Monday, 25 June 2018

சமஸ்க்ருத இலக்கண சொற்கள்




சமஸ்க்ருத இலக்கண சொற்கள்


அகர்மக க்ரியா (अकर्मक क्रिया)செயலற்ற வினை (intransitive verb). ஒரு வினையில் செயலும் (action), செயலின் பயனும் செயலாற்றுபவரிடமே இருப்பதால் (फलव्यापारयोरेकनिष्ठतायामकर्मक:) அங்கே செயப்படு பொருள் (object) என்று எதுவும் இருப்பதில்லை. எவை எல்லாம் அகர்மக க்ரியை என்பதற்கு ஒரு ஸ்லோகமும் உண்டு:

वृद्दिक्षयभयजीवितमरणं लज्जाशङ्कास्थितिजागरणम् ।
शयनक्रीडारुचिदीप्त्यर्थं धातुगणं तमकर्मकमाहू ॥
(பாடபேதம்: लज्जासत्तास्थितिजागरणं)

உதா: शिशु: शेते
அதிதே³ஸ²: (अतिदेश:)உபயோகத்தில் நீட்சி; (extended application). பாணிநீய வ்யாகரணத்தில் मत्, वत् போன்ற ஒட்டுகளால், ஒன்றின் பண்பு இன்னொன்றுக்கு நீட்டிக்கப் படுகிறது. இவை அதிதேஸ ஆகும்.
உதா: लोटो लाङ्वत्
அதி⁴கரண (अधिकरण)பேசப்படும்/ஆராயப்படும் விஷயம்;
அதி⁴கார சூத்ர: (अधिकार सूत्र)ஒன்றோ அதற்கு மேற்பட்ட சொல்லில் அமைந்துள்ள இலக்கண விதி. இவ்விதியில் இடம் பெறும் வார்த்தைகள் தானே எந்த பொருளும் தராது. ஆனால் இதற்கு பிறகு வரும் விதிகளுடன் இணைக்கப் படுவதால் பொருள் மிகுந்தது ஆகும். உதா: प्रत्यय:, परश्च
அனுதா³த்த (अनुदात्त)வைதிக சம்ஸ்க்ருதத்தில் எழுத்துக்களை உச்சரிக்கும் ஒரு முறை.
அநுநாஸிக (अनुनासिक)ஒரே சமயத்தில் வாயினாலும் மூக்கினாலும் உச்சரிக்கப் படும் எழுத்துக்கள் உதா: अं
அனுப³ந்த⁴ (अनुबन्ध)இலக்கண விதிகளை அமைப்பதற்காக சொற்களின் முன்போ பின்போ சேர்க்கப் படும் எழுத்துக்கள்
அனுபந்தம் எனப்படும்.
அனுவ்ருʼத்தி (अनुवृत्ति)அஷ்டாத்யாயி இலக்கண நூலில் ஒரு இலக்கண விதியில் இருந்து ஒரு சில வார்த்தைகள் அதற்கு அடுத்த அடுத்த விதிகளுடன் சேர்க்கப் படுவது அனுவ்ருத்தி என்று அழைக்கப் படுகிறது. இந்த வார்த்தைகளின் உபயோகம் கங்கை பிரவாகம் போல (गङ्गास्रोतोवत्) தடையின்றி வரிசையாக அடுத்த விதிகளுக்கு உபயோகப் படலாம். அல்லது தவளைப் பாய்ச்சலாக (मण्डूकप्लुत्यानुवृत्ति) ஒரு விதியில் இருந்து வார்த்தைகள் அடுத்த சில விதிகள் தாண்டி வேறொரு விதி வாக்கியத்தில் உயயோகப் படலாம். சில அரிய நிகழ்வுகளாக ஒரு விதியின் சில வார்த்தைகள் பின்னோக்கி சென்று இதற்கு முன்பு கூறப்படும் விதியிலும் இணையலாம். (सिंहावलोकनम् – சிங்கம் திரும்பிப் பார்ப்பது போல).
