Sunday, 11 February 2018
பாரதி: மரபும் திரிபும் – 9
October 9, 2012
- ம வெங்கடேசன்
ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.
(தொடர்ச்சி…)
பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்டவரா பாரதி?
புரட்சித் தலைவன் லெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவிஞர் சுப்பிரமணிய பாரதி:
“கொலையாலும் கொள்ளையாலும், அன்பையும் ஸமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மை தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.‘இதற்கு நாம் என்ன செய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேரிடுகிறது’ என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்திப் பண்ணுமேயொழிய குறைக்காது. பாவத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். பாவத்தை பாவத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை.’’
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்து, இவ்வளவு வன்முறை கூடாது, ரத்தம் வேண்டாம் என்று அன்போடு ‘பாட்டாளி வர்க்க சரணாகதி தத்துவம்’ பேசுகிற இந்த கம்யூனிஸ்ட் கவிஞர், பங்காளி தகராறு, சூதாட்டம், பஞ்சபாண்டவர் – கவுரவர்களின் பொறுக்கித் தனங்களுக்காக நடந்த பாரத சண்டைக்கு பாண்டவர்களின் சார்பாக சங்கெடுத்து ஊதுகிறார் பாஞ்சாலி சபதத்தில்.
– துரியோதனின் தொடையைப் பிளப்பேன், துச்சாதனின் தோள்களைப் பிய்ப்பேன் என்று வீமன் செய்த சபதம், கர்ணனை போரில் மடிப்பேன், என்ற அர்ஜூனன் சபதம், துச்சாதன், துரியோதனின் ரத்தத்தில் குளித்து சீவிக் குழல் முடிப்பேன் என்ற பாஞ்சாலி சபதம் இவற்றை எடுத்துக்காட்டி எப்படி இருக்கிறது பார்த்தீர்களா நியாயம்? இதுதான் பாரதியின் பஞ்சாயத்து
— என்று விமர்சனம் செய்கிறார் மதிமாறன்.
¦ ¦ ¦
அதாவது லெனினின் வன்முறை தவறு என்று கூறுகிற பாரதி பாஞ்சாலி சபதத்தில் மூவரும் பேசுகிற வன்முறைப் பேச்சை ஆதரிக்கிறார். இது சரியா என்று கேட்கிறார் மதிமாறன்.
மதிமாறன் உள்பட நாம் எல்லோருமே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பாரதி எப்போதுமே வன்முறையை ஆதரித்தது இல்லை. சட்டப்படியான போராட்டங்களின் மூலமே எவற்றையும் செய்யவேண்டும் என்ற கொள்கை உடையவர் பாரதி.
1908-இலே பாரதி, ‘‘…..ஜனங்கள் சட்டத்தை உடைக்கவும், அதிகாரிகள் யந்திர பீரங்கிகளை வைத்துக்கொண்டு ஜனங்களைச் சூறையாடுவதும் நேருமென்ற ஸம்சமயத்துக்கிடமில்லாமல் வேலை செய்ய முடியும். ஏனைய முறைகள் நாட்டைக் குழப்பத்திலே கொண்டு சேர்க்கவும் கூடும். ராஜ வீதியிருக்கையிலே சந்துபொந்துகளின் வழியாக ஏன் செல்ல வேண்டும்? குழப்பம் சிறிதேனும் நேராத படிக்கே நமக்கே ஸ்வராஜ்யம் கிடைக்கும்படி…. தெய்வ சக்தியும் நமக்கனுகூலமாக இருப்பது வெளிப்படையாகவும் நிச்சயமாகவும் தெரியும்போது, பல இந்தியர்க்கும் பிராணச் சேதமும் மற்றப் பெருஞ்சேதங்களும் விளையக்கூடிய குழப்பவழியில் நாமேன் போக வேண்டும்?’’ என்கிறார். (பெ.தூரன், பாரதி தமிழ், பக்.315-316 / 420-421)
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டிஷ்காரரான ஸர் வில்லியம் லீ-வார்னரை கன்னத்தில் பளீர் பளீர் என்று அடித்துவிட்டார். அதற்கு பாரதி எழுதுகிறார்:
‘‘பிராமண வாலிபர் முற்கோபத்தால் செய்தது தப்பிதமென்பதில் ஆட்சேபமில்லை. இவர் சட்டப்படி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கக்கூடும்.’’ (இந்தியா 13-2-1909)
பிரிட்டிஷ்காரரை கன்னத்தில் அடித்ததைக்கூட பாரதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
1909-ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் லண்டனில் வைத்து சர் கர்ஸன் வில்லி மற்றும் டாக்டர் லால்காகா ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்ற விஷயத்தைப் பற்றி, அன்றுவரை லண்டன் இந்தியா ஹவுஸ்லிருந்து தொடர்ந்து பாண்டியிலுள்ள ‘இந்தியா’ பத்திரிகைக்குச் செய்தி அனுப்பி வைத்துக் கொண்டிருந்த வ.வே.சு.ஐயர் அதே மாத இறுதியில், ஸர் கர்ஸன் வில்லையைச் சுட்டுக் கொன்ற இந்திய இளைஞரான மதன்லால் திங்காராவையும் அவரது இச்செயலையும் ஆதரித்து கட்டுரை யொன்றினை எழுதி ‘இந்தியா’ இதழில் வெளியிடுமாறு அனுப்பிய நிலையில், அக்கட்டுரையினை இந்தியா இதழில் வெளியிடுவதில் தவறில்லை; திங்காராவின் இச்செயலினை நாம் பாராட்டிக் கட்டுரை வெளியிடலாம் என சீனிவாசாச்சாரி மற்றும் லட்சுமி நாராயண ஐயர் போன்றோர்கள் முடிவெடுத்ததும், இதழின் பொறுப்பாசிரியரான பாரதி, இந்தக் கொலைச் செயலினை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும், ஆங்கிலேயர்களைக் கொன்று அதன் மூலம் சுதேசியத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து தேசியவாதத்தை வளர்ப்பது என்பதில் தனக்குச் சிறிதும் உடன்பாடில்லை என்ற ஒரே முடிவுடன் இருந்ததால் ‘இந்தியா’ அலுவலகத்திலிருந்து வெளியேறியதுடன் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆகிய மூன்று மாதங்கள் ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.
பாரதி கர்ஸன் வில்லி கொலையினைக் கேள்விப்பட்டதும், 1909-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் நாள் ‘இந்தியா’ இதழில் தனது கோபத்தைக் கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்தினார் :
“…இப்படிப்பட்ட கொலையினால் ஒரு ஜாதியாரின் அபீஷ்டம் நிறைவேறிவிடும் என்று நினைக்கிற மூடர்கள் ஒரு கக்ஷியிலும் இல்லை. எவனோ ஒருவன் கொலை செய்துவிட்டால், அதைக் கொண்டு ஒரு கக்ஷியார் மற்றொரு கக்ஷியாரைப் பழிப்பது நலமாய்த் தோன்றவில்லை. வீண்துவேஷமே அதிகரிக்கின்றது. ஒற்றுமை வேண்டுமென்கிறவர்கள், வேற்றுமைக்காகப் பாடுபடுவார்களா?’’
வங்காளத்தின் ரகசியச் சங்கத்தின் சார்பாக சந்திரகாந்த சக்கரவர்த்தி என்பார் 1908-ஆம் ஆண்டு பாரதி சென்னையிலிருந்த வேளையில் பயங்கர சதித்திட்டங்களை ‘சென்னை ஜனசங்கம்’ ஏற்று நடத்தி பல ஆங்கிலேய அமைப்புகளையும், அம்மனிதர்களையும் நாசம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டபோதும் மறுப்பு தெரிவித்தும், இதே கருத்தினை அவர் வ.உ.சி. மூலமாக பாரதியை சமாதானப்படுத்தி நிறைவேற்ற நினைத்தபோது, பாரதி வ.உ.சி.யிடம் அத்திட்டத்தை ‘mad project’ எனக் கண்டித்துள்ளார்.
வீரவாஞ்சிநாதன் பிரிட்டிஷ்காரரான ஆஷை மணியாச்சி இரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்றார். இந்த பயங்கரவாதச் செயலையும் பாரதி ஏற்றுக்கொள்ளவில்லை. பாரதிக்கு இக்கொலை விஷயம் ஜீரணிக்கக் கூடியதாகத் தெரியவில்லை. ஏனெனில் வாஞ்சிநாதன் சில மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரி வந்தபோது தன்னையும், சீனிவாசாச்சாரி மற்றும் இதர சுதேசிகளையும் கண்டு அலாவளாவி விட்டுச் சென்றபோதும், இம்மாதிரியான திட்டத்தைப் பற்றியோ அல்லது இதன் நிழல்திட்டத்தைப் பற்றியோ தங்களிடம் கலந்து பேசாதபோது, இம்மாதிரியான செயலினைச் செய்வதற்கு வாஞ்சிக்கு யார் தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தியிருப்பார்கள் என்று பாரதி வினவிக்கொண்டிருந்தார். ஜூன் மாத இறுதிவரை பாரதி இக்கொலைச் செயலைக் கண்டு அனைவரிடமும் தனது வருத்தத்தையும் கோபத்தையும் எடுத்துரைத்திருக்கிறார் (நூல் : பாரதிக்குத் தடை)
ஆஷ் கொலைச் செய்தியைப் பற்றி தன்னுடைய கருத்தை சென்னை மாகாணத்தில் அரசியல் வளர்ச்சி என்ற கட்டுரையில் வெளியிட்டுள்ளார் பாரதி.
“இதை எதிர்பாராத நிகழ்ச்சி (அல்லது இதை ஒரு விபத்து) என்று நான் சொல்வேன். இதற்கு முன் நமது மாகாணத்தில் இதுபோல் என்றும் நடந்ததில்லை. இந்தியாவின் தென்மாவட்டத்தின் கடைசியிலுள்ள மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து, திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் திரு.ஆஷ், வாஞ்சி ஐயர் என்ற இந்தியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனது அரசியல் விளைவுகளை அறியாது நடத்தப்பட்ட ஒரு பயங்கரமான படுகொலை! மனிதாபிமானம் மற்றும் சமுதாய நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டது….. இது இந்து சமயத்திற்கு இழைக்கப்பட்டதொரு பரிதாபம், கொல்லப்பட்ட அம்மனிதனுக்கு அவனது மனைவி மட்டுமேயிருக்கிறாள்…. இச்செய்கை இந்த பக்தனின் இதயத்திற்கு ஒரு வேண்டுகோளை அனுப்புகிறது…. அன்புகொண்டு இணைபிரியாது, பிறரது பார்வைகளுக்கு அழகாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று பரிதாபமாகப் பிரிந்து சோகத்தில் தள்ளப்பட்டுள்ளார்.. ஆஷ்துரையை சுட்டுவிட்டு ஒரு சில நிமிடங்களுக்குப் பின் தன்னைக் கைது செய்ய வந்தவர்களைக் கண்டு பயப்படாமல், தன்னைத்தானே சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியும் சென்னை மாகாணத்தில் இன்றுவரை நடந்தேறவில்லை. சென்னை மாகாணத்தில் பயங்கரவாத இயக்கம் தற்போதுதான் பிறந்திருக்கிறது. பொதுவாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலருக்கு வாஞ்சியின் தற்கொலை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்…. இதனால் வாஞ்சி ஐயருக்கும் பின்னால் யார்யார் உள்ளனர் என்ற சுவடுகள் இல்லாமலே போய்விட்டது. சிலரை கைது செய்துள்ளனர். அது அவசியமே….’’
–என்று வாஞ்சிநாதன் செய்தது தவறு என்று கூறுகிறார்.
ஸ்பெயினில் ராஜாவின் விவாக சமயத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தைப் பற்றி பாரதி எழுதுகிறபோது,
‘ ….இவர்களுடைய நினைப்பு ஒருவேளை நியாயமாயிருந்த போதிலும் இவர்களது செய்கை மாதிரி மிகவும் மிருகத்தனமான தென்பதில் தடையில்லை. இவர்களுடைய மனக்குறையை நீக்கிக் கொள்ளத் தகுதியான மார்க்கம் யாதென்பதைப் பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன்.’
என்று எழுதுகிறார். இக்கட்டுரை பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதப்பட்டது.
நாம் எப்படிப் போராட வேண்டும்? பயங்கரவாத வழியிலா அல்லது சட்டம் சார்ந்த போராட்டங்கள் வழியிலா என்பதில் பாரதியின் எண்ணம் எது என்பது தெரியவேண்டுமானால் வ.உ.சிக்கும், யதிராஜுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்பட்ட தொல்லைகளைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
பாரதி எழுதுகிறார் :
“எளியவன் மனைவி யாருக்கும் மைத்துனி. நமது ஜனத் தலைவர்களாகிய ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை போன்றவர்களையும் தேசாபிமானிகளாகிய யதிராஜ் போன்றவர்களையும் அவர்கள் எப்படி வதைத்தாலும் நமது பக்கத்தவர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்களென்று கண்டுபிடித்து விட்டார்கள். கூக்குரலேனும் போடக்கூடாதா? பொதுக்கூட்டங்கள் கூடலாகாதா? ஹா! என்ன மானமற்ற ஜாதியாகிவிட்டோம்?” (இந்தியா 22-5-1909)
பாரதி போற்றி மதிக்கின்ற வ.உ.சி.யை பிரிட்டிஷ் அரசாங்கம் பயங்கரவாத வழியைக் கைக்கொண்டு வதைத்தாலும் பிரிட்டிஷ்காரரை திருப்பி அடி, கொலை செய், வெடிகுண்டு வீசு என்றெல்லாம் கூறவில்லை. இந்தியருக்காகக் குரலெழுப்பு; போராட்டங்கள் செய்; பொதுக்கூட்டங்கள் கூட்டு; போராடு; போராடு என்பதே பாரதியின் தீவிர எண்ணம். ஒருபோதும் பயங்கரவாதத்தில் பாரதிக்கு நம்பிக்கை இருந்தது இல்லை. இதுதான் பாரதியின் போராட்ட வழிமுறை. பாரதியின் வாழ்க்கை முழுவதுமே போராட்டங்களால் சூழப்பட்டிருப்பினும் அவர் பயங்கரவாதத்தை எப்போதுமே ஆதரித்ததில்லை.
பாரதி கூறுகிறார்:
“இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களில் கோடானுகோடியாக மனிதரைத் திரட்டிச் சண்டைக்கு உபயோகப்படுத்துகிறார்கள். ஒருதேச முழுதுமே ஒரு சைநியம்போல் ஆகும்படி செய்யவேண்டும் என்று அங்குள்ள சில தலைவர்கள் நினைக்கிறார்கள். நான் சண்டைக்காரனில்லை; ஸமாதானக்காரன்.” (சுதேசமித்திரன் 20-7-1917)
தன்னை மதிப்பிடுவதும் சமாதானக்காரனாகவே. வாழ்க நீ எம்மான் என்ற பாடலில் பாரதி காந்திஜியின் அகிம்சை வழிக்காகவே பாராட்டுகிறார்:
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்றுநீ அறிந்தாய்;
நெருங்கிய பயன்சேர் ‘ஒத்துழையாமை
நெறியினால் இந்தியாவிற்கு
வருங்கதிகண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே!
காந்தியின் ஒத்துழையாமையை முதலில் ஏற்க மறுத்த பாரதி அதனுடைய வலிமையைப் பார்த்தபின் அதை ஏற்றுக் கொள்கிறார். ஆகவே பாரதி பயங்கரவாதத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள வில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
மரத்துப்போனவனுக்கு உணர்ச்சி வராது. உணர்ச்சி இல்லாததினால் அவனால் வெள்ளையனை எதிர்த்துப் போராட முடியாது. அதனால்தான் உணர்ச்சி எழக்கூடிய கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். அப்போதுதான் உணர்ச்சியின் உந்துதலால் அவன் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவான். தன் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எங்கும் வெள்ளைக்காரனை அடி, கொலை செய், வெடிகுண்டு வீசு என்ற பொருளிலும்கூட கையாண்டதில்லை. பாரதி நினைத்ததெல்லாம் இந்தியருக்கு சுய உணர்ச்சி வரவேண்டும். அவ்வாறு வந்தால் மட்டுமே அவன் தன்னுடைய சுதந்திரத்திற்காகப் போராடுவான் என்பதுதான்.
