Sunday, 11 February 2018
பாரதி: மரபும் திரிபும் – 2
April 10, 2012
- ம வெங்கடேசன்
பாரதி: மரபும் திரிபும் – பாகம் 1
(தொடர்ச்சி…)
எது முரண்பாடு?
முரண்பாடுகளின் தொடர்ச்சியில், காந்தியை, காந்தியத்தை கேலி செய்து,
‘உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடீ! கிளியே; செய்வதறியாரடி!’
-என்று கைகொட்டிச் சிரித்து கேலி செய்யும் பாரதி – மற்றொரு பாடலில்,
‘வாழ்கநீ; எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்; வாழ்க!’
– என்று வானுயர ‘கட்அவுட்’ வைத்துக் கைத்தட்டுகிறார்.
முரண்பாடுகள் என்பது, ‘கவிதாமனோபாவம்’ போலும்.
இப்படி வே.மதிமாறன் பாரதி மீது விமர்சனம் வைத்திருக்கிறார்.
-0-
‘மதிமாறனுக்கு காந்தி, காந்தியம் மீது எவ்வளவு பற்று! நினைத்தாலே புல்லரிக்கிறது! பாரதியின் முரண்பாட்டை எவ்வளவு துல்லியமாகத் தோலுரித்துக் காட்டிவிட்டார்.’
இப்படித்தான் நாமெல்லோரும் நினைத்திருப்போம். இந்த விமர்சனம் காந்தியத்தின்மீது உள்ள பற்றால் எழுந்தது அல்ல. பாரதியின் பார்ப்பனியம்(?) மீது; பாரதியை காந்தியத்தின் விரோதி என்பதைக் காட்ட; இவர்கள், இவரின் தலைவர் ஆகியோரெல்லாம் காந்தியத்தின் மீது கடும்தாக்குதலை நடத்தினால்கூட பொறுத்துக் கொள்வார். ஆனால் பாரதி விமர்சிக்கலாமா காந்தியத்தை? வந்ததே கோபம் மதிமாறனுக்கு. உடனே பேனாவை எடுத்தார். பார்த்தீர்களா பாரதி, காந்தியை, காந்தியத்தை விமர்சித்துவிட்டு, பின் அவரையே பாராட்டுகிறார் என்று நமக்கு விளக்குகிறார்.
உண்மையிலேயே மதிமாறனுக்கு ‘மதி’ உண்டா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் எது முரண்பாடு என்பது கூட பகுத்தறிவாளர் கோஷ்டி சேர்ந்தவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
இதில் ‘உப்பென்றும்’ பாட்டு 15.06.1907-இல் ‘இந்தியா’ பத்திரிகையில் வந்தது. அன்றைய காங்கிரஸ் கட்சியின் மிதவாதிகளிலும் அரசியல் வியாபாரம் செய்தவர்களைக் கேலி செய்து பாரதி பாடியது. காந்தியை, காந்தியத்தைப் பற்றியது அல்ல என்பதை அந்தக் கவிதையை முழுவதுமாகப் படிப்போர் உணரலாம்.
இந்தப் பாட்டு பாரதி எழுதிய காலத்தில், காந்தியடிகள் இந்தியாவில் இல்லை. தென்னாப்பிரிக்காவில் அரசியல் பணியாற்றிக் கொண்டிருந்தார். மேலும் காந்தியடிகள் அப்போது இந்திய அரசியலில் பரவலாக அறியப்படாதவர் என்பது பலரால் அறியப்பட்ட செய்தி.
பின்னர் வரும் ‘வாழ்க நீ எம்மான்’ பாட்டு 1919-க்குப் பின்னர் காந்தியடிகள் இந்திய அரசியலில் பிரபலமான பின்னர் பாரதியால் பாடப்பட்டது.
இதில் எங்கே முரண்பாடு வந்தது ‘மதி’கெட்ட மாறனுக்கு?
-0-
எது முரண்பாடு என்பதை இப்போது ஆராய்வோம்.
ஈவேரா 1927 வரை மகாத்மா காந்தியை ஆதரித்தார்.
‘‘உலகிலேயே மிகப்பெரிய சீர்திருத்தக்காரரான மகாத்மா காந்தியடிகள் இந்து விதவைகள் பற்றி, அநேக சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் சென்ற ஆண்டு ‘நவஜீவன்’ பத்திரிகையில் மகாத்மா எழுதி இருக்கும் விஷயத்தைக் கவனித்தால், விதவைகளின் விடுதலை சம்பந்தமாய் மகாத்மா எவ்வளவு தூரம் உழைக்கிறார் என்று புலனாகும். அக்கட்டுரையில் ஒரு சில பாகமாவது…..”
— குடியரசு 22-8-1926
‘‘மகாத்மா காந்தியவர்களிடத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் அபிமானத்திலும் பக்தியிலும் நமது பக்தி எள்ளளவும் குறைந்ததல்ல வென்பதையும் தெரிவிப்பதோடு, மகாத்மாவைத் தமிழ்நாடு மக்களுக்கு அறிமுகப்படுத்தின அனேகருள் நாமும் ஒருவரென்றும், மகாத்மாவைப் பின்பற்றி வந்த விஷயத்திலும் இப்போது சிபாரிசுக்கு வருகிற எல்லோரையும்விட நாம் பின்பட்டவரல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.’’
— குடியரசு 28-8-1927
1927-க்குப் பிறகு காந்தியை கடுமையான விமர்சனத்தால் துளைத்தெடுத்தார்.