அனுஸ்வரம் (अनुस्वर)தேவநாகரி லிபியில் ஒரு சொல்லில் ங், ஞ், ண் போன்ற அநுநாஸிக எழுத்துக்களை குறிக்க, அதற்கு முதல் எழுத்தின் மேலே புள்ளி வைப்பது வழக்கம். இது அனுஸ்வரம் எனுப்படுகிறது.
அந்யோந்யாஸ்²ரய (अन्योन्याश्रय)ஒரு விதியை புரிந்து கொள்ள இன்னொரு விதியும் அந்த விதியை புரிந்து கொள்ள முதல் விதியும் தேவைப் படுமானால் அது அந்யோந்யாஸ்²ரய எனப்படும். இது ஒரு தோஷம்.
அபா⁴வ (अभाव)மறைந்து போதல், இல்லாமல் ஆதல்
அல்பப்ராண(अल्पप्राण)உச்சரிக்க குறைந்த அளவு மூச்சுக் காற்றுத் தேவைப்படும் எழுத்துக்கள்
அவக்³ரஹ(अवग्रह)வேத சம்ஹிதைகளில், பதபாடப் பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளபடி, சந்தி விதிகளின் படி சேர்ந்த சொற்கள் பிரிக்கப் படுவது அவக்³ரஹ எனப்படும்.
அவச்சே²த³ (अवच्छेद)குறை, ஒரு குறிப்பிட்ட அளவிலான பயன்பாடு.
அவயவ (अवयव)ஒரு பகுதி, அங்கம்
அவஸான (अवसान)நிறுத்தம், pause, termination
அபப்⁴ரம்ʼஸ² (अपभ्रंश)சம்ஸ்க்ருத வார்த்தைகளின் தேய்ந்த வழக்கு; வட்டார வழக்குகள் போன்றவை.
அயோக³வாஹ (अयोगवाह)அநுஸ்வரம், விஸர்க்கம், ஜிஹ்வாமூலியம் (ஹ்க..), உபத்மாநியம் போன்றவை பொதுவாக அயோக³வாஹ என்று அழைக்கப் படுகின்றது. இவ்வெழுத்துக்கள், வேறொரு எழுத்தைச் சார்ந்தே ஒலிக்கும்.
அனுஸா²ஸன (अनुशासन)பாரம்பரிய வழியில் உள்ள குறிப்பு – வழிமுறை. ஒரு விஷயத்தை ஆராய்தல்.
அந்வய (अन्वय)அந்வயம் என்பது ஒரு செய்யுள் அல்லது வாக்கியத்தை புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சி. இது தண்டாந்வயம், கண்டாந்வயம் என்று இரு வகை உண்டு. தண்டாந்வயம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களின் வரிசை முறையிலேயே அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல். கண்டாந்வயம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களை இடம் மாற்றி அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்.
அபேக்ஷா (अपेक्षा)ஒரு விஷயத்தை பொருத்த வரை உள்ள விளக்கம்.
அபவாத³ (अपवाद)ஒரு விதிக்கு எதிராக விதிவிலக்கு சூத்திரம் அபவாதம் எனப்படும். விதிவிலக்கிற்கு விதி விலக்கு ஏற்படுவதும் உண்டு. அது அபவாதப்ரதிஷேதம் எனப்படும்.
அவ்யய (अव्यय)ஆண்பால், பெண்பால் போன்ற எந்த பாலினமாக இருந்தாலும், எந்த காலத்திலும், எந்த வேற்றுமையிலும் மாறாமல் இருப்பது அவ்யயம் ஆகும். இதற்கு காசிகாவில் ஒரு விளக்கம் ஸ்லோக வடிவில் உள்ளது:

सदृशं त्रिषु लिङ्गेषु, सर्वासु च विभक्तिषु |
वचनेषु च सर्वेषु यन्न व्येति तदव्ययम् ।
ஆக்²யாத (आख्यात)தாது (வேர்ச்சொல்) அல்லது வினைச்சொல்
ஆத்மநேபதி³ (आत्मनेपदि)வினைச்சொற்களில் ஒரு வகை. மற்றொரு வகை பரஸ்மைபதி. ஆத்மநேபத வினைகளில், அந்த வினையின் பயன் செய்பவரையே சேருவதாக இருக்கும் என்று கூறப் படுகிறது.