பாஞ்சாலி சபதத்தில் மூவரும் செய்கின்ற சபதத்தைப் பார்க்கும் எவருக்கும் கொலையை ஆதரிக்கிறாரே பாரதி என்ற எண்ணம் தோன்றும். பாஞ்சாலி சபதம் வியாச முனிவரது மூலத்தைக் கொண்டு பாரதி படைத்திருக்கிறார்.
பாரதி கூறுகிறார் :
“எனது சித்திரம் வியாச பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக, இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது, ‘கற்பனை’ திருஷ்டாந்தங்களில் எனது ‘சொந்தச் சரக்கு’ அதிகமில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமே நான் பொறுப்பாளி”
என்று பாரதி முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வியாச பாரதத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே மொழிபெயர்த்திருக்கிறார் பாரதி. இந்தச் சபதம் பாரதியின் கற்பனையில் உருவான சபதம் இல்லை. இந்தச் சபதத்தை பாரதி வியாச பாரதத்தில் இல்லாமல் இருந்து பாரதியே இதைச் சேர்த்து எழுதியிருந்தால் ஒருவேளை பாரதி கொலைவழியினை ஆதரிக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அது மொழிபெயர்ப்பே என்று பாரதி சொல்கிறார்.
பாரதி மீது சேற்றைவாரி வீச மதிமாறன் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் சேறு மதிமாறன்மீதுதான் படுமே ஒழிய பாரதிமீது விழாது. பாரதியை விமர்சிக்க மதிமாறன் இன்னும் பாரதியைப் பயில வேண்டும். அப்படிப் பயிலும்போது பாரதியை எதிர்மறையாக விமர்சிக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றாது.
(தொடரும்…)
பாரதி: மரபும் திரிபும் – 8
August 28, 2012
- ம வெங்கடேசன்
ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.
(தொடர்ச்சி…)
உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி
“உப்பரிகைகளிலும், மாட மாளிகைகளிலும், அரண்மனைகளிலும், அந்தப்புரங்களிலும் கோயில் தாழ்வாரங்களிலும் பணம் படைத்தவன் காலடியிலும் அடிமையாய்க் கிடந்த தமிழை விடுதலை செய்து, எளிமையாக்கி, வீதிக்குக் கொண்டுவந்து மக்கள்மயப்படுத்தியவன் பாரதி’ என்று பாரதிமேல் அபாண்டமாகப் புகழ் சுமத்துகிறார்கள் அறிஞர்கள்…”
–என்றுகூறுகிற மதிமாறன், பாரதிக்கு முன் சித்தர்கள் மிக மிக எளிமையாகத் தமிழில் பாடல்களை அமைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். சித்தர்களின் பாடல்களை எடுத்துக்காட்டி விட்டு மதிமாறன் இப்படி முடிக்கிறார்:
‘‘இவ்வளவு எளிமையாக சமூகம் சார்ந்து சித்தர்கள் சிந்தித்து இருக்கும்போது- ‘பாரதிதான் முதலில் தமிழை தரைக்குக் கொண்டு வந்தார் என்று சொல்வது அபாண்டப் புகழ்தானே’’.
இப்படி பாரதி புகழ்பாடும் அறிஞர்களை விமர்சிக்கிறார் மதிமாறன்.
¦ ¦ ¦
பாரதிக்குமுன் தமிழின் பரவல் மக்களிடையே எப்படி இருந்தது? ஏன் பாரதியாரை தமிழ் மறுமலர்ச்சிக்கு உரியவராக்குகிறோம் என்ற கேள்வியெல்லாம் எழுகிறபோது மதிமாறன் கொண்டாடும் இரண்டுபேரைக் குறிப்பிட்டே அவருக்கு பதில் சொல்லிவிடலாம்.
ஒருவர் பெரியாரின் சீடர் என மதிமாறனால் போற்றப்படுகிற பாவேந்தர் பாரதிதாசன். மற்றொருவர் பெரியாரின் தளபதி அண்ணாதுரை. இவர்களின் அபாண்டப் புகழைப் பார்ப்போம்.
‘‘தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால் இமைதிறவாமல் இருந்த நிலையில் தமிழகம், தமிழுக்குத் தகும்உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான்’’
என்று கூறுகிற பாரதிதாசன் வேறொரு கட்டுரையில் கூறுகிறார்:-
‘‘அந்நாளில் பொருள் விரியும் தமிழ்ச் செய்யுட்கள் இருந்தன. பொருள் புரியும் தமிழ்ச் செய்யுட்கள் இருந்ததில்லை. புரியாத பாட்டைக் கேட்டுக் கேட்டு மக்கள் புரியும் பாட்டைக் காட்டி இந்தா என்று அழைத்தாலும் அவர்கள் தென்னாலி இராமனின் சுடக்குடித்த பூனைகளாய் ஓடுவார்கள். தமிழ்ப்பாட்டு என்பது தமிழர்க்கு வெறுப்பூட்டும் பொருளாயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வீழ்ந்த தமிழகம் பாவேந்தர் பாரதியாரின் பாட்டுக்கு வரும்வரைக்கும் எழுந்திருக்கவே இல்லை. கொட்டை நீக்கி கோது போக்கி இந்தா என்று மக்கட்குத் தந்த பலாச்சுளையே பாரதியார் அன்று அருள் புரிந்த பொருள் விளங்கும் பாட்டாகும்’’ (ஆனந்த விகடன் 3-5-1964)
முற்கால நடையோடு வேற்றுமைப்படுத்தித் தற்காலத் தமிழ்நடையில் பாரதியின் எளிமையைப் பாவேந்தர் இனங்காட்டிச் சிறப்பித்துள்ளார். முக்கியமானது என்னவென்றால்,
‘‘என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் தமிழால், பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் எவ்வாறென்பதை எடுத்துரைக் கின்றேன்’’
என்று புளங்காகிதம் அடைகிறார் பாரதிதாசன். தமிழ் பாரதியால் தகுதி பெற்றது என்பது பெரியார் சீடரின் வாக்குமூலம்.
அதுமட்டுமல்லாமல் பாரதியாரை முன்னோடியாகக் கொண்டு தம் படைப்புத்திறத்தை ஒழுங்கு செய்துகொண்ட பாரதிதாசன், தம்மிடம் பாரதி ஏற்படுத்திய பாதிப்புகளைக் குறித்தும் சரியாகக் கணித்துள்ளார்.
முப்பது ஆண்டு முடியும் வரைக்கும் நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச் சுடச்சுட அவன் அருள் துய்ப்பீர் என்னும் ஆயினும் கடவுள் உருவம் அனைத்தையும் தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம் பாடலிற் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார் – “கவிஞரும் காதலும்” என்னும் நூலுக்கான வாழ்த்துரையில் பாவேந்தர் பாரதிதாசன்
எளிய மக்களுக்கு மட்டுமல்ல, கவிஞர்களுக்கே பாரதியின் தமிழ் வழிகாட்டிற்று என்று கூறுகிறபோது பாரதியின் ஆளுமை மதிமாறன்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.
பெரியாரின் தளபதி அண்ணாதுரை கூறுகிறார்–
“பாரதிக்கு முன்பு வாழ்ந்து சென்ற புலவர்கள் ஆலய மணியாக அல்லது அரண்மனை முரசுவாக செயல்பட்டு வந்தார்கள். மக்கள் உள்மனத்தில் இருந்த எண்ணங்களை அவர்கள் கண்டுகொள்ள வில்லை. மக்களிடமிருந்து அவர்கள் தொலைதூரத்தில் இருந்து கொண்டார்கள்.
அறவிலை வணிகர்கள் போலவும் இன்பத்தை விற்பனை செய்பவர்களாகவும் இருந்துவந்தார்களேயன்றி அவர்கள் மக்கள் கவிஞர்களாக ஒருபோதும் இருந்ததில்லை. அதனால்தான் சங்க காலத்திற்குப் பிறகு பாரதியின் காலம்வரை மக்கள் கவிஞர் என்று ஒருவரையும் நாம் பெற முடியாமல் இருந்தது.
சிவன், விஷ்ணு, முருகன், எமன் முதலான கடவுளர்களின் வாகனங்களை அந்தப் புலவர்கள் விதந்தோதிப் பாடுவார்கள். அந்தப் பாடல்களில் அவர்தம் புலமைத்திறன் வெளிப்படும். மக்களிடமிருந்த மூடநம்பிக்கைகள் காரணமாக அவர்கள் அந்தப் புலவர்களுக்கு பயபக்தியுடன் மரியாதை செலுத்தினர். அதனால் அப்புலவர்கள் உயர்வு மனப்பான்மையுடன் உலா வந்தனர்.
‘நான் மக்கள் கவிஞன். மக்களுக்காக, மக்களைப் பற்றிப் பாடுவேன். ஏனெனில் நான் அவர்களில் ஒருவன்’ என்று ஒரு கவிஞன் சொன்னால், அவனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக, அந்தக் கவிஞனை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பார்கள். கவிஞனுடைய பாக்கள் புரட்சிகரமானவையாக இருந்தால் மக்களின் எதிர்ப்பு இன்னும் வலுவாக இருக்கும். இவ்விதமான சூழலுக்கு இடையிலேதான் சுப்பிரமணிய பாரதி உறுதிகொண்ட நெஞ்சுடன் வீறுநடைபோட்டான்.
பசப்பு மொழிகளும் பாசாங்குத் தன்மைகளும் கண்டவிடத்து, அவற்றையெல்லாம் தோலுரித்துக் காட்டுவது ஒரு மக்கள் கவிஞனின் பணியாகும். பாரதி அதைச் செய்தான்.
பாரதி ஒரு தேசியக் கவிஞன் என்பதையே பெரிதுபடுத்திக் காண்பித்து மக்கள் கவிஞனாக அவன் விளங்கியதைச் சிலர் மறைக்க முயன்றனர். மக்கள் கவிஞன் பாரதி என்பதற்கு ஒன்றைக் குறிப்பாகக் குறிப்பிடுவதாயின், பாரதி மாயா வாதத்தை மக்கள் மத்தியில் அனுமதிக்க மறுத்தான். சந்நியாசிகளையும் துறவிகளையும் பாரதி சாடினான். அவர்கள் சுறுசுறுப்பு இல்லாதவர்களாக, சோம்பேறிகளாக, சமூகத்தில் பயனற்ற பதர்களாகிவிடுவார்கள் என்று கருத்துரைத்தான்.
மக்கள் கவிஞனின் பணி மகத்தானது. புதிய உண்மையை மக்கள் புரிந்துகொள்ளவும், புதிய வாழ்வு நெறியைக் கைக்கொள்ளவும் வாழ்வில் எல்லாவற்றையும் சரியாக மதிப்பீடு செய்வதற்குரிய வழிமுறைகளைக் கண்டறியவும் மக்கள் கவிஞன் மக்களை வழிநடத்த வேண்டும்.
பகுத்தறிவுப் பாதையில் செல்லுவதற்கு மக்கள் தயங்குவர். அவர்களைத் தள்ளிவிட வேண்டிய தேவையைப் பாரதி உணர்ந்தான். அதையும் அவன் செய்தான். மந்திரவாதி சொன்ன மாத்திரத்தில் மனக்கிலி, சூனியங்கள் என்று இந்த மக்களுக்குத்தான் எத்தனை துயர்கள்! சிப்பாயைக் கண்டு அஞ்சுவர்; கைகட்டி நிற்பர்; பூனைபோல் நடப்பர். கண்ணிலாக் குழந்தைகள் போல் மற்றவர் காட்டுகின்ற வழியிற் சென்று மாட்டிக் கொள்வர்.
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று அறிவிப்பு செய்தான். விழலுக்கு நீர்பாய்ச்சுவதா? வெறும் வீணருக்கு உழைப்பதா? பூமியில் எவர்க்கும் அடிமை செய்யோம் என்று மக்களுக்கு விழிப்புணர்வூட்டுகிறான்.
மக்களுக்காகப் பணியாற்றுவதும் மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதுமே பாரதியின் சமயமாக இருந்தது.
சோதிடத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து அவர்கள் முன்பாக வானநூலறிஞரை அறிமுகப்படுத்துவது மக்கள் கவிஞனின் பணியாகும். அதேபோல், இரசவாதம் புரிவோரை மக்கள் மன்றத்திலிருந்து விரட்டிவிட்டு வேதியலறிஞரை அங்கு வரவழைத்தல், மதகுருமாரை அகற்றிவிட்டு அவ்விடத்தில் கல்வி புகட்டும் ஆசிரியரை இடம் பெறச் செய்தல், சித்துவேலை செய்பவரின் செல்வாக்கை நீக்கிவிட்டு அங்கே தேவைப்படும் பொதுமருத்துவர் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்தல், மூட நம்பிக்கைகளை முற்றாக அகற்றிவிட்டு, அங்கே அறிவியலை மலர்ச்சி காணச் செய்தல் – என்றிவையெல்லாம் மக்கள் கவிஞனின் மகத்தான பணிகளாம். சுருங்கச் சொல்வதாயின், மக்கள் கவிஞனின் பணி ஒரு புரட்சியாளனைப்போல் செயல்படுவதாகும். ஒரு புரட்சிக்காரனை விட இது கடினமானது. ஏனென்றால், ஒரு கொடியவனைத் தம்முடைய மீட்பராகவும், மெய்யான ஒரு மீட்பரைக் கொடியவனாகவும் மக்கள் கருதிவிடுகின்றனர்.
இடர்ப்பாடுகள் நிறைந்த இவ்விதச் சூழலிலும் துணிச்சலுடன் பாரதி இப்பணிகளை மேற்கொண்டான். அவன் தொடுத்த போர் இன்றும் முடிவுக்கு வரவில்லை. எனினும் போரை வெற்றிக்கு இட்டுச் செல்லப் போதுமான படைக்கலச் சேமிப்பாக எண்ணங்களை அவன் நமக்கு விட்டுச் சென்றுள்ளான். நிலைத்த புகழைப் பாரதிக்குச் சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டுவதெல்லாம் இந்தப் போரைத் தொய்வின்றித் தொடர்வதுதான். மக்களின் விடுதலைக்குரிய இப்போரை மேன்மையான நெறிப்படி தொடர்தல் வேண்டும். போருக்குத் தகுதியான மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இந்தப் பணி நிறைவு செய்யப்படும்.”
— (பாரதியை மக்கள் கவிஞன் என்று மதிப்பிட்டு அறிஞர் அண்ணா ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதை அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் உருவாக்கமான ‘மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர்’ 1982இல் இடம் பெற்றுள்ளது. அதன் சாரமே இது.)
ஆக மதிமாறனின் பாட்டனார்கள்- திராவிட இயக்கப் போர்வாள்கள். ‘உப்பரிகைகளிலும், மாட மாளிகைகளிலும், அரண்மனைகளிலும், அந்தப்புரங்களிலும் கோயில் தாழ்வாரங்களிலும் பணம் படைத்தவன் காலடியிலும் அடிமையாய்க் கிடந்த தமிழை விடுதலை செய்து, எளிமையாக்கி வீதிக்குக் கொண்டுவந்து மக்கள்மயப்படுத்தியவன் பாரதி’ என்று கூறி மதிமாறனின் முகத்தில் அறைகிறார்கள். ஆனாலும் மதிமாறன் அதையெல்லாம் துடைத்துக்கொண்டு மீண்டும், ‘பாரதி என்ன செய்தான்?’ என்றுதான் கேட்பார். மதி உள்ள மாறனல்லவா அவர்?
1924இல் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சென்ற அத்துனை பேரும் (ஈவெரா உள்பட) பாரதியாரின் பாடலையே பாடிச் சென்றனர் எனும் போது பாரதியாரின் பாடல் மக்களின் மனங்களில் எவ்வளவு தூரம் இடம்பெற்றிருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
மற்றொரு நிகழ்ச்சி.
