ख, ग, घ, ह; च, छ, ज, झ, श, स; ट, ठ, ड, ढ; त, थ, द, ध; प, फ, ब, भ; இந்த இருபத்தி மூன்று வடமொழி எழுத்துக்களுக்குப் பதிலாக நிற்பது பெருங்குறை என்பார்கள். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்த திராவிட பாஷைகளில் இவ்விருபத்து மூன்று எழுத்துக்களுக்கு இருபத்து மூன்று குறிகள் வழங்குகின்றன. ஆனால் தமிழில்,
க என்பது क, ख, ह என்ற மூன்று உச்சரிப்புகளையும் குறிக்கும்.
ச என்பது श, च, ज என்ற மூன்று சப்தங்களுக்கும் நிற்கும்.
ட என்பது ट, ड என்ற இரண்டு வகை உச்சரிப்பும் கொள்ளும்.
த என்பது त, द என்று இரண்டு வகையாகவும் உச்சரிக்கப் படும்.
ப என்பது प, ब என்று இரண்டு எழுத்துக்களுக்கும் குறியாகும்.
ஆக இந்த ஐந்து எழுத்துக்கள் பன்னிரண்டு உச்சரிப்பு கொள்ளும்.
மற்ற பதினோரு உச்சரிப்புகள் தமிழில் கிடையவே கிடையாது. தமிழில் இராத உச்சரிப்புகளுக்குத் தமிழில் குறிப்புகள் இல்லாதது ஒரு குறையாகாது. ஒப்புக் கொள்ளப் பட்ட குறையை மட்டில் ஆராய்வோம். உண்மையில் சரியாக ஆராய்ந்து பார்த்தால் இந்த குறை குறுகி குறுகி முற்றிலும் ஒரு விதிக்கு உட்பட்டுப் போவதைக் காண்போம். எவ்வாறென்பதைப் பார்க்கலாம்.
க என்பது மொழியின் முதலெழுத்தாக வந்தால் தான் क உச்சரிப்பு. மொழியின் இடையிலோ, ஈற்றிலோ வந்தால் ह – உச்சரிப்புக் கொள்ளும். உதாரணம்: களவு, கொடுமை, காடு, கிளி, குதிரை; பகுதி, தகுதி, விகுதி, வகை, ஆகாரம், அதிகம், ஆகும், வருக என்பன. மெல்லின எழுத்துடன் சேர்ந்து வந்தால் ग உச்சரிப்புக் கொள்ளும். பங்கு, தங்கம், வாங்கலாம் முதலியன. க இரட்டித்தால் சுத்த வல்லின ஓசை பெறும்; பக்கம், அக்கா, தக்கவன்.
ச என்பது மொழியின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் श உச்சரிப்புத்தான் கொள்ளும்; செவ்வாய், சுவை, சும்மா, சாதல், பசி, மாசு, கொசு, தசை, ஆசான் முதலியவாறு.
இரட்டித்தால் தான் च, வல்லோசை பெறும். அச்சம், பச்சை, தச்சன், கச்சை, அச்சு, பிச்சை முதலியன. மெல்லினத்துடன் வந்தால் ज ஓசை பெறும். பஞ்சம், இஞ்சி, தஞ்சை முதலியன.
ட என்பது ड உச்சரிப்புத்தான். ट என்கிற உச்சரிப்பு இரட்டித்தால் தான் வரும். கட்டு, பட்டை, கட்டை, கட்டில், மட்டு, இடு, ஆடு, ஓடு, கடை, வடக்கு, தடை முதலியவைகளில் ட என்பது உச்சரிப்பே. மெல்லினத்துடன் ड என்றாகும் என்பது சொல்லாமலே விளங்கும். பண்டம், வண்டி, கூண்டு முதலியன.
த என்பது மொழியின் முதலில் त உச்சரிப்பு; இடையிலும் இறுதியிலும் द உச்சரிப்பு. தகப்பன், தாய், தித்திப்பு, தோல், துவையல், தையல்.
அது, இது, பொது, பாதி, பகுதி, காதம், கதை, மாதம், காதல். இரட்டித்தால் त உச்சரிப்பு பெறும். மெத்தை, கத்து, வாத்து, அத்தி முதலியன. மெல்லினத்துடன் வரின் द உச்சரிப்பு; வந்து, கந்தல், கூந்தல், மந்தி.
ப என்பது மொழியின் முதலில் प உச்சரிப்பு; பாலம், பசு, பொது, பூட்டு. இரட்டித்தாலும் प உச்சரிப்பு; அப்பம், கப்பல், தித்திப்பு. அப்போது இரட்டிக்காமல் இடையிலும் ஈற்றிலும் வந்தாலும், மெல்லினத்துடன் வந்தாலும் ब உச்சரிப்பு. கம்பம், வம்பு, அம்பு, செம்பு, உருபு, மரபு, திரிபு, மார்பு.