ஆதே³ஸ² (आदेश)ஒரு சொல்லின் இடத்தில் அதற்கு பதிலாக வேறொரு சொல் பயின்று வருவது ஆதேசம் ஆகும்.
ஆக்²யாத (आख्यात)தாது (வேர்ச்சொல்) அல்லது வினைச்சொல்
ஆஸ்ய (आस्य)உடலில் சொல் உருவாகும் இடம் (தொண்டை, மூக்கு போன்றவை)
இத் (इत्)பேச்சு மொழியில், வழக்கத்தில் இல்லாத வகையில் இலக்கணத்தை இயற்றும் வசதிக்காக ஒரு சொல்லுடன் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்க்கப் படும் போது அவை இத் எனப்படும்.

உபதே³ஸ² (उपदेश)
முதன் முதலில் ஒரு ஆசிரியரால் உபதேசிக்கப் பட்டது. சம்ஸ்க்ருத இலக்கணத்தில் பாணினி, காத்யாயனர், பதஞ்சலி, ஆகிய மூன்று முனிவர்களும் கூறியவை உபதேசம் எனப்படுகிறது.
உபஸர்க³ (उपसर्ग)சொற்களின் முன்னால் சேர்க்கப்படும் சிறிய முன்னொட்டு (prefix). உபசர்க்கங்கள், வேர்ச்சொல்லின் அர்த்தத்தில் இருந்து முற்றிலும் மாறான அர்த்தத்தையும் கூட தரக்கூடும். இதை விளக்க கீழ்க்கண்ட ஸ்லோகம் பொதுவாக குறிப்பிடப் படுகிறது.
उपसर्गेण धात्वर्थो बलादन्यत्र नीयते।
प्रहार-आहार-संहार-विहार-परिहार वत् ।।

உபஸர்கே³ண தா⁴த்வர்தோ² ப³லாத³ன்யத்ர நீயதே|
ப்ரஹார-ஆஹார-ஸம்ʼஹார-விஹார-பரிஹார வத் ||
உப⁴யபதி³ன் (उभयपदिन्)ஆத்மநேபதம் மற்றும் பரஸ்மைபதம் இரண்டிலும் இடம் பெரும் வினைச்சொற்கள் உபயபதம் எனப்படும்.
உத்ஸர்க³ (उत्सर्ग)பொது விதி, இதற்கு விதி விலக்கு அபவாதம் எனப்படுகிறது.
உபமா (उपमा)ஒப்பீடு செய்யத் தகுந்த ஒரு உதாரணப் பொருள்
உபமேய (उपमेय)ஒப்பீடு செய்யப் படும் பொருள்
உபலக்ஷண (उपलक्षण)குறிப்பால் உணர்த்துதல்
ஏகாதே³ஸ² (एकादेश)இரண்டு எழுத்துக்களுக்கு பதிலாக ஒரே எழுத்து (ஏகாதேசமாக) உபயோகிக்கப் பட்டால் அது ஏகாதேசம் ஆகும்.


சம்ஸ்க்ருதத்தில் காலங்கள் (Tenses)


காலம் என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் நிகழ்காலம் என்று ஒன்றை சுட்டிக் காட்டுவது மிகக் கடினம். ஏனெனில் இந்த நொடி, இந்த க்ஷணம் என்று கூறும் போதே அந்தக் கணம் கடந்து சென்று இறந்த காலம் ஆகிவிடுகிறது. மனிதர்களிடையே உருவான மொழிகள் ஒவ்வொன்றிலும் இந்த காலத்தை, ஒரு செயல் நடைபெற்ற தருணத்தை வெளிப்படுத்த பலவிதமான முறைகளில் வெளிப்படுத்த வார்த்தைகள் உருவாகின்றன.
சம்ஸ்க்ருதம் போன்றதொரு செம்மையான மொழியில் செயல் நடைபெற்ற காலத்தைக் குறிப்பதொடு (Tenses) மட்டும் நின்று விடாமல் அதனோடு ஆணை, ஆசி, எதிர்பார்ப்பு போன்ற செயலுக்கு பின்னுள்ள மனநிலையையும் (Moods) குறிப்பிடும் வகையில் வினைச்சொல் அமைப்பு அமைந்துள்ளது.