தமது எண்ணங்கள், விரைவில் பாமர மக்களையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமது பாடல்களை சிந்து, கண்ணி என்னும் வகைப் பாக்களில் அமைத்தார். பாரதியாரின் பாட்டு மிக எளிதில் மக்கள் மனதில் இடம் பெற்றுவிடக்கூடிய அமைப்பு அப்பாடல்களில் இருந்தது. இதை உணர்ந்திருந்தது வெள்ளையர் அரசாங்கம். ஆகவே 1927இல் பாரதியாரின் பாடல்களுக்கு அரசாங்கம் தடைபோட்டது. (இத்தடைக்கு நீதிக்கட்சியின் ஆதரவும் இருந்தது) ஏனென்றால் பாரதியாரின் பாடல் மக்கள் மனங்களில் புகுந்தால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்ற அச்சம் வெள்ளையருக்கு இருந்த காரணத்தால் அவரின் பாடலைத் தடைசெய்தார்கள்.
இந்த நிகழ்வும் பாரதியின் ஆளுமையை- அவரின் தமிழ் கவிதையின் ஆளுமையை நமக்கு விளங்க வைக்கிறது. மதிமாறனுக்கு?
முதன்முதலில் தமிழகத்திற்கு ஹைக்கூ கவிதையை அறிமுகப் படுத்தியவர் பாரதி; முதன்முதலில் கருத்துப்படம் (கார்ட்டூன்) போட்டவர் பாரதி. மொழியாக்கம், சிறுகதை, எளிய தமிழில் வசன உரைநடை போன்றவற்றை பாரதி அன்று அநாவசியமாகக் கையாண்டார். இது மக்கள் மத்தியில் புதிய ஒளியைப் பாய்ச்சியது. அதனால்தான் அறிஞர்கள்,
‘‘இரும்புப் பெட்டிகளில் இருந்த இலக்கியத்தை ஏழைகளுக்குப் பரிமாறியவன் – நீ’’ (கவிஞர் அப்துல் ரகுமான்)
என்று அவர்களை எழுத வைத்தது.
¦ ¦ ¦
அடுத்து மதிமாறன் கூறியுள்ள சித்தர்கள் பற்றிய செய்திகளுக்கு வருவோம்.
சித்தர்கள் யாவரும் சித்தர் மரபின் ‘ஞான சித்தி’ அல்லது ‘யோக சித்தி’ மரபைச் சேர்ந்தவர்களாகவே அமைகின்றனர். இவர்கள் புறவுலகைப் புறக்கணித்துத் தன்னில் தான் ஒடுங்கி, தன்னுள்ளேயே லயிக்க வேண்டும் என்பதைப் போதித்துள்ளனர். இவர்கள் அறநெறிப் புலவர்களைப் போலன்றே உலகநிலையாமை, யாக்கை நிலையாமை, பெண் வெறுப்பு முதலியவற்றைக் கூறிச் சென்றுள்ளனர்.
அவர்கள் எழுதிய பல பாடல்களும் ஓலைச் சுவடிகளிலேயே தேங்கிவிட்டன. அதனால் சித்தர்கள் சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் எதையும் கொண்டுவர முடியாமல் போய்விட்டது. காரணம் அவர்கள் சமூக உறவுகளிலிருந்து தாமே ஒதுங்கியதோடு பிறரால் ஒதுக்கியும் வைக்கப்பட்டனர். மதிமாறனே கூறுவதுபோல் சித்தர்கள் எளிமையாக சமூகம் சார்ந்து சிந்தித்தார்களே தவிர அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவில்லை. சித்தர்களை போற்றிய மற்றவர்களும் அதை கொண்டுபோய் சேர்க்கவில்லை. மதிமாறன் சித்தர் என்று போற்றுகின்ற வள்ளலாரே ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என்று தம் கொள்கைக்கு நேர்ந்த கதியைத்தானே கூறினார்?
அதேபோல் சித்தர்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் எளிமை என்று சொல்லிவிட முடியாது. சில பாடல்களைத் தவிர பெரும்பாலான பாடல்கள் விளக்கவுரை இல்லாமல் மதிமாறனாலும் புரிந்துகொள்ள முடியாது. உதாரணத்திற்கு அவரது புத்தகத்திலேயே ஒரு சித்தரின் பாடலை கொடுத்துவிட்டு அந்தப் பாட்டிற்கு உண்டான மற்றொரு விளக்கத்தை க.வெங்கடேசன் எழுதிய ‘நாட்டுப்புற மருத்துவம்- ஓர் ஆய்வு’ என்ற நூலிலிருந்து விளக்குகிறார்.
அதாவது சித்தர்களின் பாடல்கள் எல்லாமே எளிமை அல்ல என்பது மதிமாறனே கொடுத்துள்ள எடுத்துக்காட்டிலிருந்து தெரிகிறது. சித்தர்கள் எளிமையாக சிந்தித்து எழுதியிருந்தால் மதிமாறன் ஏன் அதற்கு பொருள் சொல்லாமல் வேறொருவரின் ஆய்வு புத்தகத்திலிருந்து விளக்கம் கொடுக்க வேண்டும்? விளக்கம் தெரியாததால்தானே! அப்படியென்றால் சித்தர்களின் பாடல்கள் எளிமையானது அல்ல என்பது புரிகிறதல்லவா!
மதிமாறன் கொடுத்துள்ள சித்தர்களின் பாடல்களில் வேதம், பிராமணர்கள், வர்ணாசிரமம் போன்றவற்றை எதிர்த்தவர்களாக காட்டுகிறார். உண்மைதான். ஆனாலும் காடுவெளி சித்தர் கூறுகிறார், “வேதவிதிப்படி நில்லு!” என்று. மற்றுமொரு சித்தரான பட்டினத்தார் உருவழிபாட்டை ஏற்கிறார். சிவவாக்கியர் ராமனை போற்றுகிறார். எல்லாச் சித்தர்களும் வைதீகத்திற்கு எதிரானவர்கள் அல்லர்.
ஆனால் எல்லாச் சித்தர்களுமே சிவனை ஏற்றுக்கொண்டவர்கள், கடவுள் உண்டு என்பதை நம்புபவர்கள் என்பதை மட்டும் மதிமாறன் சொல்ல ம(றைத்து)றந்துவிட்டார்.
¦ ¦ ¦
இதோ அழுகணிச் சித்தர் பாடுகிறார்:
‘ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா உன்பாதம் சேரேனோ’
இந்த அழுகணிச் சித்தரின் கண்ணம்மாவைதான், கடத்தி வந்து பாரதி தன் காதலியாக்கிக் கொண்டார் என்று மதிமாறன் குற்றம் சுமத்துகிறார்.
மதிமாறனின் விமர்சனத்தை நினைத்து சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார்(?).
பாரதி கண்ணம்மா என்ற வரியை அழுகணிச் சித்தரின் பாடலில் இருந்து கடத்திவரவில்லை. பாரதி தன் கவிதைகளில் கண்ணனின் பெண்வடிவங்களுக்குக் கண்ணம்மா என்ற விளியைப் பயன்படுத்தியிருந்தாலும், 1917இல் இயற்றப்பட்ட கண்ணம்மா – என் குழந்தை என்ற பாடலிலேயே முதன்முறையாக இந்த விளியைப் பயன்படுத்தியிருக்கிறான். கண்ணன் பாடல்களில் முதற்பாடலாக இயற்றப்பட்ட கண்ணன்- என்தாய் (1913) என்ற பாடலிலும் சரி, கண்ணன் எனும் பேருடையாள் என்ற அந்தப் பாடலிலும் சரி பெண் வடிவத்துக்கும் தொடக்கத்தில் கண்ணன் என்ற பெயரையே பயன்படுத்தியிருக்கிறான். பிறகு உலக வழக்கத்தில் உள்ள கண்ணம்மா என்ற விளியை 1917 முதல் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறான். பாரதி எழுதி, 1917இல் வெளிவந்த ‘கண்ணன் பாட்டு’ என்ற நூலில் கண்ணன் என் தோழன், கண்ணன் என் தாய், கண்ணன் என் தந்தை, கண்ணன் என் சேவகன், கண்ணன் என் அரசன், கண்ணன் என் சீடன், கண்ணன் என் சற்குரு, கண்ணன் என் குழந்தை, கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை, கண்ணன் என் காதலன், கண்ணன் என் காந்தன், கண்ணம்மா என் காதலி, கண்ணன் என் ஆண்டான், கண்ணம்மா எனது குலதெய்வம் – என்று கண்ணனை பல்வேறு நிலைகளில் உருவகித்துதான் பாரதி பாடுகிறார்.
கண்ணன் பாட்டின் 1919ஆம் வருஷம் இரண்டாம் பதிப்பில் வ.வெ.சு.ஐயர் அவர்களின் முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்– ‘‘இஷ்ட தெய்வத்தைப் பல பாவங்களால் வழிபடலாகும் என்று நமது பக்தி சாஸ்திரங்கள் கூறுகின்றன. நமது ஆசிரியரும் அதை அனுசரித்துக் கண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும் எஜமானாகவும் குருவாகவும் தோழனாகவும் நாயகியாகவும் நாயகனாகும் பாவித்துப் பாடுகிறார்’’ என்று கூறுகிறார். இதிலிருந்து கண்ணனைத் தான் பாரதி கண்ணம்மா என்று விளிக்கிறார் என்பதை மெய்ப்பிக்கலாம்.
அழுகணிச் சித்தரின் கண்ணம்மா என்ற பெயர் அல்லது விளியையே பாரதி பயன்படுத்தியிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். காப்பியடிப்பது என்பது ஒரு மேற்கத்திய சிந்தனைப் போக்கு. தமிழ் மரபில் இதற்கு எதிரடியான வழக்கமே இருந்து வந்திருக்கிறது.
‘‘முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றுவம் என்பதற்கும் – முன்னோரின் வேறுநூல் செய்துமெனும் மேற்கோளி லென்பதற்குங் கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்’’
என்பது நன்னூல் வகுத்திருக்கும் சூத்திரம். தனக்கு முன்னால் இருந்த கவிஞர்கள் சொன்ன கருத்தை மட்டுமல்லாமல், அவர்கள் என்ன சொற்களில் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்களோ, அதே சொற்களையே தன்படைப்பில் ஒரு கவிஞன் அப்படியே சொல்லுக்குச் சொல் எடுத்தாளலாம். அது, முன்னோர்களுடைய கருத்தைப் ‘பொன்னேபோல்’ போற்றுவதாகும் என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள்.
எடுத்துக்காட்டாக, கம்பராமாயணம், பாலகாண்டத்தில், இராமனுக்குப் பழைய கதைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறார் விசுவாமித்திரர். அவற்றில் ஒன்றாக மகாபலியின் கதையைச் சொல்கிறார். மகாபலி தானம் கொடுக்கும்போது அதை சுக்கிராசாரியார் தடுக்கிறார். அப்போது அவரைப் பார்த்து மகாபலி சொல்வதாகக் கம்பன் இயற்றியுள்ள பாடல் இது:
‘‘எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ தகவில் வெள்ளி
கொடுப்பது விலக்கு கொடியோர் தமது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி ஒழியும் காண்’’
இந்தப் பாடலின் கடைசி இரண்டடிகளையும், அழுக்காறாமை அதிகாரத்தில் வரும் திருக்குறளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
‘‘கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்
உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.’’
வார்த்தைக்கு வார்த்தை, கம்பன் குறளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறான். இதுபோன்று சுமார் 300 குறட்பாக்கள் கம்பராமாயணத்தில் உள்ளன என்று அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இப்போது இளங்கோவைப் பார்ப்போம்.
‘‘கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்’’ (சிலப்பதிகாரம் 10:102:3)
என்று இளங்கோவடிகள் பயன்படுத்தியிருக்கும் அடிகள்,
‘‘மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்’’
என்ற புறநானூற்றுப்பாட்டின் (117ஆம்பாடல்) சொல்லுக்குச் சொல் எடுத்தாண்டிருக்கும் ஒன்று.
இவை போன்ற ஏராளமான எடுத்துக்காட்டுகள் தமிழின் நெடிய இலக்கிய வரலாற்றில் ஆயிரக்கணக்கில் சிதறிக் கிடக்கின்றன. மதிமாறன், தனக்கு இலக்கியமும் தெரியாது; வரலாறும் தெரியாது; பழந்தமிழ்ச் சிந்தனையின் போக்கும் தெரியாது என்பதை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்கிறார்.
செய்யுட்பகுதிகளை அப்படி அப்படியே கம்பன், இளங்கோ போன்ற பெரும்புலவர்கள் தம் முன்னோர்களுடைய பாடல்களிலிருந்து எடுத்தாண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கண்ணம்மா என்ற வழக்குப் பெயர், தற்செயலாக அழுகணிச் சித்தர் பாடல்களில் மதிமாறன் கண்களில் பட்டுவிட்டது. அவருக்கு வரலாறு தேவையா, இலக்கியம் தேவையா, தமிழ் மரபின் நெறிதான் தேவையா? அவருக்கு வேண்டியதெல்லாம் பாரதியின்மேல் களங்கத்தை ஏற்ற ஏதாவது ஒன்று வேண்டும். பிடித்துக்கொண்டார்.
இப்படி பாரதியை விமர்சிக்கும்போது நமக்கு ஒன்று புரிகிறது. இவர் தமிழையும் சரியாகப் படித்தவர் இல்லை; பாரதியையும் சரியாகப் படித்தவர் இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட உளறல்கள் வந்து விழுகின்றன.
(தொடரும்…)
பாரதி: மரபும் திரிபும் – 7
July 24, 2012
- ம வெங்கடேசன்
ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.
(தொடர்ச்சி…)
“தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள் பாடியதாக” பாரதி மீது மதிமாறன் குற்றம் சாட்டுகிறார்.
பாரதி பல மகாராஜாக்கள் மீதான சீட்டுக்கவிகள் பாடியதாக குறிப்பிடுகிறார். அதுவே பொய்தான். ஏனென்றால் பாரதி எட்டயபுரம் ராஜாவை (இரண்டு பேர்) தவிர வேறு எந்த மகாராஜாக்கள் மீதும் சீட்டுக்கவி எழுதவில்லை. பாரதி தமது வாழ்வில் தாம் பிறந்த மண்ணாகிய எட்டயபுரத்தின் மன்னருக்கு மட்டுமே சீட்டுக்கவி எழுதியனுப்பினார். அதுவும் அவர் விரும்பி அனுப்பவில்லை.
‘‘எட்டயபுரத்தில் தங்கியிருந்தபொழுது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு மேத் திங்கள் இரண்டாம் நாள் எங்கள் (தனது குடும்பத்தாரின்) வற்புறுத்தலின் காரணமாகப் பாரதி ஜமீன்தாருக்கு சீட்டுக்கவிகள் மூன்றும் ஓலைத்தூக்குப் பாடல்கள் ஐந்தும் எழுதியனுப்பினுப்பினார்’’ என்று பாரதியின் தம்பி சி.விசுவநாதன் குறிப்பிடுகிறார்.
பாரதியின் குடும்ப வறுமையைப் பார்க்கும்பொழுது பாரதியால் எதுவும் செய்ய இயலாத நிலைமை அப்போது இருந்தது. போதிய வருமானம் இல்லை. பாரதியார் சீட்டுக்கவி எழுதும்போது திருமண வயதில் அவருக்குப் பெண் இருந்தாள்.
பாரதி எழுதிய சீட்டுக்கவியைப் பார்த்தோமானால், அவன் மீது நமக்கு அளப்பரிய மரியாதைதான் ஏற்படுகிறது.
பழங்காலத்தில் புலவர்கள் மன்னரிடம் பரிசு பெறுவதற்காக மன்னரை வானளாவப் புகழ்வார்கள். தங்களின் பெருமையையும் சிறிது அதில் குறிப்பிட்டுக் காட்டுவார்கள். ஆனால் மன்னனையும் தன்னையும் சமமாக வைத்து எந்தப் புலவரும் பாடவில்லை. பாரதி இங்குதான் வேறுபடுகிறார். மன்னரைப் பாராட்டுவதைவிட தன்னைப் பற்றிய அறிமுக செய்திகளுக்கே தமது சீட்டுக்கவிப் பாடல்களில் முதலிடம் அளிக்கிறார்.
நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளின்படி எட்டயபுர ராஜாவான வெங்கடேசுரெட்டப்ப பூபதிக்கு மூன்று சீட்டுக்கவிகள் எழுதினார் பாரதி. ஒன்று: பாரதி தன் 14ஆம் வயதில் கல்வி கற்பதற்காக நிதி வேண்டி ராஜா மகாராஜா ராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கருக்கு சீட்டுக்கவி எழுதினார். இரண்டாவதாக எழுதிய ஓலைத்தூக்கும் (2-5-1919), மூன்றாவதான சீட்டுக்கவியும் (3-5-1919 ) வெங்கடேசுர எட்டப்ப நாயக்கருக்கு எழுதியதாகும்.
தனது 14வது வயதில் கல்வி கற்பதற்காக உதவி செய்யுமாறு எட்டயபுர ராஜாவுக்கு சீட்டுகவி எழுதினார். அந்த கவிதையில் தோன்றும் மிடுக்கு பிற்காலத்தில் எழுதுகிற சீட்டுக்கவியிலும் எதிரொலிக்கிறது. மதிமாறன் குறிப்பிடும் சீட்டுக்கவிகளை இப்போது ஆராய்வோம்.
முதலில் 2-5-1919ல் எழுதியதைப் பார்ப்போம்.
ஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜ ராஜேந்த்ர ஸ்ரீவெங்கடேசு ரெட்டப்ப பூபதி யவர்கள் ஸமூஹத்துக்கு கவிராஜ ஸ்ரீசி.சுப்பிரமணிய பாரதி எழுதிய ஓலைத்தூக்கு என்ற தலைப்பில் பாரதி எழுதுகிறார் :
”ராஜமஹா ராஜேந்திர ராஜகுல
சேகரன்ஸ்ரீ ராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கு மிளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண:
வாசமிகு துழாய்த்தாரான் கண்ணனடி
மறவாத மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்வளர்சுப் பிரமணிய
பாரதிதான் சமைத்த பாட்டு ( 1 )
மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை யென்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்தபொழு திறந்த தன்றோ?
சொன்னலமும் பொருணலமுஞ் சுவைகண்டு
சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றோ? ( 2 )
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றுங்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே?
சுவைபுதிது நயம்புதிது வளம்புதிது
சொற்புதிது ஜோதி கொண்ட
நவகவிதை யெந்நாளு மழியாத
மஹாகவிதை யென்று நன்கு ( 3 )
பிரான்ஸென்று முயர்ந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறரு மாங்கே
விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்துப்
போற்றுகிறார்; பாரோ ரேத்துந்
தராதிபனே யிளசைவெங்க டேசுரெட்டா
நின்பாலத் தமிழ்கொ ணர்ந்தேன் ( 4 )
வியப்புமிகு புத்திசையில் வியத்தகுமென்
கவிதையினை வேந்த னேநின்
நயப்படுஸந் நிதிதனிலே நான்பாட
நீ கேட்டு நன்கு போற்றி,
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
பொற்பைகள் ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப்
பல்லூழி வாழ்க நீயே. ( 5 )
இந்த ஓலைத்தூக்கில் எட்டயபுர மன்னரின் புகழைப் பாடுவதை விட தன்னைப் பற்றிய பெருமையையே பாரதி அதிகமாகச் சொல்கிறான்.
அடுத்து 3-5-1919ல் எழுதிய சீட்டுக்கவியை இப்போது பார்ப்போம். ஸ்ரீஎட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மஹாராஜ வெங்கடேசுர எட்டப்ப பூபதி யவர்கள் ஸமூஹத்துக்கு கவிராஜ ஸ்ரீசி.சுப்பிரமணிய பாரதி எழுதிய சீட்டுக்கவிகள் என்ற தலைப்பில் பாரதி எழுதுகிறார் :
பாரிவாழ்ந் திருந்த சீர்த்திப்
பழந்தமிழ் நாட்டின் கண்ணே
ஆரிய, நீயிந் நாளி
லரசு வீற் றிருக்கின் றாயால்;
காரியங் கருதி நின்னைக்
கவிஞர்தாங் காண வேண்டின்
நேரிலப் போதே யெய்தி
வழிபட நினைகி லாயோ? – 1
விண்ணள வுயர்ந்த கீர்த்தி
வெங்கடேசு ரெட்ட மன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பண்
பாவள வுயர்ந்த தென்பா
எண்ணள வுயர்ந்த வெண்ணி
லரும்புகழ்க் கவிஞர் வந்தால்
அண்ணலே பரிசு கோடி
யளித்திட விரைகி லாயோ? – 2
கல்வியே தொழிலாக் கொண்டாய்
கவிதையே தெய்வ மாக
அல்லுநன் பகலும் போற்றி
யதைவழி பட்டு நின்றாய்
சொல்லிலே நிகரி லாத
புலவர்நின் சூழ லுற்றால்
எல்லினைக் காணப் பாயும்
இடபம்போல் முற்ப டாயோ? -3
இந்த கவிதையில் பாரதி ‘தன்னை நேரிலே வந்து பரிசு கொடுத்திடுக’ என்ற பொருளில் பாடுகிறார். உதவி வேண்டி நிற்பவரைப் போய் உதவிக்கொடுப்பர் பரிசு கொடுக்க வேண்டும் என்பது யாராலும் மொழியப் படாதது. தன்னை நேரிலே வந்து பார்த்து பரிசு கொடுக்க வேண்டும் என்று பாரதி பாடுகிறார். சங்ககாலத்துப் புலவர் முதல் இக்காலத்து புலவர்வரை யாராலும் இவ்வாறு சொல்ல முடியாது. அதற்கான மனத்திண்மை அப்புலவர்களிடம் இருந்ததா என்பது தெரியவில்லை.. ஆனால் பாரதியிடம் அதற்கான மனத்திண்மை இருந்தது. இது யாசிப்பிற்கும் ஒருவரைப் பெருமைப்படுத்த பரிசு கொடுப்பதற்கும் இடையேயான இடைவெளியினை நமக்குப் புலப்படுத்துகிறது. இங்கே பாரதி மற்ற புலவர்களிடமிருந்து விலகியே நிற்கிறார். மஹாராஜ வெங்கடேசுர எட்டப்ப பூபதி என்று சொல்லும்போது தன்னை கவிராஜ சுப்பிரமணிய பாரதி என்று மன்னருக்கு சமமான நிலையிலேயே தன்னை நிறுத்திக் காண்கிறார். இதுவும் மற்றப் புலவர்களிடம் நாம் காணாதது.
இங்கு பாரதியின் சிறுமையை யாராலும் காண முடியாது. ஆனாலும் மதிமாறன் காண்கிறார்.
பாரதிக்கு முன் எட்டயபுர மன்னர்களைச் சேர்ந்தவர்களை புகழ்ந்து எப்படியெல்லாம் கவிதை எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தோ மானால் பாரதியாரின் தனித்தன்மை, பெருமை நமக்குப் புரியும்.
கடிகைமுத்துப் புலவர் என்பவர் திக்விஜயம், சமுத்திர விலாஸம் போன்ற நூல்களை எழுதியவர். இவர் எட்டயபுர மன்னரை புகழ்ந்து காமரசம் சொட்ட எழுதிய பாடல் ஒன்றே பாரதி எழுதிய சீட்டுக்கவியின் பெருமையை நமக்கு உணர்த்தும்.கடிகைமுத்துப்புலவர் எழுதிய பாடல்களில் ஒரே ஒரு பாடல் மட்டும் உதாரணத்திற்கு தருகிறேன்.
‘இவளைச் சேர்வதற்கு இதுவே நேரம்’ என்ற தலைப்பில் தாய் கூறுவதாக அமையும் பாட்டு இது. இதற்கு ‘தாயிரங்கல்’ உபதலைப்பு –
தமிட்டரா ணுவம்பெருக்கி வந்தெதிர்த்த வேண்முரசு சத்தங்காது
தமிட்டரா வெனம்புலம்புஞ் சிறுபேதை விரகமது தணியவேமுத்
தமிட்டரா மதிமுகத்தின் முகமழுந்த வேபுணரச் சமயம்வாணர்
தமிட்டரா தரந்தெரியு மெங்களெட் டேந்திரமகிபா தமிழரேறே.
பொருள் : புலவர் பாடல்களின் தகுதியை அறிந்து கொள்ள வல்ல எட்டேந்திர மன்னனே! தமிழருள் ஆண் சிக்கத்தைப் போன்றவனே! தம் பட்டம் முதலியவற்றுடன் கூடிய படை வீரர்களைப் பெருக்கிக்கொண்டு வந்து தாக்கிய, காமனின் முரச ஒலியைச் செவியில் கேட்டு, பாம்பினைப் போன்று வருந்தும் என் இளம்பெண்ணின் காதல் துன்பம் அடங்குமாறு இரவில் தோன்றும் சந்திரனைப் போன்ற இவளது முகத்தில் உன்முகம் பொருந்துமாறு சேர்வதற்குத் தக்கநேரம் இதுவே ஆகும்.
இப்படித்தான் எட்டயபுர மன்னரை கடிகை முத்துப்புலவர் போற்றுகிறார். இவருக்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த பாரதி எட்டயபுர மன்னரை போற்றும் விதத்தைப் பார்த்தோம். இதுதான் பாரதிக்கும் மற்ற புலவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.
பாரதி எழுதிய சீட்டுக்கவிக்காக குற்றம் சொல்லும் மதிமாறனுக்கு ஒரு செய்தி.
அக்காலக்கட்டத்தில் போராட்ட வீரர்களின் வறுமை நிலையைப் பார்த்து மக்களோ அல்லது சில செல்வந்தர்களோ அவர்களுக்கு நிதி உதவி, பொருள் உதவியை மனமுவந்து அளித்தனர். சிலர் செல்வந்தர்களிடம் சென்று உதவியை நாடினர். இது கீழ்த்தரமான செய்கை என்று யாரும் அன்று நினைக்கவில்லை.
ஒரு உதாரணம். வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் வ.உ.சிதம்பரனாருக்காக தென்னாப்பிரிக்காத் தமிழர்கள் சார்பில், அங்கிருந்த தேசபக்தர் தில்லையாடி வேதியப்பப் பிள்ளை வ.உ.சி.யின் குடும்பத்திற்கு நிதியுதவி திரட்டினார். அக்காலத்தில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கலை எதிர்த்து அறப்போர் நடத்தி வந்தார். காந்தியடிகள் இந்தியா திரும்பியபொழுது அவரிடம் தாம் திரட்டிய நிதியை வேதியப்பப் பிள்ளை, வ.உ.சியிடம் சேர்த்திடக் கொடுத்தனுப்பினார். ஆனால், என்ன காரணத்தினாலோ அந்த நிதியுதவி வ.உ.சி.யிடம் சேரவில்லை. வேதியப்பப் பிள்ளை தமிழகம் வந்த பிறகுதான் வ.உ.சி. செய்தியறிந்தார். அப்பொழுது அகமதாபாத்தில் தங்கியிருந்த காந்தியடிகளுக்கு வ.உ.சி. கடிதம் எழுதி பணம் வந்து சேராததை நினைவூட்டினார். இந்தக் கடிதம் 22-3-1915ல் வ.உ.சி.யின் மயிலாப்பூர் முகவரியான 40, பரிபூர்ண விநாயகக் கோயில் தெருவில் இருந்து எழுதப்பட்டது. இதில் ஒரு பகுதி வருமாறு :
“நானும் என் குடும்பத்தினரும் கடந்த ஓராண்டு காலமாக சில தென்னாப்பிரிக்கா இந்தியர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தோம் என்பதைத் தங்களிடம் நேரில் நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்பொழுது கூட அவர்களிடம் நிதியுதவிக் கேட்டிருக்கின்றேன். இந்த நிலைமையில் எனக்கு சேரவேண்டியப் பணத்தை, வழங்கப்படுவதற்கு தயார் நிலையில் உள்ள பணத்தை நான் வேண்டாம் எனக்கூற எந்தக் காரணமும் இல்லை. தற்பொழுது, என்னுடையச் சூழல்களில் நான் பணத்தை வேண்டாம் என்று மறுத்தால், எனக்கும் என் குடும்பத்திற்கும் தவறிழைத்தவனாவேன்.”
– நூல்: வ.உ.சிதம்பரம் பிள்ளை (இந்திய அரசு பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்)
வ.உ.சி.யின் இந்தக் கடிதம் நமக்கு உணர்த்துவதென்ன? தன் குடும்பத்திற்காக நிதிகேட்பது தவறில்லை; அது கீழ்த்தரமானதுமல்ல என்பதுதானே! (பாரதிக்கும் வ.உ.சி.க்கும் உதவி செய்யாத தமிழ்நாட்டு மக்களை நாம் சபித்தே ஆகவேண்டும்) தன் தேவைக்காக நிதி கேட்ட வ.உ.சிக்கு வக்காலத்து வாங்கி காந்தி வ.உ.சியை ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்த மதிமாறன், தன் தேவைக்காக நிதி கேட்ட பாரதியை மட்டும் விமர்சிக்கிறார் என்றால் மதிமாறனின் உள்நோக்கம் என்ன தெரியுமா?
வ.உ.சி. பிராமணரல்லாதவர். பாரதி பிராமணர்.
உயர்சாதி பிராமணரல்லாதவர் என்ன செய்தாலும் சரி; பிராமணர் எது செய்தாலும் தவறு. இதுதான் மதிமாறனின் அளவுகோல். பாரதிக்கு வைத்த விமர்சனத்தை மதிமாறன் வ.உ.சி.க்கு வைப்பாரா?
(தொடரும்)
பாரதி மரபும்,திரிபும் – 6
June 21, 2012
- ம வெங்கடேசன்
ஈனப் பறையர் – பாரதி பயன்படுத்தியது ஏன்?
ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற இந்த விஷம் தோய்ந்த வார்த்தை அல்லது விஷமாகவே இருக்கிற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? எம்முடன் என்பது யாருடன்? ஆரியர்களா? அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்களோ? ‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
என்று பாரதி மீது விமர்சனம் வைக்கிறார் மதிமாறன் .
ஈனம் என்றால் என்ன? தமிழ் அகராதி கூறுவதென்ன?
ஈனம் – இழிநிலை, குறைபாடு, கீழ்மை, தாழ்வு, புன்மை, கள்ளி, சரிவு, முயல். இது தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ள பொருள்.
பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடிய ஈனம் என்ற வார்த்தையை பாரதி எந்த அர்த்தத்தில் பறையர்களுக்குப் பொருத்தினார்?
‘ஈனப் பறையர்களேனும்’ என்ற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே பாரதி பயன்படுத்தினாரா?
பாரதியின் கருத்து என்ன? பறையர்களைப் பற்றிய பாரதியின் கருத்து மிகத்தெளிவாகவே இருக்கிறது.
இதோ பாரதி எழுதுகிறார் :
பஞ்சகோணக் கோட்டையின் கதை
ஒரு தேசத்தில் ஒரு கோட்டையிருந்தது. அதற்குப் பஞ்சகோணக் கோட்டை என்று பெயர். அதாவது அந்தக் கோட்டைக்கு ஐந்து மூலைகளும் ஐந்து பக்கங்களும் உண்டு. அந்தக் கோட்டையை வெகுகாலமாய் எந்தச் சத்துருவாலும் பிடிக்க முடியவில்லை. அதை அழிவற்ற கோட்டை என்று உலகத்தோர் புகழ்ந்து வந்தார்கள். முன்பக்கம் ஆழமான கரும்பாறையே அஸ்திவாரமாயிருக்க, அதன்மேல் பெரிய பெரிய கற்களால் ஆகாயமளவாக் கட்டப்பட்டிருந்தது. கற்கள் ஒன்றில் ஒன்றாகப் பதிக்கப்பட்டுப் பின்னல் வரிசைகளாய் இருந்தன. ஒரு கவரைப் பேர்த்தால்தான் ஒரு கல்லைப் பேர்க்க முடியும். இவ்விதமாக நான்கு பக்கங்களும் மிகுந்த பலத்தோடும் கூடி அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால் பின்பக்கமாகிய ஐந்தாம் பக்கம் மாத்திரம் பலமற்றதாய் இருந்தது. அந்தப் பக்கத்தில் மண்சுவர்தான் இருந்தது.இந்த ரகசியம் வெகுகாலமாய் ஒருவருக்கும் தெரியாமல் இருந்தது. அந்தக் கோட்டையைப் பிடிக்கவந்த வீரசேனர்கள் எல்லாம் பலமான பக்கங்களைத் தாக்கி அபஜயமடைந்து போனார்கள். அதனால் அந்தக் கோட்டையின் கீர்த்தி உலகமெங்கும் பரவிவிட்டது.