‘‘தோழர் காந்தியின் முயற்சியெல்லாம் பார்ப்பனீயமும், பணக்காரத்தன்மையும் இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டும் என்பதேயாகும்.’’
— குடியரசு 23-7-1933
‘‘இந்திய தேசிய காங்கிரசும், காந்தியமும் அழிந்தொழிந்து போவது என்பது இந்திய ஏழை மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக ஏழை மக்கள் இயக்கத்திற்கே அதாவது, சமதர்ம உலகத்திற்கே பெரிய இலாபகரமான காரியமாகும்.’’
— குடியரசு 30-7-1933
“‘காந்தியாரின் விஷம்’ எல்லோரையும் அருந்தச் செய்து எல்லோரையும் கொல்லத்தக்க மாதிரியில் பூச்சுப் பூசப்பட்டிருக்கிறது என்பதோடு காந்தியாரை ‘மகாத்மா’வாக்கி பின் சந்ததிகளையும் கொல்லச் செய்யத்தக்கதாகும் என்று சொல்லலாம். ஆதலால் வைதீகப் பிரச்சாரத்தையும் சனாதனப் பிரச்சாரத்தையும் பகிஷ்கரிப்பதைவிட காந்தி பிரச்சாரத்தைப் பகிஷ்கரிக்க வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.”
— புரட்சி 10-12-1933
காந்தி வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்கியவர், சமதர்மக் கொள்கைக்கு எதிரி என்றெல்லாம் விஷம் கக்கிய ஈவேரா, காந்தி இறந்தவுடன் திராவிட இயக்கத்தவர்களே திடுக்கிடும்படியான ஒரு வசனத்தை எழுதினார்.
“1. இந்தியாவுக்கு ‘ஹிந்துஸ்தான்’ என்கிற பெயருக்குப் பதிலாக ‘காந்திதேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடலாம்.
2. இந்துமதம் என்பதற்குப் பதிலாக ‘காந்திமதம்’ அல்லது காந்தினிசம்’ என்பதாக மாற்றப்படலாம்.
3…. கிறிஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக ‘காந்தி ஆண்டு’ என்று துவக்கலாம். இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதனால்தான் புத்தர், கிறிஸ்து, முகமது முதலிய பெரியார்களுக்கு காந்தியார் ஒப்பானவராகவும், இன்றைய நிலைமைக்குத் தோன்றிய ஓர் சீர்திருத்த மகானாகவும் உலகமே கருதும்படியான நிலை ஏற்படும். உலக மக்களால் நன்கு மதிக்கப்படுவோம். இந்தியாவுக்கே சாபக்கேடு எது எது சொல்லிவரப்பட்டதோ அதெல்லாம் மறைந்துவிடும்.’’
— குடியரசு 14-2-1948
காந்தியைப் புகழ்ந்து இப்படி எழுதும்போதே ஈவேராவுக்குக் கூச்சமாகவும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல் இருந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, அரசியல் செய்ய வேண்டி இருக்கிறதே என்று அவரது மனம் அமைதிப்படுத்தியிருக்கும். அடுத்தப் பேச்சையும் கவனியுங்கள்…
‘‘பேச வேண்டியது, சம்பிரதாயப்படி மாத்திரம் அல்லாமல் உண்மைப்படியும், கடமைப்படியும் பேச வேண்டியதாகும். காந்தியார் மறைவு திராவிட நாட்டுக்கும் திராவிட மக்களுக்கும் மகத்தான நட்டமும், மாபெரும் ஏமாற்றமடையத்தக்க வாய்ப்புமாகும். காந்தியார் கொலை திராவிட மக்களின் எல்லையற்ற ஆத்திரமும் இரத்தக்கொதிப்பும், திடுக்கிடும்படியான விறுவிறுப்பையும் கொள்ளத்தக்க காரியமாகும்.’’
— குடியரசு 15-5-1948
இப்படிப் புகழ்ந்து பேசியதோடு காந்தியாரை ஈவேரா விட்டிருந்தால்கூட பரவாயில்லை. மீண்டும் தன்னுடைய இரண்டாம் நிலைக்கே திரும்பினார்.
“காந்தியார் மறைவு திராவிட நாட்டுக்கும் திராவிட மக்களுக்கும் மகத்தான நட்டமும், மாபெரும் ஏமாற்றமடையத்தக்க வாய்ப்புமாகும்’’ என்று எழுதிய அதே கைதான் கீழே குறிப்பிடுவதையும் எழுதியது:
‘‘காந்திதான் நமது நாட்டை வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் ஒப்படைத்து, நம்மை அடிமையாக்கியதற்குக் காரணம். சாதி ஒழிப்புக்கு சாஸ்திரம், புராணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது போல – நாட்டுப் பிரிவினக்குக் காந்தி ஒழிய வேண்டும்.’’
— விடுதலை 22-8-1957
இதில் ஈவேரா-வின் கொள்கை என்று எதைத் தீர்மானிப்பது?
முதலில் ஆதரிப்பது-
பின்பு எதிர்ப்பது-
எதிர்த்த காரணத்தையே மறைத்து ஆதரிப்பது-
பின்பு ஆதரித்த காரணத்தை மறைத்து எதிர்ப்பது-
எதுதான் அவருடைய கொள்கை?
முரண்பாடு பாரதியிடமா?
அல்லது ஈவேராவிடமா?
சொல்லுங்கள் தோழரே!
(தொடரும்..)
No comments:
Post a Comment