சம்ஸ்க்ருதத்தில் மொத்தம் ஏழு விதமான காலங்கள் (Tenses) உள்ளன. இது தவிர ஒரு செயலைப் பற்றிச் சொல்லும்போது என்ன விதமான மனநிலையுடன் நிகழ்த்தப் படுகிறது என்பதையும் வெளிப்படுத்தும் விதமாக மூன்று விதமான மனநிலைகள் (Moods) உள்ளன. ஆக சம்ஸ்க்ருதத்தில் ஒரு செயலைப் பற்றி கூறும்போது மொத்தம் பத்து விதமாக கருத்தை வெளிப்படுத்த இயலும்.
वर्तमाने लट् (3.2.123), परोक्षे लिट् (3.2.115), अनद्यतने लुट् (3.3.15), लृट् शेषे च (3.3.13), लिङ्र्थे लेट् (3.4.7), विधिनिमन्त्रणाऽमन्त्रणाधीष्टसंप्रश्नप्रार्थनेषु लिङ् (3.3.161), लोट् च (3.3.162), अनद्यतने लङ् (3.2.111), आशिषि लिङ् लोटौ (3.3.173), लुङ् (3.2.110), लिङ्निमित्ते लृङ् क्रियाऽतिपत्तौ (3.3.139) ஆகிய பாணிநீய சூத்திரங்கள் காலங்களைப் பற்றியவை.
பாணினியின் இலக்கண சூத்திரங்களில் மிகச்சுருக்கமாக இந்த காலங்களைப் பற்றி குறிக்க வேண்டி, இவற்றின் பெயர்களை இறந்தகாலம் (भूतकाल:), நிகழ்காலம் (वर्तमान काल:) என்று நீண்ட பெயர்களாகச் சொல்லாமல் இரண்டே எழுத்து பெயர்களாக லட், லங் என்று பெயரிட்டுள்ளார். இவை அனைத்தும் ல என்கிற எழுத்தில் துவங்குவதால் லகாரங்கள் என்று பெயர் பெறுகின்றன. பாணினி இலக்கணம் தவிர்த்த வேறு சம்ஸ்க்ருத இலக்கண முறைகளில் இவ்வாறாக காலங்களுக்கு ஈரெழுத்து பெயர்கள் இடும் முறை இல்லை.
tenses
லட் (நிகழ்காலம்), லிட் (நேரில் பார்க்காத இறந்த காலம்), லங் (இன்றைக்கு முன் நிகழ்ந்த இறந்த காலம்), லுங் (சாமான்ய இறந்த காலம்), ல்ருட் (சாமான்ய எதிர்காலம்), லுட் (இன்றல்லாத எதிர்காலம்), ல்ருங் (நிபந்தனை அடிப்படியிலான எதிர்காலம்) ஆகிய காலங்களும், லேட் (விருப்பம்), லிங் (விதி லிங், ஆஸி லிங் – ஆணை, கோரிக்கை போன்றவை), லோட் (ஏவல்/கோரிக்கை) ஆகிய மனநிலைக் குறிப்புகளும் (moods) ஆக லகாரங்கள் அமைந்துள்ளன.
லங், லிங் என்றெல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது கடினம், அதை சுலபமாக்க ஒரு வழி உண்டு. அதாவது அ, இ, உ, ரு, ஏ, ஒ ஆகிய எழுத்துக்களுடன் ல்-ஐ முதலிலும், ட்-ஐ இறுதியிலும் சேர்க்க ஆறு காலங்கள் கிடைத்துவிடும். (லட், லிட், லுட், ல்ருட், லேட், லோட்). அதே போல அ, இ, உ, ரு வுடன் ல்-ஐயும், ங்-ஐயும் முறையே முன்னும் பின்னும் இணைக்க மீதமுள்ள நான்கும் கிடைக்கும் (லங், லிங், லுங், ல்ருங்).