இவ்வாறிருக்கும் காலத்தில் அந்தக் கோட்டைக்குள் சினேகமாய்ப் புகுந்த ஒரு அன்னியன் வெகுகாலமாய் அங்கிருந்ததால் அந்தக் கோட்டையின் பலஹீனமான பக்கம் இன்னதென்று அறிந்து கொண்டான். பலமான நாலு பக்கங்களும் பலஹீனமான மண் சுவராலாகிய ஐந்தாம் பக்கத்தை மிக இழிவாக மதித்து நடத்தி வந்தன. கல்சுவர்களுக்கும் மண் சுவர்க்கும் பொருத்தம் இருக்குமா?
அந்தக் கோட்டையைச் சுற்றி மிகவும் ஆழமான அகன்ற அகழ் ஒன்று இருந்தது. ஆனால், பின்பக்கம் இருந்தது மண் சுவராகையால் அதையடுத்திருந்த அகழின் பாகம் ஆழமில்லாமல் மேடாய் இருந்தது. அகழின் ஜலம் சிறிது வற்றுங் காலத்தில் மண் சுவர்ப் பக்கம் தரை தெரியும்படி வற்றிப் போகும்.
இந்த மர்மங்களையெல்லாம் அறிந்த அன்னியன் ஒரு சிறிய படையைத் திரட்டிக் கொண்டு வந்து அகழ் ஜலம் வற்றியிருந்த மண் சுவர்ப்பக்கம் இறங்கி அந்தச் சுவரைத் தாக்கி, அதைக் கைவசப்படுத்திக் கொண்டு கோட்டையைப் பிடித்துக் கொண்டான். கோட்டையில் இருந்த அளவற்ற நிகரற்ற செல்வங்களை எல்லாம் தன் தேசத்திற்கு வாரிக்கொண்டு போனான்.
வீராதி வீரர்களுக்கெல்லாம் கைவசப்படாத இந்தக் கோட்டையைப் பிடித்த காரணத்தாலும் அதிலிருந்து வாரிக் கொண்டுபோன செல்வத்தின் உடைமையாலும் அந்த அன்னிய ஜாதியார் உலகத்தில் தலையெடுத்துக் கீர்த்தி பெற்று வாழ்ந்தார்கள். உண்மையை அறியாத உலகத்தோர் கோட்டை முற்றிலுமே பலமற்றதாய் இருந்திருக்க வேண்டுமென்றும் அல்லது அதைக் கைவசப்படுத்திக் கொண்ட அன்னியர் மகாவீரர்களாய் இருக்க வேண்டும் என்றும் பேச ஆரம்பித்தார்கள். கோட்டைக்குள் இருந்தவர்களில் பலரும் அவ்வாறே மதிமயங்கிப் பிதற்றினார்கள்.
தெய்வானுகூலத்தால் கோட்டைக்குரியவர்களில் அனேகருக்குச் சுய அறிவு வந்து, பலஹீனம் இந்த இடத்தில்தான் இருக்கிறதென்று தெரிந்து கொண்டார்கள். உடனே அவர்கள் அந்த மண் சுவரைக் கற்சுவராய்க் கட்ட ஆரம்பித்தார்கள். அப்படிச் செய்ய வொட்டாமல் அவர்களைப் பலவித உபாயங்களாலும் அந்த அன்னியர்கள் தடுத்தார்கள்.
எனினும் அவர்கள் விடாமுயற்சியோடும் ஒற்றுமையோடும் வேலை செய்துவந்ததால் காரிய சித்தி பெற்றார்கள். ஐந்து பக்கங்களும் பலப்பட்டு ஒரே கற்கோட்டையாய்ப் போகவே அது முன்னிலும் அதிகமாய் உறுதி அடைந்து, உலக முற்றிலும் அழிந்தாலல்லது அழியாத கோட்டையாய் விட்டது.
நம்மருமைச் சிறுவர்களே! இந்தக் கதையின் உட்பொருள் இன்னதென்று உங்களுக்குத் தெரியுமா? பாரத தேசத்தாராகிய நாமே அந்தப் பஞ்சகோணக் கோட்டையாவோம். கற்சுவர்கள் நாலும் மேலான ஜாதிகள். மண் சுவர் பஞ்சமர் என்ற ஐந்தாம் ஜாதியார். கோட்டையைச் சூழ்ந்து இருக்கும் அகழ் சுதேசாபிமானம்.
பஞ்சமர்களை நாம் எவ்வளவு அனாதரவாயும் கொடுமையாயும் நடத்தி வருகிறோம்! மேல்குலத்தார் குடியிருக்கும் தெருக்களில் அவர்கள் குடியிருக்கக் கூடாதென்று தடுக்கிறோம். அவர்களை நாம் தொட்டாலே பாவம் வந்து விடும் என்று விலகி யோடிப்போகும்படி ஏவுகிறோம்.
விராட் புருஷனுடைய அங்கமாகிய ஒரு வகுப்பாரை ஈன ஜாதியாரென்று நிராகரித்துத் தள்ளிவிடல் தர்ம மாகுமோ? அது ஈஸ்வர சம்மத மாகுமா?
ஒரே தேசத்தில் எத்தனையோ யுகங்களாய் வசித்துவரும் நமது சகோதரர்களாகிய பஞ்சமர்களை நாம் அவ்வாறு நடத்திவந்தால், அவர்களுக்குச் சுதேசாபிமானம் எவ்வாறு ஏற்படும்? அன்னியர்கள் அவர்களை நாம் நடத்துவதைக் காட்டிலும் மேலாக நடத்தினால், அவர்கள் அந்த அன்னியர்களுக்கு வசப்பட்டுப் போகிறார்கள்.கடவுள் எல்லாரையும் சமமாகவே சிருஷ்டித்தார். கடவுள் முன்னிலையில் ஜாதி வித்தியாசம் நிற்குமா? நல்வினைக்கு நற்பலனும் தீவினைக்குத் தீயபலனும் சித்தித்தல் அனாதியான பிரமாணம்.பஞ்சமர்களை நாம் எவ்வாறு சகிக்க முடியாத கொடுமைக்கிடமாக நடத்தினோமோ அவ்வாறே நம்மையும் அன்னியர் நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
இனியேனும் நாம் ஈன ஜாதியாரை ஆதரித்து, அவர்களுக்குக் கல்வி புகட்டி, சுசீலமான வழக்கங்களை அவர்கள் அனுசரிக்கும்படி செய்து, அவர்களையும் நாகரீகத்தில் நமக்குச் சமமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டால் நம்மை வெல்ல வல்லவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருப்பார்களோ?
– இந்தியா : 2-1-1909
பாரதி எழுதிய இந்த கதை மூலம் நமக்குத் தெரிவதென்ன?
பாரதி ஈனம் என்ற வார்த்தையை மோசமான விளித்தலுக்குப் பயன்படுத்தவில்லை என்பதை நாம் அறியலாம்.இந்த இடத்தில் குறைவுபட்ட என்ற பொருளிலேயே பாரதி எடுத்துரைக்கிறார்.
பலவீனம் – பலம் குறைந்த
அங்கஹீனம் – உடலில் ஏதோ ஒரு பகுதி குறைவுபட்ட
அறிவீனம் – அறிவில் குறைவுபட்ட
என்று சொல்வதுபோல
‘ஈனப் பறையரேனும்’ என்ற வார்த்தையை (பலம்) குறைவுபட்ட பறையர் என்ற பொருளில்தான் கையாள்கிறார்.இதை நாம் மேலும்விளங்கிக்கொள்ள வேண்டுமானால் பாரதி மற்றொரு இடத்திலும் ஈன என்ற வார்த்தையை குறைவுபட்ட என்ற பொருளில் கையாண்டிருப்பதைப் பார்க்கலாம்.
பாரதி கூறுகிறார் :
“நமக்கு நன்மை வரவேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பின்வருவன : நமது தேசத்தார் இப்போது மிகவும் ஈனமான சரீரநிலை கொண்டிருப்பதை நீக்கும் பொருட்டாக, சரீரப் பயிற்சிக் கூடங்கள் அத்தியாவசியமாக ஏற்படுத்துதல்”
– இந்தியா 17-4-1909
அதாவது இங்கு உடல்நிலை குறைவுபட்ட (ஈனமான) நிலையில் இருப்பதால் உடற்பயிற்சிக்கூடங்கள் ஏற்படுத்தவேண்டும் என்றுகூறுகிறார். ஆகவே பாரதி ஈன என்ற சொல்லை பலம் குறைவுபட்ட என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறியலாம்.
‘குறைவுபட்ட’ என்றால் ‘எதில் குறைவுபட்ட பறையர்கள்’ என்ற கேள்வி எழலாம். அதற்கு பாரதியே பொருள் தருகிறார். கல்வி, பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், நாகரீகம் போன்றவற்றில் குறைவுப்பட்டவர்கள் என்றே பாரதி கூறுகிறார்.
‘தணிந்த வகுப்பினரைக் கைதூக்கிவிடுதல்’ என்ற துணை தலைப்பில் பாரதி எழுதுகிறார் :
‘‘நமக்குள் மற்ற வகுப்பினரைக் காட்டிலும் கல்வி, செல்வம் என்பவற்றில் குறைவுபட்டவராகப் பஞ்சமர் முதலிய சில வகுப்பினர் கொடுந்துயரமடைகிறார்கள்’’
– இந்தியா 15-5-1909
எந்த இடத்திலும் இழிவு என்ற பொருளிலோ, பறையர்கள் கீழானவர்கள் என்ற பொருளிலோ அவர் பயன்படுத்தவில்லை.
பாரதி ‘ஈனம்’ என்ற சொல்ல இழிவுநிலை, கீழ்மை, தாழ்வு என்ற பொருளிலும் பயன்படுத்தி இருப்பதால் ஏன் மோசமான விளித்தலுக்கு இந்த கவிதையில் பயன்படுத்தியிருக்ககூடாது என்ற கேள்வியும் எழலாம்.‘ஈனம்’ என்பதை இழிவான பொருளில் பாரதி பயன்படுத்தவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்.
பாரதி எழுதுகிறார் :
‘‘பறையர் என்பது மரியாதையுள்ள பதம் இல்லையென்று கருதி இக்காலத்தில் சிலர் பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள்.நானும் சில சமயங்களில் பஞ்சமர் என்ற சொல்லை வழங்குவதுண்டு. ஆனால் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத் தமிழ்நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர்.
பறை என்பது பேரிகை. பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப் போகும்போது, ஜயபேரிகை கொட்டிச் செல்லும் உத்தமமான தொழிலை இந்த ஜாதியார் செய்துவந்தபடியால் அவர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. அது குற்றமுள்ள பதம் இல்லையென்பதற்கு ருஜு வேண்டுமானால், மேற்படி கூட்டத்தாரால் சென்னையில் நடத்தப்படும் சபைக்குப் ‘பறையர் மஹாசபை’ என்று பெயர் வைத்திருப்பதைக் காண்க. … ‘பறையனை’ப் ‘பரை’ (அதாவது ஆதிசக்தி, முத்துமாரி)யின் மக்களென்று பொருள் சொல்வதுண்டு.
நமக்கு மண்ணுழுது நெல்லறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை நாம் நேரே நடத்த வேண்டாமா? … நாட்டிலுள்ள பறையர் எல்லோரும் உண்மையான ஹிந்துக்கள் என்பதை மறந்துவிடக்கூடாது …மற்றொரு முறை சொல்லுகிறேன்.
‘அங்கமேலாங்குறைந் தழுகுதொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராயின்
அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவு ளாரே’
பறையர் ஹிந்துக்கள். அவர்களைக் கைதூக்கிவிட்டு மேல் நிலைமைக்குக் கொண்டு வருதல் நம்முடைய தொழில்.’’
– சுதேச மித்திரன் : 16-10-1917
பறையர்களை ஆதிசக்தியின் மக்களென்று பொருள்கொள்ளும் பாரதி இழிவுநிலையில் பயன்படுத்தியிருக்கமாட்டாரல்லவா? அதுமட்டுமல்ல பறையர் என்ற பதமே மரியாதையுள்ள பதம் என்றும், பறையர்கள் உண்மையான ஹிந்துக்கள் என்றும் பாரதி கூறுகிறார்.
தீண்டாமைக் கொடுமையை எதிர்க்க ‘ஆறில் ஒரு பங்கு’ கதையை எழுதி, ‘இந்நூலை உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்’ என்கிறார்.
பள்ளர், பறையர்களை ‘பரிசுத்த தன்மை வாய்ந்தவர்கள்’ என்று குறிப்பிடும் பாரதி ‘ஈன’ என்ற வார்த்தையை மோசமான விளித்தலுக்குப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதை நாம் அறியலாம்.
அதுமட்டுமல்ல ஒரு முக்கியமானச் செய்தியும் உண்டு. கண்ணன் பாட்டில் ‘கண்ணன் – என் ஆண்டான்’ என்ற கவிதையில் பாரதி தன்னைப் பறையனாகவே உருவகித்து கண்ணனை சரணடைகின்றான். தன்னைப் பறையனாகவே உருவகித்து கவிதை எழுதும் அளவுக்கு அவன் பறையர்களிடத்தில் அன்பு வைத்திருக்கிறான் என்றால் அவன் பறையருக்கு மோசமான விளித்தலைப் பயன்படுத்தியிருக்க முடியுமா? கண்டிப்பாக அவ்வாறு இருக்கமுடியாது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.
எம்முடன் என்பது இங்கு மற்ற எல்லா ஜாதி மக்களையும் குறிப்பது. பார்ப்பனர்களை மட்டும் குறிப்பதல்ல. அந்த கவிதையைப் படித்துப் பார்த்தாலே அது புரியும்.
தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றியும் ஜாதிபேதங்கள், நால் வருணங்கள் பற்றியும் பாரதி என்ன எண்ணங்கள் கொண்டிருந்தார் என்பதையும் அடுத்து ஆராய்வோம்.
(தொடரும்)
பாரதி: மரபும் திரிபும் – 5
June 6, 2012
- ம வெங்கடேசன்
ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.
(தொடர்ச்சி…)
இந்நாட்டிற்குப் பெயர் பாரதம் என்று பயன்படுத்தியது ஏன்?
இந்தியாவை ‘பாரதம்’ என்று சொல்வதிலேயே கவனமாக இருந்திருக்கிறார்.
‘இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே’
– என்ற ஒரு இடத்தைத் தவிர, தன் கவிதைகள் எல்லாவற்றிலும் ‘பாரத தேசம் என்று தோள் கொட்டுவதி’லேயே குறியாக இருந்திருக்கிறார்.
‘பாரதம், பரதன் நிலை நாட்டியது. இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்த்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம் என்று உருவாயிற்று – என்று புளுகுகிறார் என்றால், அது மகாகவியை கேவலப்படுத்தியதாகும். அதனால் ‘வரலாற்று ஆதாரங்களை அள்ளித் தருகிறார்’ என்று நாம் புளுகி வைப்போம்.
மதிமாறனின் மற்றொரு விமர்சனம் இது.
பாரதி கவிதைகளில் ‘இந்தியா’ என்ற பெயரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடுகிறார் என்று சொல்லுகிறார் மதிமாறன். ஆனால் மதிமாறன் தன் புத்தகத்தில் (பக்.25) பயன்படுத்தியிருக்கும் ‘வாழ்க நீ எம்மான்’ என்ற பாட்டிலேயே பாரதி ‘இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.