றகர ஒற்றுக்குப் பின்வரும் வல்லின எழுத்தை இரட்டித்ததாகவே கொள்ளவேண்டும்; ஆகையால் அது வல்லோசை பெறும். ஆகவே பொதுவாக வல்லின எழுத்துக்கள் மொழியின் முதலிலும், ற-கர ஒற்றுக்குப் பின் அல்லது இரட்டிக்கும்போதே வல்லோசை பெறும். மற்ற இடங்களில் உண்மையான வல்லோசை பெறாது. இடையிலும் ஈற்றிலும் க என்பது ஹ ஆகும். ச என்பது श எழுத்தே ஆகும். ற-கருத்திற்குப் பின் அல்லது இரட்டித்தால் தான் च ஆகும். ட என்பது ड
எழுத்தே ஆகும். இரட்டித்தால் தான் ट ஆகும்.
மெல்லினத்திற்கு அடுத்தாற்போல் எல்லா வல்லின எழுத்துக்களும் முறையே ग, ज, ड, द, ब ஆகும்.
வடமொழிச் சொற்களை தமிழில் கொள்ளும் போது, அவைகளின் சம்ஸ்க்ருத உச்சரிப்பை வைத்துச் சொல்ல வேண்டும் என்பது கூடாது. அது தமிழ் முறையாகாது. மணிப்பிரவாள மாகும். வருஷம் என்று தான் தமிழில் சொல்ல வேண்டும். வர்ஷம் என்பது தமிழல்ல. மாதம் என்று சொல்லுவது தான் சரி. மாஸம் என்பது சுத்த சம்ஸ்க்ருதமே ஆகும்; தமிழாகாது. அவ்வாறே, துவேஷம், மாமிசம், சீதை, அருச்சுனன் முதலியன.
புராதனமாகத் தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களுக்குத் தமிழ் உச்சரிப்புக் கொடுத்துச் சொல்லுவதே முறையாகும். த்வேஷம், மாம்ஸம், ஸீதா, அர்ஜூனன் என்று உச்சரிப்பது தமிழல்ல.
இதை ஞாபகத்தில் வைத்தால் மேலே நான் குறிப்பிட்ட விதிகள் தமிழில் கலந்த வடமொழிச் சொற்களுக்கும் பொருந்தும் என்பது விளங்கும். சீதை என்பதை தமிழில் शीतै என்றுதான் சொல்லுகிறோம். सीता அல்லது सीतै என்பது தமிழர் முறையாகாது.
கதை என்பதை गदै என்று உச்சரிப்பதுதான் தமிழ் முறை. ‘அதை’, ‘கதை’, ‘விதை’, ‘மதி’, ‘அன்னையும் பிதாவும்’ இவைகளில் எல்லாம் தமிழர் த என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் द வாகத்தான் உச்சரிப்பார்கள். அவ்வாறு உச்சரிப்பது தமிழ் முறையில் சரியேயாகும். நான் கூறியிருப்பது வடமொழிப் பயிற்சி அடைந்தவர்களுக்கும் தெலுங்கு, கன்னடம் வழங்கும் பிரதேசங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசமாகத் தோன்றலாம்.
தாகம், தசரதன், தமயந்தி, துரோணன் என்பவையில் மொழியில் முதலில் நிற்கும் த-கரத்தை தமிழர் त – ஆகவே உச்சரிப்பார்கள்; அவ்வாறு உச்சரிப்பதும் சரியேயாகும். द என்று உச்சரிப்பது வடமொழிப் பயிற்சியினால் ஏற்பட்ட வழக்காகும். தமிழில் நன்றாகப் பதியாத வடமொழிச் சொற்களின் உச்சரிப்பு சம்ஸ்க்ருதத்தை ஒட்டியே நிற்கும். அச்சொற்களுக்கு மேற்குறித்த விதிகள் பொருந்தா.
ஆகவே தமிழில் உள்ள உயிரெழுத்துக்களும் மெல்லின இடையின எழுத்துக்களும், குறைவின்றி இருக்கின்றன. வல்லின எழுத்துக்கள் மேற்கண்டவாறு சில விதிகளுக்குட்பட்டு, மாறுபாடு இல்லாமல் இடத்தை அனுசரித்து உச்சரிக்கப் பெறுவதால் அவ்வகையிலும் கூறப்படும் குறையானது உண்மையில் குறையாகாது.
தமிழ்ச் சொற்களுக்கும் தமிழருக்குமே தமிழ் எழுத்துக் குறிகள் உண்டாக்கப் பட்டவை. பிற பாஷைகளைத் தமிழ் எழுத்தைக் கொண்டு எழுதப் புகின் பல குறைகள் தோன்றும். அதைக் கொண்டு தமிழ் எழுத்துக்களை நாம் குறை கூறுவதோ இகழ்வதோ கூடாது.

No comments:

Post a Comment