மேலும் சுலபமாக நினைவில் வைக்க எல்லா லகாரங்களையும் தொகுத்து கூறும் விதமாக ஸ்லோகம் ஒன்று உண்டு:
लट् वर्तमाने लेट् वेदे भूते लुङ् लङ् लिटस्तथा ।
विध्याशिषौ लिङ्लोटौ लुट् लृट् लृङ् च भविष्यतः ॥
***
லட் (वर्तमाने लट् ) – Present
நிகழ்காலத்தைக் குறிக்கும் லட் லகாரம். உதாரணம்: देवदत्त: गच्छति (தேவதத்தன் செல்கிறான்) என்பன போன்ற வாக்கியங்கள். அதே போல என்றும் மாறாத தன்மையுடையவற்றைச் சொல்லும் போதும் லட் லகாரம் உபயோகிக்கப் படுகிறது. உதாரணம்: पर्वता: सन्ति | आत्मा अस्ति |. மலைகள் எத்தனையோ காலங்களாக இருக்கின்றன. அவற்றைப் பற்றி சொல்லும் போது லட் லகாரமே உபயோகிக்கப் படுகிறது. வர்த்தமானம் என்பது இருப்பு, தற்சமயம் இருப்பது என்று பொதுவாக அர்த்தம். இதனை நான்கு விதமாக பிரிக்கிறார்கள்:
प्रवृत्तोपरतश्चैव वृत्तविरत एव च
नित्यप्रवृत्त: सामीप्यो वर्तमानश्चतुर्विध: ||
  • प्रवृत्तोपरत – முன்பே துவங்கி தற்சமயம் தொடருகிற நிலை உதா: मांसं न खादति 
  • वृत्तविरत – தற்சமயம் நடைபெற்றுக் கொண்டு, இனியும் தொடர்கிற நிலை உதா: बाला: क्रीडन्ति 
  • नित्यप्रवृत्त: – எப்போதோ துவங்கி இனி எக்காலத்துக்கும் தொடரும் நிலை உதா: मेरु: तिष्ठति 
  • सामीप्य: – இன்னும் சில நொடிகளில் அடையப் போகிற நிலை உதா: ओदन: सिद्ध: भवति
***
லிட் (परोक्षे लिट्) – Perfect
பேசுபவர் நேரில் பார்க்காத, இறந்த காலத்தில் நடந்த, ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறும்போது அதற்கு லிட் லகாரம் உபயோகிக்க வேண்டும்.
சகார (चकार) – அவன் செய்தான்,
பபூவ (बबूव) – ஆனான் ஆகியவை லிட் வகையை சேர்ந்தவை.
रामो नाम: राजा बभूव |
இதில் தன்னிலை வினைச்சொற்கள் அமையுமா என்ற விசாரணை இலக்கண ஆசிரியர்களால் எழுப்பப் பட்டு பதிலும் சொல்லப் படுகிறது. ஒருவர் தன் நினைவோடு ஒரு நிகழ்ச்சியை பார்க்காதவராகவோ, செய்யாதவராகவோ இருக்கக் கூடும். சுயநினைவின்றி ஒரு செயலை செய்திருக்கக் கூடும். அதைப் பற்றி பேசுகையில் தன்னிலையில் லிட் பயன்படுத்த முடியும்.
ஸுப்தோ (அ)ஹம்ʼ கில விலலாப (सुप्तो ऽहं किल विललाप)
தூங்கும்போது நான் புலம்பினேன்
இங்கே புலம்பியது சுயநினைவில் அல்ல என்பதால் பரோக்ஷ லிட் காலத்தில் அடங்கும்.
ஒருவர் தான் செய்த செயலை மறுக்கும் போதும் லிட் லகாரம் உபயோகிக்கலாம்.
நா(அ)ஹம்ʼ கலிங்கா³ன் ஜகா³ம| (नाऽहं कलिङ्गान् जगाम।)
நான் கலிங்கத்துக்கு போனதே இல்லை.
ஜகாம என்பது தன்னிலையில் உள்ள லிட் லகார சொல்.