‘‘பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் – ஒத்துழை யாமை
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத் தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே’’
பாரதியின் கவிதைகளை முழுமையாகப் படித்திருந்தால் இந்த வரியும் மதிமாறனின் ‘மதி’க்கு எட்டியிருக்கும்.
மற்றோரு இடத்திலும் ‘இந்தியா’ என்ற பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்.
‘எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்
என்று மூன்றுமுறை பாரதி அடித்துக் கூறுகிறார். மற்றொரு கவிதையான பாரதமாத நவரத்தின மணிமாலையில் இந்தியா என்ற பெயரை குறிப்பிடுகிறார்.
‘‘திறமிக்க நல்வயிரச் சீர்திகழுமம் மேனி
அறமிக்க சிந்தனை அறிவு – பிறநலங்கள்
எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன்
கண்ணொத்த பேருரைத்தக் கால்’’
இவ்வாறு சில இடங்களில் இந்தியா என்ற பெயரை குறிப்பிடுகிறார். ஆனால் மதிமாறன் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடுவதாக கூறுகிறார். நல்ல விமர்சன ஆராய்ச்சி!
ஆனால் மதிமாறன் குறிப்பிடுவதுபோல பாரதி தம் கவிதைகளில் சில இடங்களில் மட்டும் இந்தியா என்பதையே பயன்படுத்துகிறார். மீதி இடங்களில் எல்லாம் பாரதம் என்பதையே பயன்படுத்துகிறார்.
பாரதி கவிதைகளில் ‘இந்தியா’ என்ற பெயரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடுகிறார் என்று புளுகும் மதிமாறன், சொல்ல மறந்த செய்தி ஒன்று உண்டு.
பாரதி கவிதைகளில் ‘இந்தியா’ என்ற பெயரை குறிப்பிடாவிட்டாலும் தன் கட்டுரையில் பல இடங்களில் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தி இருக்கிறார். பாரத தேசம் என்று தோள் கொட்டுவதிலேயே குறியாக இருந்த பாரதி தம் கட்டுரையில் ‘இந்தியா’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறாரே அதற்கு ஏதாவது பார்ப்பனிய குறி வைத்திருக்கிறாரா என்று மதிமாறன்தான் சிஐடி வேலை பார்க்க வேண்டும்!
இந்து என்பதின் திரிபே இந்தியா என்பதுதான் பாரதியின் கருத்து என்று சொன்னால் மதிமாறனின் விமர்சனம் தேவையற்றது. ‘பாரதம், இந்தியா’ என்ற வார்த்தைகள் பாரதி பயன்படுத்தியிருப்பது பார்ப்பனியச் சிந்தனையின் வெளிப்பாடு என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம். அப்படியில்லாமல் மதிமாறன் பாரதி இந்தியா என்ற பெயரை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என்று தனியாக விமர்சனம் வைக்கிறார். அதனாலேயே நாம் மேற்கண்டக் கேள்வியைக் கேட்கிறோம்.
காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த பாடலுடன் தன் கல்வியை ஆரம்பிக்கின்றார்கள்.
‘‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீர் இளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!’’
பொருள் : அலைகடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரதநாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம்….
என்று இதன் பொருள் நீண்டுகொண்டே போகிறது.
பார்ப்பனீய பூச்சாண்டியைக் காட்டி வளர்ந்த திமுக அரசு ஜூன் 1970ல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக இந்தப் பாடலை அறிவித்தது. பார்ப்பினிய எதிர்ப்பில் ஊறித்திளைத்த திமுக அரசாங்கம் இந்தப் பாடலில் பரதகண்டம் வருகிறதே – இது பார்ப்பனியச் சிந்தனைதானே – இதை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்கவில்லைபோலும். மாணவர்களின் மனதிலே இந்த தேசத்தை பரத கண்டம் என்று சொல்வதன்மூலம் பார்ப்பனியச் சிந்தனையை வளர்க்கிறோமே என்று தயங்கவில்லையே ஏன்? மதிமாறனாவது திமுக ஆட்சியிருக்கும்போது சொல்லியிருக்கக்கூடாதா?
சரி விஷயத்திற்கு வருவோம்.
ஆரியத்திற்கு கடும் வைரி என சொல்லப்படுகின்ற (உண்மையில் அப்படியில்லை) ‘மனோன்மணீயம்’ பெ.சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதி, 1891ல் வெளியிடப்பட்ட மனோன்மணீயத்தில் வருகிற இந்தப் பாடலில் (இந்த தேசத்திற்குப் பெயர்) ‘பரதகண்டம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் பெ.சுந்தரம்பிள்ளை பார்ப்பனியச் சிந்தனையில் ஊறியிருந்தாரா? இவர் ஏன் இந்த தேசத்திற்கு பரதகண்டம் என்று புளுக வேண்டும்?
பெரியாரின் தாசனான(?) பாரதிதாசன் தன் கவிதைகளில் ‘இந்தியா’வை எந்தச் சொல்லில் பயன்படுத்தியிருக்கிறார்?
‘‘பல நூற்றாண்டாய்ப் பாரத நாட்டில்
போரே இல்லை; அதனால் மக்கள்பால்
அஞ்சாமை என்பதே இல்லாத மிழ்ந்தது;
நாட்டன்பு காட்ட வாய்ப்பே இல்லை.’’
கதர் இராட்டினப் பாட்டில்,
‘அடல்வளர்த்தும் பாரதநற் புத்திரன்நான் ஆக
உடல்வளர்த்த நாடுஎன் உயிர்’
‘பாரத தேசத்தில் எங்கும் – எனில்
பண்டைமுதல் இழை நூற்பதிலே யாம்’
இராட்டினச் சிறப்பு கவிதையில்,
‘பாரதத் திலே பிறந்த
ராட்டினப் பெண்ணே’
‘பாரத நாட்டுக்குத் தாயடி நீ – உன்
பாரதத்தை நம்பியசேயடி யான்!’
ஈவேராவுக்கு தாசனாக இருந்ததாக சொல்லப்படுகிற பாரதிதாசன் (உண்மையாகவா?) தான் பாரததேசம் என்று தோள் கொட்டுவதிலேயே குறியாய் இருந்திருக்கிறார். அதாவது பார்ப்பனிய சிந்தனையில் இருந்திருக்கிறார்.
பாரதிதாசன் – ‘பாரதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இவர் ஏன் புளுக வேண்டும்?
அதுமட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கர் ‘பாரத’ என்கிற வார்த்தைக்கு எவ்வளவு மதிப்புக் கொடுத்திருந்தார் என்பதைப் பார்த்தால் மதிமாறனுக்கு தலையே சுற்றிவிடும்.
‘பாரத்’ என்ற சொல்லில் புரட்சியாளர்அம்பேத்கருக்கு அலாதியான பிரியம் இருந்தது. அதனால்தான் தன்னுடைய வார இதழுக்கு ‘பகிஷ்கிருத் பாரத்’ என்று பெயரிட்டார். அவருடைய அச்சகத்தின் பெயர் ‘பாரத் பூஷன் பிரிண்டிங் பிரஸ்’ என்பதாகும்.
புரட்சியாளர் அம்பேத்கர் – ‘பாரத்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இவர் ஏன் புளுக வேண்டும்? பாரதம் என்ற அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட தேசத்திற்கான திட்டவட்டமான வரலாற்று ஆதாரங்கள் இல்லை தான். ஆனால், கலாசார ரீதியாக ஒன்றுபட்டிருந்த தேசத்திற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இத்தேசம் புராதன நூல்களிலும், மொழிகளிலும், (வடமொழி, பிராகிருதம்) பாரதம் என்றே அறியப்படுகிறது. அதனாலேயே அக்காலக்கட்டத்தில் பலரும் ‘பாரததேசம்’ ‘பாரதம்’ என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். ஏனென்றால் அப்பெயரால் இந்நாட்டவர் தொன்று தொட்டு (புராணங்கள் மூலம் வெளிப்பட்டதால்) அழைத்துக் கொண்டு வந்தனர்.
பிரிட்டிஷ்காரர்கள் வைத்த பெயரைவிட – நம்மால் – நம் மக்களால் பெருமிதமாக அழைக்கப்படும் பாரதம் என்பதையே குறிப்பிட அன்று எல்லோரும் விரும்பினர். இந்நாட்டை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களுள் சிலர் ‘பாரத்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி யிருக்கின்றனர் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
சீனப் படையெடுப்பின்போது ‘இமயமலைக்குத் தெற்கே அமைந்துள்ள நிலப்பரப்பு முழுவதும் பாரதம்தான் என்பதை உலகத்திற்கு நிலைநாட்டுவதற்காக, டாக்டர் ராதாகிருஷ்ணன்,
‘‘உத்தரம் யத் சமுத்திரஸ்ச ஹிமாத்ரேஸ் சைவ தக்ஷிணாம்
வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர ஸந்ததி’’
என்கிற விஷ்ணு புராண ஸ்லோகத்தை எடுத்துக்காட்டினார். ஏனென்றால் அந்நியர்களால் அடிமைப்படுத்தப்பட்டு சுரண்டப் படுவதற்கு நெடுங்காலம் முன்பிருந்தே தான் ஒரே நாடாக – அந்நாட்டிற்கு ஒரே பெயராக இருந்ததை உலகத்தின் முன் நிரூபித்துக் காட்டுவதற்காக அவர் பறைசாற்றினார். இந்த எண்ணமே பாரதிக்கு இருந்தது.
இங்கு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கும் ‘பாரத்’ என்ற பெயரை இணைத்தே வைத்தனர். காரணம் அது இந்நாட்டினுடைய தொன்மையான பெயர் என்பதனால்.
இதில் எங்கே தெரிகிறது பார்ப்பனியம்?
(தொடரும்)
பாரதி: மரபும் திரிபும் – 4
May 18, 2012
- ம வெங்கடேசன்
ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.
(தொடர்ச்சி…)
பாரதியின் சிவனும் – திருவள்ளுவரும்
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிலும் கடைசிவரை ஆதிபகவன் யார் என்று சொல்லாமலேயே விட்டு விட்டார். இது, சுப்பிரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது. அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகோலை – வடித்திருக்கிறார் பாடலை. ஆதிபகவன் யாரென்றும், தன்னுடைய சிறப்புகள் எதனால் என்றும் தமிழ்த்தாயே ஒப்புதல் வாக்குமூலம் தருவதுபோல் எழுதி அடைத்தார் தமிழர்களின் வாயை.
‘ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்
மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்’
இதில் மொத்தம் மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பிரமணியார்.
1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் சிவன் என்று அறிவிக்கிறார். (பார்ப்பனரில் பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம்)
2. தமிழுக்கு இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்று சொல்லப்படுவதைப் பயன்படுத்தி, அகத்தியர் ஒரு பார்ப்பனர் என்று அவருக்குப் பூணூல் அணிவிக்கிறார்.
3. நன்றாக செய்யப்பட்டதாக தன் பெயரிலேயே சொல்லிக் கொள்கிற (ஸம் என்றால் நன்றாக, ‘கிருதம்’ என்றால் செய்யப்பட்டது) ஸம்ஸ்கிருதத்திலிருந்தே, தமிழ் தயாரிக்கப்பட்டதாக, ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து ஆணியடிக்கிறார்.
மதிமாறனின் விமர்சனம் இது.
முதலில் இந்த கவிதையின் கருத்தை உரைநடையில் பார்ப்போம். தமிழ்த்தாய் தன்னைப் பற்றி சொல்வதாக இந்த கவிதையை அமைத்திருக்கிறார் பாரதி. ஆதிசிவன் (ஆதியில் சிவன்) தமிழாகிய என்னை படைத்தான். பெருமைமிக்க வேதியரான அகத்தியன் என்னை கண்டு, மகிழ்ந்து இலக்கணம் செய்து கொடுத்தான். மூன்று குலத் தமிழ் மன்னர்கள் தமிழாகிய என்னை நல்ல அன்போடு வளர்த்தனர். மொழிகள் பலவற்றுள் உயர்ந்த மொழியாகிய ஆரிய மொழிக்கு நிகரென (சமமான நிலையில்) வாழ்ந்தேன். இதுதான் அதனுடைய பொருள்.
1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் ‘சிவன்’ என்று, பாரதி இந்த கவிதையில் எங்கே அறிவிக்கின்றார் ?
அதாவது வள்ளுவர் ஆதி என்ற வார்த்தையை பயன்படுத்தி யிருக்கிறார். பாரதியும் ஆதி என்று பயன்படுத்தியிருக்கிறார். இது போதாதா மதிமாறனுக்கு? உடனே மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார். மதியுள்ள மாறன் அல்லவா – அவர் முடிச்சு போடலாம். இறைவனான சிவன் தமிழையும் வடமொழியையும் கொடுத்தான் என்பதும் மரபுவழிச் செய்தி –
‘வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கு இணையா,
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வகுத்தருளும் கொல்லேற்றுப் பாகர்’
என்கிறது காஞ்சிப் புராணம். அதாவது சிவனே தமிழை அருளினார் என்பது மரபுவழிச்செய்தி.
அதுமட்டுமல்ல, முதற்சங்கத்துக்கு தலைவனாக இருந்தவன் சிவனே என்கிறது இன்னொரு செய்தி.
‘‘இடைச்சங்கமும் மற்றை இரண்டு சங்கங்களும் இருந்த இடமுதலியவற்றைப் பின்வரும் ஆசிரியப்பாவானும் உணர்க.
‘வேங்கடக்குமரி தீம்புனற் பௌவத்
திந்நான் கெல்லையி னிருந்தமிழ் பயின்ற,
செந்நாப் புலவர் செய்தியீன் டுரைப்பின்
ஆடகக் குடுமி மாடக் கூடலின்,
முன்னர்ச் சங்கக் கன்மாப் பலகையில்,
திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள்,
மன்றன் மரார்தார்க் குன்றெறி யிளஞ்சேய்,
திண்டிறற் புலமைக் குண்டிகைக் குறுமுனி….’
– இச்செய்யுள் பாண்டி நாட்டிலுள்ள செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயவரவர்கள் வீட்டிலிருந்த பழைய ஏட்டுப் புத்தகமொன்றில் எழுதப்பட்டிருந்ததாக ‘இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார் நல்லாருரையும்’ என்ற நூலில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் கூறுகிறார்.
சிவனின் உடுக்கையிலிருந்துதான் தமிழ், வடமொழி வெளிவந்ததாக மரபுவழிச் செய்தி ஒன்று உண்டு. இம்மாதிரியான செய்திகளை உள்வாங்கிக்கொள்கிற பாரதி அதை அப்படியே வெளிப்படுத்துகிறான். ஏனென்றால் இறைவனே படைத்தான் என்கிறபோது அதற்கு மதிப்பு அதிகம்தானே. அதனாலேயே இந்த மரபுவழி செய்திகளை ஏற்றுக்கொள்கிறான், அதை அப்படியே வழிமொழிகிறான்.
‘பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம். அதனால் பாரதி தமிழை சிவன் தான் பெற்றான் என்று அறிவிக்கிறார்’ என்று மதிமாறன் உள்நோக்கம் கற்பிக்கின்றார். ஐயா மதிமாறன் அவர்களே! ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதாதீர்கள். கொஞ்சமாவது படித்துவிட்டு எழுதுங்கள். பாரதி ஐயர் என்று தமிழகத்தில் அழைக்கப் படும் ஸ்மார்த்தர் பிரிவைச் சார்ந்தவர் தான். ஆனால் ஸ்மார்த்தர்களுக்கு சிவன் மட்டுமல்ல, சக்தி, விஷ்ணு, சூரியன், கணபதி, குமாரன் ஆகிய கடவுளர்களும் முக்கியம்தான். ஸ்மார்த்தர்கள் இன்றும் பஞ்சாயதன பூஜை என்ற ஒருவகை வழிபாட்டை அவரவர் இல்லங்களிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தி வருகின்றனர். இந்த பஞ்சாயதன பூஜை என்பது சிவன், சக்தி, விஷ்ணு, சூரியன், கணபதி ஆகிய கடவுளர்களை பிரதிஷ்டை செய்து அவர்களுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபடுவதாகும்.
2. பாரதி அகத்தியருக்கு பூணூல் அணிவிக்கிறாராம். அகத்தியர் வேதியர், முனிவர் என்பதும் வழிவழியாகத் தமிழ் மரபில் வரும் மரபான செய்தி; புராணங்கள் கூறும் செய்தி. அக்காலத்தில் மரபுச்செய்தி, செவிவழிச்செய்தி, புராணச்செய்தி, வரலாற்றுச் செய்திகளையெல்லாம் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ நூல் உருவாக்கப்பட்டது. அந்நூல் 1910ல் வெளிவந்தது. அந்நூலில் அகத்தியர் ஒரு வேதியர் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அகத்தியர் பாண்டிய மன்னர்களுக்கு புரோகிதராக விளங்குகினவர் என்று பாண்டிய சாசனங்களால் அறியலாம். ராஜசிம்மப் பாண்டியனின் சின்னமனூர் (பெரிய) சாசனம் கல்வெட்டு குறிப்பிடுவதாவது :
‘பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது’
பராந்தக வீரநாராயண பாண்டியனின் தளவாய்புரம் செப்பேடு பகர்கிறது :
‘….விஞ்சத்தின் விஜம்பனையும் பெறல் நகுஷன் மதவிலாசமும்
வஞ்சத் தொழில் வாதாவி சீராவியும் மகோததிகளின் சுருங்காத
பெருந்தன்மையும் சுகேது சுதை சுந்தரதையும் ஒருங்கு முன்னால்
மடிவித்த சிறுமேனி உயர்தவத்தோன் மடல் அவிழ் பூ மலையத்து
மாமுனி புரோசிதன்னாக….’
(நூல் ஆதாரம்: பாண்டியன் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
இப்படி பல்வேறு செய்திகள் தமிழ் இலக்கணம் செய்த அகத்தியரை வேதியர் என்றே குறிப்பிடுகிறது. மரபுவழிச் செய்திகளையும், புராணச் செய்திகளையும் அறிந்த பாரதி அதை வழிமொழிகிறார். அவ்வளவுதான்.
*********
திருவள்ளுவர், ஔவையார் போன்றவர்களின் அறிவை வானுயரப் புகழும் பாரதி – அவர்களின் திறமைக்கான காரணத்தையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
‘பகவான் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஒளவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும் நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்து போகவில்லை.’
பகவனுக்கும், ஆதிக்கும் நடந்த கலப்புத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டவர் மாதிரி ஆணித்தரமாகப் பொய் சொல்லுகிறார் பாரதி. இந்த பிரம்மாண்ட பொய்யில் இரண்டு பொய்களை மிக கவனமாகச் சொல்கிறார்.
1. பார்ப்பனருக்குப் பிறந்ததினால்தான் திருவள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் இவ்வளவு அறிவு.
2. பார்ப்பனர்களுக்கும் – தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வரலாற்று ரீதியான உறவை கற்பிக்கும் முயற்சி.
என்று வே.மதிமாறன் பாரதி மீது விமர்சனம் வைக்கிறார்.
பாரதி கூறியிருக்கின்ற திருவள்ளுவர் வரலாறு பாரதி தாமே எழுதிய வரலாறு அல்ல. பாரதியாருக்கு முன்பே புலவர் புராணத்திலும், கபிலர் அகவலிலும் இவ்வரலாறு இருக்கிறது. அக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த மரபுவழி செய்திகளையும், செவி வழிசெய்திகளையும் தொகுத்து வெளியிடப்பட்ட அபிதான சிந்தாமணியில் இவ்வாறு கூறப்படுகிறது:-
‘திருவள்ளுவர் – இவருக்குத் தந்தை யாளிதத்தன் எனும் வேதியன் என்பது பழைய நூல்.’யாளிகூவற் றூண்டு மாதப் புலைச்சி காதற்காசனியாகி மேதினி, யின்னிசை யெழுவர்ப் பயந்தன ளீண்டே’எனும் ஞானாமிர்தத்தாலறிக’
அதுமட்டுமல்லாமல் பொ.வேல்சாமி அவர்களும் கவிதாசரண் இதழில் இதற்கான மிகத் தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். அவர் கூறுகிறார் :
‘திருவள்ளுவரைப் பற்றிய இந்தச் செய்தி கபிலர் அகவல் என்ற நூலில் தொடங்கி, 1859ல் முதன்முதலாக வெளிவந்த தமிழ்ப்புலவர் வரலாறு கூறும் ‘தமிழ் புளுடார்க்’ நூலின் இதன் ஆசிரியர் சைமன், காசிச்செட்டியால் திருவள்ளுவர் வரலாற்றில் குறிப்பிடுகின்றது. பின்னர் 1886இல் இலங்கை சதாசிவம் பிள்ளை எழுதிய ‘பாவலர்’ ‘சரித்திர தீபிகம்’ அல்லது The Galaxy of Tamil Poets என்ற நூலிலும், டாக்டர் தெ.பொ.மீ.யின் ஆசிரியரான கோ.வடிவேலு செட்டியார் 1904இல் வெளியிட்ட ‘திருக்குறள் பரிமேலழகர் உரை: அதன் விளக்கம்’ நூலிலும், அந்த நூல் பின்னர் 1918இல் மறுபதிப்பு வந்த போதும், 1972ல் மதுரை பல்கலைக் கழகம் மூன்றாம் பதிப்பு வெளியிட்ட போதும் இதே வரலாறு குறிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட திருக்குறள் பதிப்புகள் அனைத்திலும் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.
இதனை பாரதிதான் உருவாக்கினார் என்று கூறுவது, இந்த வரலாறு மதிமாறனுக்குத் தெரியாததனால் ஏற்பட்ட அறியாமையா? இல்லை தெரிந்தும் படிப்பவனுக்கு எதுவும் தெரியாது என்ற மமதையா?’
என்று மிக ஆராய்ச்சியோடு பதில் தருகிறார்.
மதிமாறனுக்கு அந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்ன? சேற்றை வாரி வீச வேண்டும். அவ்வளவுதான். நம்முடைய கேள்வி என்னவென்றால் பார்ப்பனருக்குப் பிறந்ததினால்தான் திருவள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் இவ்வளவு அறிவு என்று பாரதி எங்கே கூறுகிறார்? இதை படிக்கும் வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
பார்ப்பன ஆணுக்கும் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் பிறந்ததால்தான் திருவள்ளுவர், ஒளவையார் போன்றோர் அறிவு பெற்றார்கள் என்பது பாரதியின் கருத்தாக (உண்மையில் அப்படியில்லை) மதிமாறன் முன்வைக்கும் வாதம். அதுமட்டுமல்லாமல் கீழ்க்கண்டவாறு மதிமாறன் சொல்கிறார் :
‘…இந்தப் புரட்சிகரமான பொய் முயற்சியில், பகவன் என்ற பிராமணன், ஆதி என்ற பறைச்சி என்றுதான் சொல்கிறார். பகவன் என்ற ஆணை தாழ்த்தப்பட்டவராகவும், ஆதி என்ற பெண்ணைப் பார்ப்பனராகவும் கற்பனை செய்து பார்ப்பதற்குக்கூட பாரதிக்குத் துணிச்சல் இல்லை’ (‘பாரதிய ஜனதா பார்ட்டி’, பக்.101).
மதிமாறனின் கருத்தாக நாம் இப்படி இதைப் புரிந்துகொள்ளலாம். தாழ்த்தப்பட்ட ஆணுக்கும், பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறந்ததால் திருவள்ளுவர், ஒளவையார் போன்றோர் அறிவு பெற்றார்கள். இப்படி பாரதி சொல்லவில்லையே ஏன்? இதுதான் மதிமாறனின் கேள்வி.
அந்தக் காலகட்டத்தில் இந்த மரபுவழிச் செய்தியை யாரும் மதிமாறன் போல சாதியுடன் முடிச்சுப் போட்டு பார்க்கவில்லை. பிராமணனுக்குப் பிறந்ததால்தான் திருவள்ளுவருக்கு அறிவு இருந்தது என்பது மாதிரியான கேனத்தனமான எண்ணம் உடையவர்களாக அப்போது யாரும் இல்லை. அதனாலேயே அதற்கு எதிரிடையாக யாரும் சிந்திக்கவில்லை. பாரதியும் சிந்திக்கவில்லை. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சென்னை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்துமூவர் திருவிழா வருடா வருடம் நடக்கிறது. அதில் நாயன்மார்களுக்கு இணையாக திருவள்ளுவரையும் வைத்து அவரையும் ஒரு நாயன்மாராக – தெய்வத்திருவுருவாக – திருவள்ளுவ நாயனாராக இன்றும் வழிபட்டு வருகின்றனர் தமிழக மக்கள். திருவள்ளுவரை குறிப்பிடும்பொழுது எல்லோரும் வழிபடக்கூடிய நாயன்மார்களுக்கு இணையாக திருவள்ளுவரை வைத்து பாரதி ‘திருவள்ளுவ நாயனார்’ என்றே குறிப்பிடுகிறார் தம் கட்டுரைகளில். வள்ளுவரை பல இடங்களில் குறிப்பிடுகிற பாரதி சிறப்பான அடைமொழி கொடுத்தே குறிப்பிடுகிறார் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். ஏனென்றால் திருவள்ளுவரின் அறிவை சாதியுடன் முடிச்சுப் போட்டு பார்க்கிற வக்கிர எண்ணம் பாரதிக்கு இல்லை.
எனக்கு ஒரு கேள்வி இங்கு எழுகிறது.
பகவன் என்ற ஆணை தாழ்த்தப் பட்டவராகவும், ஆதி என்ற பெண்ணைப் பார்ப்பனராகவும் கற்பனை செய்து பார்த்தாலும் கூட -‘பார்ப்பனர்களுக்கும் – தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வரலாற்று ரீதியான உறவை கற்பிக்கும் முயற்சி’ தான் என்று மதிமாறன்கேட்ட அதே கேள்வி எழாதா? இந்த கேள்வி எழுந்தால் மதிமாறன் என்ன பதில் சொல்வார்? பார்ப்பனத்திக்குப் பிறந்ததினால்தான் திருவள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் இவ்வளவு அறிவு என்று கேள்வி எழுந்தால் மதிமாறன் என்ன பதில் சொல்வார்? மரபுவழிச் செய்தியில் (மதிமாறன் புரிந்துகொள்கிற கருத்தாக) இருந்தாலும் சரி, மதிமாறன் சொல்கிற செய்தியாக இருந்தாலும் சரி; இரண்டிலும் அறிவு ஏற்படுவது ஆணினுடைய வித்தினால்தான்.
பார்ப்பன ஆண் – தாழ்த்தப்பட்ட பெண் – அறிவு
தாழ்த்தப்பட்ட ஆண் – பார்ப்பன பெண் – அறிவு
உண்மையிலேயே மதிமாறனின் புரிதல் இதுதான். ‘ஆணினுடைய வித்தினால் மட்டுமே தான் அறிவு ஏற்படுகிறது’ – இதைத் தான் அவர் சொல்லியிருக்கிறார்.
மதிமாறனின் இந்த புரிதலை, இன்றைக்கு மிக நுட்பமாகவும் சிறப்பாகவும் வளர்ந்து விட்ட மரபணு அறிவியலின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால், அது முற்றிலும் முட்டாள்தனமானது என்பது தெரிய வரும்.
சரி, அறிவியல் தான் தெரியாது என்றாலும், தன்னுடைய ‘பொதுப்புத்தியை’ வைத்து இப்படிப்பட்ட ஒரு கருத்தை உருவாக்கிய மதிமாறனின் மனநிலை எப்படிப் பட்டது? பெண்ணியவாதிகள் மட்டுமல்ல, வாசகர்கள் அனைவரும் கூட, கட்டாயம் இது பற்றி சிந்திக்க வேண்டும்.
(தொடரும்)
பாரதி: மரபும் திரிபும் – 3
May 2, 2012
- ம வெங்கடேசன்
பாரதி: மரபும் திரிபும் – பாகம் 1 | பாகம் 2
(தொடர்ச்சி…)
மதிமாறனைப் பார்த்துச் சிரிக்கும் நீதிக்கட்சித் தலைவர்கள்!
நீதிக்கட்சி அரசு பொறுப்பேற்றவுடன் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்தது என்பதை விளக்குகிறார் மதிமாறன். (பக்.72-73)
அதற்கு ஆதாரமாக திராவிடர் கழக வெளியீடான முனைவர் பு.ராசதுரை எழுதிய ‘நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலைக் காட்டுகிறார்.
அந்த நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது.
மதிமாறன் எடுத்துக்காட்டியுள்ள பகுதிகளில், ‘இச்செய்திகள் 11.08.1920 நாளிட்ட 1934-ஆம் எண் ஆணையில் காணப்பெறுவன’ என்று இருக்கிறது. அதாவது 1920-இல் நீதிக்கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த நன்மைகள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மதிமாறன் எடுத்துக்காட்டுகிறார்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
1919-ஆம் ஆண்டைய மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டப்படி அமைந்த அரசியல் அமைப்பு இரட்டை ஆட்சி. இச்சட்டம் இயற்றப்பட்டபின் சென்னை மாநிலச் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடந்தது 30.11.1920.
நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை பொறுப்பை ஏற்றது 17-12-1920. முதல் சட்டமன்றக் கூட்டம் 1921 ஜனவரி 12-ஆம்நாள் நடைபெற்றது.
முதல் சட்டமன்றக் கூட்டமே 1921-இலேதான் நடைபெற்றது என்கிறபோது 1920-இல் நீதிக்கட்சி எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்து இருக்க முடியும்?
அடுத்து, நீதிக்கட்சி செய்ததாகக் குறிப்பிடுவது 16-12-1921 நாளிட்ட 2815 எண் ஆணையிலுள்ள செய்திகள். இதற்கும் நீதிக்கட்சிக்கும் எந்தவிதச் சம்பந்தமுமே இல்லை. ஏனென்றால் அது பிரிட்டிஷ் ஆட்சி கொண்டுவந்த திட்டமாகும். 1902-இல் தரிசு நிலங்களை டி.சி.நிலங்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்படை செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் அளித்து ஆணை பிறப்பித்தது பிரிட்டிஷ் ஆட்சி. அதனுடைய தொடர்ச்சிதான் மேற்கண்ட ஆணைகள்.
தாழ்த்தப்பட்டோருக்கு நீதிக்கட்சி தொண்டு செய்தது என்று சொன்னால் இறந்துபோன நீதிக்கட்சி ஆட்சியாளர்களே மதிமாறனின் கனவில் தோன்றி அவரைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பார்கள்.
நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏராளமான நன்மை செய்தது என்று சொல்லும் மதிமாறனின் மழுங்கிய மூளையில் ஓங்கி குத்துவிடுகிறார் ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளரும் தாழ்த்தப்பட்டவர்களின் புகழ்பெற்ற தலைவருமான எம்.சி.ராஜா (1883-1945).
நீதிக்கட்சி குறித்து எம்.சி.ராஜா (1927-இல்) எழுதுகிறார்:
‘‘இப்போது அதிகாரத்திலிருக்கிற கட்சி நம்முடைய தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பல நன்மைகளைச் செய்தது என்று நான் கேள்விப்பட்ட போது வியப்பில் ஆழ்ந்து போனேன். ஆதிதிராவிடர்களின் செலவிற்காகச் சில மானியங்களையும் ஒதுக்குகின்றது என்று சில அரசியல்வாதிகள் என்னிடம் கூறினர்.
….இதே சூழ்ச்சிக் கொள்கையை மக்கள் முன் வைத்துத்தான் கபடநாடகமாடி நீதிக்கட்சிக்காரகள் ஆட்சிக்கு வந்தனர். நமக்காக ஒதுக்கப்பட்ட தொகை, நம் நலனுக்காகையாலும் முறை, துறை என்று காணப்படும் வரவுசெலவுப் புள்ளி விபரங்கள் யாவும் உண்மையானவை அல்ல; பொய்யே. மேலும் உண்மையாகக் கூறப்போனால், ‘ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்’ ஆட்சியாளரிடம் கேட்ட செலவுப் புள்ளிகளைத்தான் நமக்காகச் செலவிடப்படுவதாய் வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையில் அந்தப் புள்ளி விவரப்படி இவர்கள் நமக்குச் செலவிடவில்லை.