***
லங் (अनद्यतन भूते लङ्) – Imperfect
இன்றைய நாள் தவிர்த்த இறந்த காலம். ஹ்ய: வ்ருʼஷ்டி: அப⁴வத் |(ह्य: वृष्टि: अभवत् |) நேற்று மழை பெய்தது.
அதே சமயம், இன்றோ அல்லது நேற்றோ என்று சேர்த்து சொல்லும் பொது லங் லகாரம் வராது, லுங் வரும். அதே போல அண்மையில் நிகழ்ந்த செய்தி, அது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருப்பின், பேசுபவர் நேரில் பார்க்காத போதும் அது லங் லகாரத்திலேயே அமையும்.
த³ஸ²ரத²: நாம ராஜா அப⁴வத் | (दशरथ: नाम राजा अभवत् |)
தசரதர் என்ற ராஜா இருந்தார்.
பா³ல: து³க்³த³ம் அபிப³த் | (बाल: दुग्दम् अपिबत् | )
குழந்தை பால் அருந்தியது.
பொதுவாக இறந்த, நிகழ், எதிர் காலங்கள் தான் பல மொழிகளில் காணப்படுகிறது. சம்ஸ்க்ருதத்தில் தான் இன்று நடந்த நிகழ்வு (अद्यतन), இன்று அல்லாத (अनद्यतन) என்று இரு வேறுபாடுகள் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் உண்டு. அதாவது இன்று அல்லாத இறந்த காலம், இன்றைய இறந்த காலம், இன்று அல்லாத எதிர்காலம், இன்றைய எதிர்காலம் என்று நான்கு வகை உண்டு.
***
லுங் (भूत सामान्ये लुङ्) – இறந்த காலம்
கண்ணால் காணாத இறந்த காலம், இன்றைய நாள் தவிர்த்த இறந்த காலம் என்று ஏற்கனவே இரண்டு வகை பார்த்தோம். இரண்டிற்கும் பொதுவாக, எல்லா இறந்தகாலங்களையும் குறிக்க உதவுவது லுங் லகாரம். இருந்தும் இந்த வகை வினைச்சொற்களை அதன் அமைப்பை புரிந்து கொள்வது கடினம் என்பதால் அதிகம் உபயோகிக்கப் படுவது இல்லை.
அத்³ய வ்ருʼஷ்டி: அபூ⁴த் | अद्य वृष्टि: अभूत् | 
இன்று மழை பெய்தது.
ராம: நாம ராஜா அபூ⁴த் | राम: नाम राजा अभूत् |
ராமன் என்ற ராஜா இருந்தார்.
***
லுட் (अनद्यतन भविष्यति लुट्) – First Future
இன்றைய நாளைத் தவிர்த்த எதிர்காலம். பொதுவான எதிர்காலம் ல்ருட் லகாரத்தில் குறித்தாலும் இன்றைய நாளைத் தவிர்த்த ஒரு தினத்தில் நடப்பதை குறிக்க இந்த லுட் லகாரம் வரும். श्व: वृष्टि: भविता |
அதே சமயம் ஒரே சொல்லில் இன்றைக்கோ நாளைக்கோ என்று இரு தினங்களும் குறிக்கும் பொது லுட் லகாரம் பயன்படுத்தப் படமாட்டாது – अद्य: श्व: वा गमिष्यति | (இன்றோ அல்லது நாளையோ என்பதில் லுட் லகாரம் வாராது).
மேலும் எதிர்கால வருத்தத்தினைக் குறிக்கவும் லுட் லகாரம் வரும்.
इयं नु कदा गन्ता, या एवं पादौ निदधाति।
இயம்ʼ நு கதா³ க³ந்தா, யா ஏவம்ʼ பாதௌ³ நித³தா⁴தி|
இப்படி மெதுவாக நடப்பவள் எப்போது போவாள்?
अयं नु कदा ऽध्येता, य एवम् अनभियुक्तः।
அயம்ʼ நு கதா³ (அ)த்⁴யேதா, ய ஏவம் அனபி⁴யுக்த​:|
இப்படி கவனமில்லாமல் இருப்பவன் எப்போது படிப்பான்?