…..1921-22ஆம் ஆண்டில் 6.47 லட்ச ரூபாய் செலவிட உத்தேசித்து, தொழிலாளர் நலத்துறையும், மற்ற துறைகளும் கேட்டன. இந்த வேண்டுகோள் சட்டமன்றத்திற்கு வந்தது. இச்சட்டமன்றம் 6.47 லட்சம் மானியம் கோரியதை ஒரு லட்சமாகக் குறைத்தது.
…..தற்போதுள்ள நாட்டாண்மைக் கழகத் துறைகளில் ஆதிதிராவிடர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் இத்திட்டம் கூட இன்று ஆட்சிபீடத்தில் இருக்கும் அமைச்சரவையால் நமக்கு வழங்கப்படவில்லை. அதற்கு முன்பே வேறுஒருவரால் வழங்கப்பட்ட ஒன்றாகும். இவர்கள் ஒரேஒரு இடத்தைக்கூட நமக்குப் புதிதாக ஒதுக்கவில்லை.
……திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் நம் பிரதிநிதி இறந்தபோதும், செங்கற்பட்டிலும், கடலூரிலும் வட்டக் கழக உறுப்பினர்கள் பதவி இழந்தபோதும் நமக்கே உரித்தான இவ்விடங்கள் சாதி இந்துக்களால் மீண்டும் நிரப்பப்பட்டன.
…..’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்.
…..1923-ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் ஆதிதிராவிடப் பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளங்களை அதிகரிக்க வேண்டுமென்று நான் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். அன்று கல்வி அமைச்சராக இருந்தவர் ஒரு சாதி இந்து. அவர் ‘ஏழைமை என்பது ஆதிதிராவிடருக்கு மட்டும்தான் உள்ள தனிச்சொத்தல்ல. மற்ற வகுப்பாரிலும் ஏழைகள் இருக்கின்றனர்’ என்று கூறி என் தீர்மானத்தை எதிர்த்தார்.’’
(நூல்: ஒடுக்கப்பட்ட இந்துக்கள்)
இப்படி மதிமாறனின் மூளையைக் குத்திக்கொண்டே போகிறார் எம்.சி.ராஜா. ‘நீதிக்கட்சியே தாழ்த்தப்பட்டர்களுக்கு நன்மை செய்தது’ என்று பூக்களால் மூடப்பட்ட பாறாங்கல்லைத் தூக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் தலையில் போடுகிறார் மதிமாறன்.
“தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றிய நீதிக்கட்சிக்காரர்களைத்தான் தேசத்துரோகிகள் என்கிறார் நம் வரகவி” என்று விமர்சனம் வைக்கும் மதிமாறனுக்கு எம்.சி.ராஜாவின் விமர்சனத்தையே பதிலடியாக நாம் கொடுத்திருக்கிறோம்.
ஆனால் இதில் ஒன்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாரதி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடியதால்(?) நீதிக்கட்சிக்காரர்களை விமர்சிக்கவில்லை. நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்– ஆதரவாக இருந்ததினால்– பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்– மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார்.
(நீதிக்கட்சி இருந்த கடைசி காலக்கட்டம்வரை ஏகாதிபத்தியத்திற்கு– பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவே இருந்தது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.)
பாரதி மட்டுமல்ல அன்று தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைவரும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்த நீதிக்கட்சியை எதிர்த்தனர்.
பிராமணர்-பிராமணரல்லாதார் அரசியல் பிரச்சினை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக ஆகிவிடக்கூடாது எனும் கருத்துக் கொண்ட காங்கிரசில் இருந்த பிராமணரல்லாத தலைவர்கள் நீதிக்கட்சியை எதிர்க்க காங்கிரசிற்குள்ளேயே ஒரு தனி அமைப்பை நிறுவினார்கள். இதற்கு ‘மெட்ராஸ் பிரசிடென்சி அசோசியேஷன்’ என்ற ‘சென்னை மாகாணச் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை 1917-இல் நிறுவினார்கள்.
திவான் பகதூர் கேசவப்பிள்ளை தலைவராகவும், லாட் கோவிந்ததாஸ், சல்லா குருசாமிச் செட்டியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர், நாகை பக்கிரிசாமிப் பிள்ளை, சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சை ஸ்ரீநிவாசப் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் உதவித் தலைவர்களாவும் தெரிந்தெடுக்கப்பட்டனர். அமைச்சராக தி.வி.கோபால சாமி முதலியாரும், குருசாமி நாயுடுவும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், சர்க்கரைச் செட்டியாரும், திரு.வி.கவும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது, காங்கிரசில் இருக்கும்வரை ஈவெராவும் நீதிக்கட்சியை எதிர்த்தார் என்பதுதான். திரு.வி.க.வும் நீதிக்கட்சி நடத்தும் கூட்டங்களுக்குச் சென்று நீதிக்கட்சிக்காரர்களை கேள்வி கேட்பார். கூட்டம் கலவரத்தில் முடியும். இப்படியும் நீதிக்கட்சிக்காரர்களை கடுமையாக எதிர்த்தனர்- அன்றைய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்துப் போராடியவர்கள்.
இந்தச் சென்னை மாகாணச் சங்கம் மிகக் கடுமையாக நீதிக்கட்சியை எதிர்த்தது. பிராமணரல்லாதார் பிரச்சினைகளில் அக்கறை கொண்ட வ.உ.சி.யும் நீதிக்கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.
‘‘பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினையில் வ.உ.சியின் நிலைப்பாடு பற்றி விடுதலைப் போராட்ட வீரரும் ஆய்வாளருமான ம.பொ.சிவஞானம் கூறியுள்ள கருத்து கவனத்திற்குரியது.
‘‘நீதிக்கட்சி வ.உ.சியை இணைத்துக்கொள்ள முயன்றது. சுயராஜ்யத்தைக் குறிக்கோளாகக் கொண்ட வ.உ.சி. சாதி வேற்றுமைகளை வளர்த்த நீதிக்கட்சியில் சேர மறுத்துவிட்டார். பிராமணரல்லாதவர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதில் அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். பல துறைகளில் பெரும்பான்மையான பிராமணரல்லாதார் பின்தங்கியிருந்ததைப் பற்றி அவர் பெரிதும் வருத்தமுற்றிருந்தார். தமது ஆழ்ந்த வருத்தத்தை தம்முடைய பேச்சுகளில் வெளியிட்டுள்ளார். ஆனால் அதற்காக பிராமணர்-பிராமணரல்லாதார் சாதிவேற்றுமைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.’’
(நூல்: வ.உ.சிதம்பரம்பிள்ளை, பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்)
ஆகவே பாரதி மட்டும் நீதிக்கட்சியை எதிர்க்கவில்லை. தேசிய விடுதலைப் போராட்டம் இதனால் பின்தங்கி விடுமோ என்ற ஆதங்கத்தில் அன்று போராட்ட வீரர்கள் அனைவரும் எதிர்த்தனர்.
பாரதி வெறும் வெறுப்பியல் காரணமாக நீதிக்கட்சியை விமர்சிக்கவில்லை. பிராமணரல்லாதவர்கள் எல்லா நிலைகளிலும் முன்னேற வேண்டும் என்று நினைத்தவன் அவன். ஆகவேதான் நீதிக்கட்சிக்காரர்கள் மந்திரிகளாக ஆனவுடன் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் பாரதி.
‘‘பிராமணரில்லாமல் மற்றவர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டது எனக்கு ஸந்தோஷந்தான். தாங்களே ஐரோப்பியக் கல்விக்குப் பிறப்புரிமை கொண்டோரென்றும், ஆதலால் ஐரோப்பியக் கல்வியில் தாம் பெறக்கூடிய தேர்ச்சி மற்ற ஜாதியாரால் எய்தவே முடியாதென்றும், ஆதலால் உயர்ந்த ஸர்க்கார் ஸ்தானங்களெல்லாம் தங்களுக்கே கிடைக்குமென்றும் சென்னை மாகாணத்து பிராமணரில் சிலர் மிகவும் கர்வம் பாராட்டி வருகிறார்கள். அவர்களுடைய கர்வத்தைத் தீர்க்க இது நல்ல மருந்தாகி வந்தது.’’
(சுதேசமித்திரன்: 24-12-1920)
ஆகவே பாரதியை வெறும் நீதிக்கட்சி எதிர்ப்பாளர் என்று குறுக்கிவிட முடியாது. பிராமணரல்லாத மந்திரி சபையைப் பாராட்டியவன் பாரதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நீதிக்கட்சிக்காரர்களின் ‘பஞ்சம பாசம்’ எப்படிப்பட்டது என்பதையும் உணர்ந்தவர் பாரதி.
பாரதி எழுதுகிறார்:
‘‘சில தினங்களின் முன்பு அமலாபுரத்தில் பஞ்சமர்களின் பிரதிநிதிக் கூட்டமொன்று நம் மாகாணத்துப் புதிய பிராமணரல்லாத மந்திரிகளை ஸந்தித்தபோது அம்மந்திரிகளில் ஒருவராகிய ஸ்ரீமான் ராமராயனிங்கார் மிகவும் ரஸமாகப் பேசியிருக்கிறார். இதுவரை பிராமணரல்லாத வகுப்பினர் பஞ்சமர்களிடம் தக்கபடி அனுதாபம் செலுத்தாமல் இருந்துவரும் காரணம் பிராமணர்களுக்கு மன வருத்தமுண்டாகுமென்ற பயத்தைத் தவிர வேறில்லையென்றும், இப்போது பிராமணரல்லாதாரில் மேற்குலத்தார் பிராமணர்களின் ஆதிக்கத்தை உதறி எறிந்து விட்டபடியால், இனிமேல் பிராமணரல்லாதார் பஞ்சமர்களை மிகவும் ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்களென்றும் இந்த மந்திரி சொன்னார். மேலும், இனிமேல் பிராமணரல்லாதோரில் மேற்குலத்தார் பஞ்சமர்களைப் பரிபூர்ண ஸமத்துவத்துடனும் சொந்த ஸகோதரர் போலவும் நடத்த முற்றிலும் விருப்பத்தோடிருக்கிறார்கள் என்றும் இவர் சொன்னார்.
இங்ஙனம் இவர் பிராமணரல்லாதோரும், பஞ்சமரல்லாதோருமாகிய மற்ற ஹிந்துக்கள் அனைவரும் இப்போதே பஞ்சமர்களை முழுதும் ஸமானமாக நடத்த உடம்படுகிறார்களென்று எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு உறுதி சொல்லுகிறாரென்பது நமக்கு விளங்கவில்லை.
ஏற்கனவே ஹிந்துக்களில் பிராமணர் முதலிய எல்லா வகுப்புகளிலும் அங்கங்கே ஜாதிக் கட்டுக்களை உதறிவிட்டு எல்லா ஜாதியாரையும் ஸமானமாக நடத்த வருகிறார்களென்பது மெய்யே. பொதுப்படையாக எல்லா வகுப்புகளிலும் ஜாதிக்கட்டுக்கள் தளர்ச்சி பெற்று ஸமத்துவக் கொள்கை ஓங்கிக் கொண்டு வருகிறதென்பது மெய்யே.
ஆசாரத் திருத்த முயற்சி ஆரம்ப முதல் நீதிபதி ரானடே முதலிய பிராணர்களாலே அதிக சிரத்தையுடன் போற்றப்பட்டு வருகிறதென்பதை நாம் மறக்ககூடாது. ஆனால், இவற்றைக்கொண்டு, இன்றைக்கே பிராமணரல்லாதாரில் மேல் வகுப்பினர் பஞ்சமர்களோடு ஸமானமாக உறவாடத் தயாராக இருக்கிறார்களென்று சொல்லுதல் அதிசயோக்தி.
எனிலும் ஸ்ரீ ராமராயனிங்கார் தம்மளவிலேனும் தாம் சொல்லியதை மெய்ப்படுத்திக் காட்டுவாரென்று நம்புகிறேன்.
இவ்விஷயத்தில் இவர் மனத்தோடு பேசினாரா அல்லது வெறுமே வெளிப்பேச்சுத்தானா என்பதைப் பஞ்சமத் திராவிட நண்பர்கள் பரிசோதனை செய்து பார்க்கும்படி வேண்டுகிறேன்.’’
(சுதேசமித்திரன் 8-2-1921)
பாரதியின் இந்த விமர்சனம் தொலைநோக்குப் பார்வை கொண்டது. ஸ்ரீ ராமராயனிங்கார் தம்மளவிலேனும் தாம் சொல்லியதை மெய்ப்படுத்திக் காட்டுவாரென்று நம்புகிறேன் என்ற பாரதியின் நம்பிக்கையை சம்மட்டியால் அடித்துத் தூள்தூளாக்கியவர் இவர்தான்.
‘‘பொதுச்சாலைகள், பொதுச் சத்திரங்கள், கிணறுகள், பள்ளிகள் முதலியவற்றை மக்கள் சாதி மதவேறுபாடின்றிப் பயன்படுத்துவதில் எவ்விதத் தடை செய்தாலும் தண்டனை அளிப்பதற்கான சட்டத்தை வெகுவிரைவில் கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு இக்கவுன்சில் சிபாரிசு செய்கிறது’’
என்ற தீர்மானத்திற்கு ராமராயனிங்கார் சொன்ன பதிலே போதும்.
‘‘பொதுச்சாலைகள் முதலியவற்றை இந்த மக்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதைத் தண்டிக்கப் புதிய சட்டம் நிறைவேற்றப்படுவது தேவையாகும் என்று தோன்றவில்லை. உண்மையான தடை, சமூகக் கொடுமையே. இது சமுதாய சீர்திருத்தத்தினால் உடைக்கப்பட வேண்டும்.’’
இதுதான் நீதிக்கட்சி முதலமைச்சர் ராமராயனிங்காரின் பரிகாரம். அரசியல் தளத்தில் பிரிட்டிஷாருக்கு ஆதரவளித்தவர்கள், சமூகத்தளத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே இருந்தார்கள். நீதிக்கட்சிக்காரர்களின் ‘பஞ்சம பாசம்’ வெளிப்பேச்சுதான் என்பதை பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். தங்களுடைய செல்வாக்கு மக்களிடையே குறைந்துவருவதைப் பார்த்து அவர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதாவது பார்ப்பனர்களையும் நீதிக்கட்சியில் சேர்த்துக்கொள்வது என்பதுதான் அது. இதுவரை எந்தப் பார்ப்பனரை எதிராக நிறுத்தி பிராமணரல்லாதவர்களிடையே பிரசாரம் செய்தார்களோ அதே பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்ப்பதற்குத் தீர்மானம் போட்டார்கள். பார்ப்பனர்கள் எங்களை நீதிக்கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை. ஆனாலும் நீதிக்கட்சிக்காரர்கள் அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள்.
இவர்களைத்தான் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடியவர்கள்’ என்று மதிமாறன் வாய்கூசாமல் பொய்யை அள்ளிவிடுகிறார். என்ன செய்ய தாழ்த்தப்பட்டோரின் தன்னகரில்லாத தலைவர் எம்.சி.ராஜா இல்லையே இப்போது!
(தொடரும்..)
Subscribe to:
Posts (Atom)
ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)
Srimad-Bhagavatam 1 Srimad-Bhagavatam 2 Srimad-Bhagavatam 3 Srimad-Bhagavatam 4 Srimad-Bhagavatam 5 Srimad-Bhagavatam 6 Srimad...
-
குர்ஆனின்படி விபச்சாரம் என்பது என்ன? // TUESDAY, JUNE 06, 2017 அடிமைப் பெண்கள்- இஸ்லாம் RAJENDRACHOLAN NARAYANASIVAM //விபச்சாரம் என...
-
ஈவேரா-வின் தோள்சீலை போராட்டமும் , அந்நிய ஆபிரகாமிய நச்சு சக்திகளின் மதமாற்ற செயல்திட்டமும் தன் முன்னோர்களை இழிவானர்கள்னு சொல்லி, மதம்மாத்த...
-
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பா...