***
ல்ருட் (भविष्यति सामान्ये लृट्) – Second Future
எல்லா எதிர்கால (Simple future) வினைகளுக்கும் பொதுவாக உபயோகிக்கப் படும் லகாரம் இது.
உதா: श्व: गुरुवासर: दीपावली भविष्यति |
***
ல்ருங் (हेतुहेतुमद् भविष्यति लृङ्) – Conditional
ஒரு செயல் நடைபெற்றிருந்தால் என்கிற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி பேசுவது. பொதுவாக यदि… तर्हि ஆகிய வற்றுடன் இணைந்தே இந்த கால வினைகள் இடம் பெரும்.
உதா: यदि वृष्टि: अभविष्यत् तर्हि सुभिक्षम् अभविष्यत् |
***
லோட் – (लोट्) – Imperative
ஆணை அல்லது கோரிக்கை
ஆணை, கோரிக்கை ஆகிய மனநிலைகளில் லோட் லகாரம் உபயோகிக்கப் படுகிறது. இது லிங் லகாரத்தைப் போன்றே அமைந்தாலும் சிறு வேறுபாடுகளே இவற்றின் நடுவில் உள்ளது.
ப⁴வான் க்³ராமம்ʼ ஆக³ச்ச²து (भवान् ग्रामं आगच्छतु)
நீங்கள் கிராமத்துக்கு வாருங்கள்
அத்ர திஷ்ட²து (अत्र तिष्ठतु)
இங்கே இருங்கள்
***
விதி⁴நிமந்த்ரணாமந்த்ரணாதீ⁴ஷ்டஸம்ப்ரஸ்²நப்ரார்த²நார்தே²ஷு லிங் – (विधिनिमन्त्रणामन्त्रणाधीष्टसंप्रश्नप्रार्थनार्थेषु लिङ्) – Potential & Benedictive
விதி, அழைப்பு (நிமந்தரண), அனுமதி (ஆமந்தரண), மரியாதையுடன் விருப்பத்தை தெரிவித்தல் (அதீ⁴ஷ்ட), வினா எழுப்புதல் (ஸம்ப்ரஸ்ந), வேண்டுதல் (ப்ரார்தநா) ஆகிய மனநிலைகளில் உபயோகிக்கப் படுவது லிங் லகாரம்.
இதில் இரண்டு வகை உண்டு.
  • விதி லிங் (विधि लिङ्) ஆணை, கோரிக்கை, வேண்டுதல் ஆகியவை உதா: भवान् मम सहचरो भवेत् | – நீங்களே என் நண்பராக ஆகட்டும்.
  • ஆசி லிங் (आशिष् लिङ्) – ஆசீர்வாதம் செய்யும் மனநிலை உதா: तव कल्याणं भूयात् | உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்.
***
லேட் (लिङर्थे लेट्) – Subjunctive (is used only in vedas)
வேதத்தில் விருப்பம்/ஆசீர்வாதம் செய்வது போன்ற மன நிலையில் உபயோகிக்கப் படுகிறது. லௌகிக சம்ஸ்க்ருதத்தில் இதன் பயன்பாடு இல்லை.
பதாதி வித்³யுத் (पताति विद्युत् |) – மின்னல் விழட்டும்
ஜீவாதி ஸ²ரத³: ஸ²தம் (जीवाति शरद: शतम्) – நூறு ஆண்டு வாழட்டும்
***
இவ்வாறு ஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை – முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை, இருமை, பன்மை என தொண்ணூறு விதங்களில் மாறுகிறது. இவ்வளவு கடினம் எதற்கு என்றால், அதுதான் மொழியின் உச்சம். அதன் அழகு. ஒரு செய்தியை வெளிப்படுத்த இத்தனை வாய்ப்புகளை கொட்டி கொடுக்கிறது இந்த மொழி. புதிய புதிய சொற்கோவைகள் உருவாவதற்கு ஏற்ற மொழியாக, எல்லா மொழிகளுக்கும், எல்லாக் காலத்திலும், எல்லா வகை சிந்தனைகளுக்கும் உதவுவதாக இருப்பதே சம்ஸ்க்ருதத்தின் சிறப்பு.








No comments:

Post a Comment